அதுபோன்று திட்டமிட்டே நம்முடைய ஏடுகள் மறைக்கப்பட்டன; ஆய்வுகள் செய்கின்ற நேரத்தில் சில குறிப்புகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்!
சென்னை, ஜூலை 29 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொல்லுவார், தமிழர்களுடைய நூல்களை யெல்லாம் ஆடிப் பெருக்கு என்று சொல்லி, சிலவற்றை எரித்துவிட்டார்கள்; சிலவற்றை ஆற்றில் கரைத்து விட்டார்கள் என்று. அதுபோன்று திட்டமிட்டே நம்மு டைய ஏடுகள் மறைக்கப்பட்டன. ஆய்வுகள் செய்கின்ற நேரத்தில், சில குறிப்புகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள் என்றார் 60 ஆண்டுகால ‘விடுதலை ஆசிரியர் - திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘விடுதலை’யின் எதிர்நீச்சல் -
காணொலி சிறப்புக் கூட்டம்
கடந்த 25.7.2022 அன்று மாலை ‘விடுதலை’யின் எதிர்நீச்சல் என்ற தலைப்பில் காணொலிமூலம் நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
எங்களுடைய பாட்டன் நீதிக்கட்சிக்காரர்கள்!
அண்ணா அவர்கள் சொன்னார், ‘‘என்னுடைய வெற்றி என்பது 10 ஆண்டுகால வெற்றி என்று நீங்கள் நினைக்காதீர்கள். எங்களுடைய பாட்டன் நீதிக்கட்சிக்காரர்கள்’’ என்று. அதைச் சொல்லி அண்ணா அவர்கள் பெருமைப்பட்டார். 50 ஆண்டு காலம் எனக்கு முன்னால் வரலாறு உண்டு என்று சொன்னார்கள்; இன்றைக்கு 100 ஆண்டு காலம்.
அந்தத் திராவிடர் இயக்கத்தினுடைய மூன்று ஏடுகள் தொடங்கப்பட்டதே, அந்த ஏடுகள் தொடர்ந்து வெளி வந்திருந்தால், இன்றைய வரலாறு எப்படி ஆகி யிருக்கும்?
திராவிடர்களுடைய வரலாறு, உலகளாவிய நிலையில், மலைமேல் இருந்த விளக்கொளி போன்று பேரொளியாக இருந்திருக்கும்.
நம்முடைய குறைபாடுகளில் ஒரு தலைசிறந்த குறைபாடு - ஒரு சிறந்த ஆய்வு முறையில் நோக்கும் பொழுது, நம்முடைய ஆங்கில ஏடு நிறுத்தப்பட்டது. அது ஓர் அடிப்படையான குறைபாடு. ஆனால், தவிர்க்க முடியாததாக இருந்தது அன்றைய சூழ்நிலையில்.
அதுபோல, அன்றைக்கு நடந்த ‘திராவிடன்’ பத்திரிகையைத் தொடர முடியவில்லை.
இவை இரண்டும் சாதாரணமான பத்திரிகைகள் அல்ல.
கடும் உழைப்பினாலே வளருகிறது!
‘விடுதலை’ மட்டும் எதிர்நீச்சலில் வரவில்லை நண்பர்களே, நீதிக்கட்சி -
இன்றைக்கு ‘விடுதலை’க்கு நிதி - தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய, அவருடைய செல்வாக்கினாலே, அவருடைய மதிநுட்பத்தினாலே, அவருடைய பொக் கிஷம் போன்ற சிக்கனத்தினாலே, அது சிறப்பாக நடந்து, இன்றைக்குக் காலூன்றிக் கொண்டிருக்கிறது - நம் முடைய தோழர்களுடைய கட்டுப்பாடான - ஒரு ராணுவக் கட்டுப்பாடு போன்று இருக்கக்கூடிய கடும் உழைப்பினாலே வளருகிறது என்று ஒரு பக்கத்தில் இருந்தாலும்,
ஒரு நூறாண்டுக்கு முன்னால் போவோம் - மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒரு செய்தி.
ஜஸ்டிஸ் கட்சி - ஜஸ்டிஸ் என்று பத்திரிகைக்குப் பெயரிடுகிறார்கள். அந்தப் பெயரை வைத்தது டாக்டர் டி.எம். நாயர் அவர்கள்.
அதற்கு முன்னால் ஏடுகள், வார ஏடாக நடந்தன.
நான் பிராமின் என்று சொல்லி, ‘நான் பிராமின் லெட்டர்ஸ்’ - இன்றைக்கு ஒரு மாதிரிக்குக்கூட ஒரு பத்திரிகைகூட இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்.
எங்கெங்கோ தேடுகிறோம் - அதைப்பற்றி வந்த குறிப்பு கள் மற்ற பத்திரிகைகளில் இருந்து அந்தச் செய்திகளை எடுத்துக் கொடுக்க முடிகிறதே தவிர, ஓர் ஆவணக் காப்பகத்தில்கூட வைத்து அந்தப் பத்திரிகையைக் காப்பாற்ற முடியாத அளவிற்கு அது மறைக்கப்பட்டது.
சிலவற்றை எரித்துவிட்டார்கள்;
சிலவற்றை ஆற்றில் கரைத்துவிட்டார்கள்
அய