பொதுக்கூட்டம் என்ற ஒன்றை நாட்டிற்குச் சொல்லிக் கொடுத்ததே தமிழ்நாடுதான்தமிழ்நாட்டில் அதை நடத்திய பெருமை,
தந்தை பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் சாரும்
திருச்சி, ஜூலை 1 பொதுக்கூட்டம் என்ற ஒன்றை நாட் டிற்குச் சொல்லிக் கொடுத்ததே தமிழ்நாடுதான். தமிழ் நாட்டில் அதை நடத்திய பெருமை, தந்தை பெரியாரை யும், திராவிட இயக்கத்தையும் சாரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
திருச்சியில் கடந்த 12.6.2022 அன்று திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையின் சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை நடத்தும் கழகக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, தலைமையேற்று இருக்கக்கூடிய கழகப் பிரச்சார செயலாளர், கொள்கைச் செல்வம், சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் அருமைத்தோழர் மானமிகு அருள்மொழி அவர்களே,
வரவேற்புரையாற்றிய லால்குடி மாவட்டக் கழக மகளிர் பாசறைத் தலைவர் அருமைத் தோழர் குழந்தை தெரசாள் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் சிறப்பாகப் பணியாற்றுகின்ற கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அவர்களே, கழக மாநில மகளிரணி செயலாளர் பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களே, கழக மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை அவர்களே, கழக மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் மதிவதனி அவர்களே, வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களே,
எனக்கு முன்பு சிறப்பாக உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
திருச்சி மண்டல மகளிரணி செயலாளர் கிரேசி அவர்களே, லால்குடி மகளிரணி தலைவர் மானமிகு அம்மா அரங்கநாயகி அவர்களே, திருச்சி மாவட்ட மகளிரணி தலைவர் தோழர் ரெஜினா அவர்களே, திருச்சி மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி அவர்களே, மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் வசந்தி அவர்களே, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கங்காதேவி அவர்களே, லால்குடி மாவட்ட மகளிரணி செயலாளர் பூங்கோதை அவர்களே,இணைப்புரை நிகழ்த்திக் கொண்டிருக்கக்கூடிய திருச்சி மாவட்ட மகளிரணி தலைவர் அம்பிகா அவர்களே,திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தோழர் ஆரோக் கியராஜ் அவர்களே,
லால்குடி மாவட்டத் தலைவர் செயல்வீரர், எப்போதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இடையறாது உதவிக் கொண்டிருக்கக்கூடிய வள்ளல் தோழர் வால்டர் அவர்களே, திருச்சி மாவட்ட செயலாளர் தோழர் செயல்வீரர் மோகன்தாஸ் அவர்களே, மாநில தொழி லாளரணி ஆற்றல்மிகு செயலாளர் தோழர் மு.சேகர் அவர்களே, மண்டல செயலாளர் செயல்வீரர் ஆல்பர்ட் அவர்களே,
திருச்சி மாநகராட்சியின் 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கொள்கை வீரர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அருமைத் தோழர் சுரேஷ் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் லால்குடி மாவட்ட மகளிரணி தோழர்களான இருதயா, அம்மணி, அமுதா, புனிதா, நிர்மலா, விஜயா, கவுரி, வேல்தாய், புனிதவல்லி, இசபெல்லா, முத்து புவனேசுவரி, சிவ.ரேணுகா, யாழினி, சித்ரா, ரேவதி, தவமணி, பிரியா, சுப்புலட்சுமி ஆகிய தோழர்களே,
எந்த ஆணுக்கும் பின்தங்கியவர்கள் அல்ல!
அருமையான ஒரு நல்ல கலை நிகழ்ச்சியை, உடல் ரீதியாகவும் நாங்கள் எந்த ஆணுக்கும் பின்தங்கியவர்கள் அல்ல - எங்களாலும் சிலம்பத்தை லாவகமாகச் சுழற்ற முடியும் முடியும் என்பதை அழகாகக் காட்டிய ஓசூர் நன்மதி அவர்களே,
புரட்சிக்கவிஞர் அவர்களுடைய சிறப்பான பாட லான, தூங்கும் புலியை பறைகொண்டு எழுப்பினோம்-
தூங்கும் தமிழர்களை தமிழ் கொண்டு எழுப்புவோம் என்ற அற்புதமான பாடலை, திரைப்படத்தில் நடித்த நடிகர்களைவிட, அருமையாக இங்கே நடனத்தை நடத்திய எங்கள் கொள்கைச் செல்வம் திருச்சி யாழினி அவர்களே,
அருமைப் பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர் களே, ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் வெற்றி பெற்றார் என்பதற்கு அடையாளம்
இந்தக் கூட்டம் ஒரு சிறப்புமிகுந்த திருச்சி வர லாற்றிலேயே, கழக வரலாற்றியே மிக முக்கியமான கூட்டமாகும்.
இந்தக் கூட்டத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், மகளிரே முன்னின்று பொறுப்பேற்று நடத்துகின்ற, வரலாறு படைக்கின்ற ஓர் அருமையான கூட்டமாகும்.
ஆண்களாக இருக்கக்கூடிய எங்களைப் போன்ற வர்களை அவர்கள் அழைத்தது என்பது அவர்களுடைய கருணை உள்ளம் - அவர்களுடைய நன்றி உணர்ச்சி.
அதற்கு நாங்கள் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
இதுதான் தந்தை பெரியார் வெற்றி பெற்றார் என்பதற்கு அடையாளம்.
1974 ஜனவரி 6 ஆம் தேதி
திராவிடர் கழகத் தலைவராக
அன்னை மணியம்மையார் பொறுப்பேற்பு
தந்தை பெரியார் அவர்களுடைய மறைவிற்குப் பின், இந்தியாவினுடைய வரலாற்றில், எந்த ஒரு சமுதாய புரட்சி இயக்கத்திற்காக - ஒரு பெண் தலைமை தாங்கக்கூடிய அளவிற்குப் பக்குவப் படுத்தப்பட்டு, வீரப் பெண்மணியாக, இதே திருச்சியில், இதே பெரியார் மாளிகையில்தான், 1974 ஜனவரி 6 ஆம் தேதியன்று அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
எனவே, மகளிருக்குத் தலைமை தாங்கக்கூடிய ஆற்றல் உண்டு.
1929, இன்றைக்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு - இங்கே காவல்துறை அதிகாரிகள் ஏராளமானோர் தங்களுடைய கடமையைச் செய்கிறார்கள். இங்கே நம் முடைய துணைத் தலைவர் அவர்கள்கூட சொன் னார்கள் -
சில நேரங்களில், வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்ற அதிகமான அவர்களுடைய பொறுப்புணர்ச்சிக்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஆனாலும், விளைவுகள் எப்படிப்பட்டது என்பது தான் மிக முக்கியமானது. அந்த வகையிலே பார்க்கும் பொழுது, இன்றைக்குக் காவல்துறையில் பெண் அதிகாரிகளைப் பார்க்கிறோம்.
நாங்கள் நீண்ட காலத்திற்கு முன்பு, கலைஞரை அழைத்து மாநில மாநாட்டினை இங்கே இரண்டு நாள்கள் நடத்தினோம். அப்பொழுது திடலாக இருந்தது; இப்பொழுது மாறியிருக்கிறது. வானொலி திடலுக்குப் பக்கத்தில், முன்னால் இருக்கக்கூடிய பகுதி.
பெரும்படை முத்தையா அவர்களுடைய சிலை இருக்கக்கூடிய பகுதியில், பெரிய அளவிற்கு நடந்தது.
அப்பொழுது ஒழுங்குபடுத்த காவல்துறை அதி காரியாக தலைமைப் பொறுப்பில் இருந்தவர் திலகவதி அய்.பி.எஸ். அவர்கள்.
எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால், இந்த இயக்கம் பாடுபட்டதினால், தந்தை பெரியாருடைய அந்தக் கொள்கை செயல்படுத்தப்பட்டது.
உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்று
உலகில் எங்கும் இல்லாத கொடுமை
1929 இல் செங்கல்பட்டு சுயமரியாதை மாகாண முதல் மாநாட்டில், போடப்பட்ட பல தீர்மானங்களில், ஆண் களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ, அந்த உரிமைகள் எல்லாம் பெண்களுக்கும் தரப்படவேண்டும்.சம உரிமை, சம வாய்ப்பு, சமத்துவம் வேண்டும்.
பிறவி பேதம் கூடாது என்று சொல்லுகிற நேரத்தில், பிறவி பேதம் என்றால், உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்று உலகில் எங்கும் இல்லாத கொடுமையான வரு ணாசிரம தர்மம் இருக்கிறதே, அது மட்டும் பிறவி பேதமல்ல.
அதைவிடக் கொடுமையான ஒரு பிறவி பேதம் என்றால்,
ஆணாகப் பிறந்தவன் உயர்ந்தவன்; பெண்ணாகப் பிறந்தவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள். பெண்களை எதற்கும் முன்னிலைப்படுத்தக் கூடாது; இப்படி பெண் களை ஒதுக்கி ஒதுக்கி வைத்த நேரத்தில்தான், தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் பெரிய அளவிற்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
உலகில் சரி பகுதி மக்கள் பெண்கள்
உலகில் சரி பகுதி மக்கள் பெண்கள்; சமூகத்தில் சரி பகுதி அவர்கள். 130 கோடி மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்றால், அதில் சரி பகுதி பெண்கள்.
உடலில் இரண்டு கைகளும் சரியாக இயங்க வேண்டாமா?
இரண்டு கால்களும் ஒழுங்காக செயல்பட வேண்டாமா?
இரண்டு கண்களுக்கும் சரியான பார்வை இருக்கவேண்டாமா?
இரண்டு காதுகளும் சரியாகப் பயன்படவேண்டாமா?
அது எவ்வளவு நியாயமோ - அதுபோலத்தான், சமூகத்தில் ஆண்களும் - பெண்களும் சமமானவர்கள். இப்போது முப்பாலும் இருக்கிறது; அது திருநங்கை யர்களாக இருந்தாலும் என்று விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகப்பெரிய அளவிற்கு இந்த இயக்கம் அந்தப் பணியை செய்கிறது.
குடும்பத்தில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பீர்கள்?
ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் படிப்பு கொடுக்க முடியும் என்றால், அந்தக் குடும்பத்தில் ஆண் பிள்ளை களும் இருக்கிறார்கள்; பெண் பிள்ளைகளும் இருக் கிறார்கள். யாருக்கு அந்த ஒரு இடத்தைக் கொடுப்பீர்கள் என்று பெரியாரிடம் கேட்கும்பொழுது அவர் சொன்னார்,
‘‘நான் ஆணுக்குக் கொடுக்கமாட்டேன்; பெண் ணுக்குத்தான் கொடுப்பேன். காரணம் என்ன வென்றால், ஆண் படித்தால், அது அவரோடு சரி; ஒரு பெண் படித்தால், பல பேர் படித்ததற்குச் சமம்; காரணம், அந்தப் பெண்தான் அந்தக் குழந்தைக்கு முதல் ஆசிரியர்’’ என்றார்.
ஆகவே, பெண்கள் படிக்கவேண்டும்; படித்த பெண்கள் உத்தியோகத்திற்கு வரவேண்டும். அதைவிட மிக முக்கியம், படிப்பறிவோடு அவர்கள் நின்றுவிடக் கூடாது; பகுத்தறிவைப் பெறவேண்டும்.
நிர்வாகத் துறையில் இருப்பவர்கள் படிப்பறி வையும், பகுத்தறிவையும் தாண்டி, பட்டறிவையும் அனுபவத் தோடு, எதை, எப்பொழுது, எப்படி சந்திப்பது என்று பார்க்கவேண்டும்.
இதை சொல்லுவதுதான் இந்த இயக்கம்.
நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல; நாங்கள் சொல்வது யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல.
அறிவியலின் வளர்ச்சி...
இந்த இடத்தில், மகளிரே கூட்டம் நடத்தவேண்டும்; இந்தக் கொள்கையை விளக்கவேண்டும் என்று நினைத்த நேரத்தில், கழகப் பொறுப்பாளர்களை வைத்துக்கொண்டு, மாவட்டக் கழகத் தலைவரை வைத்துக்கொண்டு பேசுகின்ற நேரத்தில், எந்த இடத்தில் கூட்டம் போடவேண்டும்? வீடுகள் நிறைய இருக்கின்ற இடத்தில் கூட்டம் போடவேண்டும். ஏனென்றால், கூட் டங்களுக்கு வருவதைவிட, அனைவரிடமும் கைப்பேசி இருக்கின்றது; அந்தக் கைபேசியின்மூலமாக கூட் டங்களை கேட்கின்ற வசதி இருப்பதால், உலகம் முழுவதும் உள்ளவர்கள் கேட்கின்றார்கள். நாங்கள் கூட்டம் முடிந்து மேடையை விட்டு கீழே இறங்குவதற்கு முன்பே, அமெரிக்காவில் இருந்து ஒரு நண்பர் நன்றாக பேசினீர்கள் என்கிறார். இன்னொரு நாட்டில் இருந்து ஒருவர் கூட்டம் அருமையாக இருந்தது; உங்கள் உரையை கேட்டேன் என்கிறார். தமிழ்நாட்டின் ஒரு மூலையில் நடைபெறும் கூட்டத்தை உலகெங்கும் உள் ளவர்கள் கேட்கின்ற அறிவியல் வசதி வளர்ந்திருப்பது தான் அதற்குக் காரணம்.
பொதுக்கூட்டம் என்ற ஒன்றை நாட்டிற்குச் சொல்லிக் கொடுத்ததே தமிழ்நாடுதான்!
பொதுக்கூட்டம் என்ற ஒன்றை நாட்டிற்குச் சொல்லிக் கொடுத்ததே தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் அதை நடத்திய பெருமை, தந்தை பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் சாரும்.
ஒரு பிரச்சினை என்றால், பொதுக்கூட்டத்தை நடத்தி, மக்களைக் கூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்து வதாகும்.
மகளிரே இந்தக் கூட்டத்தை நடத்தப் போகிறார்கள் என்றவுடன், கூட்டத்தை எங்கே நடத்தப் போகிறீர்கள்? என்று கேட்டேன்.
அவர்களும், சில பல இடங்களை சொன்னார்கள்.
அதில், இந்தத் தெருவும் ஒன்று. இந்தத் தெருவிற்குப் பெயர் என்னவென்று கேட்டேன், குறத் தெருவில் கூட்டம் நடத்தப் போகிறோம் என்று சொன்னார்கள்.
அதைக் கேட்டவுடன், எனக்குக் கொஞ்சம் ‘சுருக்‘கென்று இருந்தது.
நம்முடைய நாட்டில், ஜாதி முறை எந்த அளவிற்கு வேரூன்றி இருந்தது என்றால், ஒரு காலத்தில் குறவர்கள் என்றால் ஒதுக்கப்பட்டவர்கள் என்று இருந்தது.
‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய கொள்கை ஜாதியை ஒழிப்பதுதான்!
ஆனால், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி யினுடைய கொள்கை என்னவென்றால், ஜாதியை ஒழிப்பதுதான். நம்முடைய முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மிகச்சிறப்பாக அதனை செய்துகொண்டிருக்கிறார்.
பெரியார் நூற்றாண்டையொட்டி, அன்றைய முதல மைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களிடம், பல திட்டங்களை நாங்கள் கொடுத்தோம். அதில் ஒன்று, தமிழ்நாட்டில் உள்ள தெருக்களின் பெயர்களில் ஜாதி பின்னால் இருக்கிறது. அதை நீக்கவேண்டும் என்பதாகும்.
தந்தை பெரியார் 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டு சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில், ஒவ்வொரு தலைவர்களும் தானே முன்வந்து, சுயமரியாதை இயக்கத்திற்கு நிறுவன தலைவராக தந்தை பெரியார் இருந்தாலும், பெரியாருடைய பெருந்தன்மை, ஒரு இயக்கம் எப்படி கட்டப்படவேண்டும் என்பதற்கு அடையாளம், இவர் தலைவர் என்று அறிவிக்கவில்லை - இன்றைய திடீர் தலைவர்கள் இதைத் தெரிந்து கொண்டால் மிக நன்றாக இருக்கும்; பெரியார் அவர்கள், தன்னை துணைத் தலைவர் என்று போட்டுக் கொண் டார். டபிள்யூ.பி.ஏ.சவுந்தரபாண்டியன் அவர் களைத் தலைவராக நியமித்தார்.
தானாக முன்வந்து ஜாதிப் பட்டத்தைத்
துறந்த தலைவர்கள்
அவருடைய பெயர் டபிள்யூ.பி.ஏ.சவுந்தரபாண்டிய நாடார் என்பதாகும். அந்தக் காலகட்டத்தில் ஜாதி பின் னூட்டத்தை சேர்த்தால்தான் மரியாதைக்குரியவர் களாவர்.
தந்தை பெரியாரை, இராமசாமி நாயக்கர் என்றுதான் அழைத்தார்கள். அதேபோன்று, திரு.வி.கல்யாண சுந்தர முதலியார். அவரை முதலியார் என்றுதான் அழைத் தார்கள். டாக்டர் வரதராசுலு நாயுடு. வ.உ.சிதம்பரம் பிள்ளை என்று சொன்னார்கள்.
அதை அப்படியே மாற்றிக்காட்டினார் தந்தை பெரியார். செங்கற்பட்டு சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில், இந்தத் தலைவர்கள் தானாக முன்வந்து பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டத்தைத் துறந்தார்கள்.
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, பெரியாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடிய நேரத்தில், ஒரு தீர்மானமாகப் போட்டார். தெருக்களின் பெயர்களில் ஜாதிப் பின்னொட்டு இருக்கக்கூடாது; அதை எடுக்கவேண்டும் என்று.
ஒன்றிரண்டு சில நேரங்களில் சிக்கலாக இருக்கும்; அது விலக்குகளே தவிர, அது விதியாக முடியாது. ஆகவே, அதைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசிய மில்லை.
(தொடரும்)
No comments:
Post a Comment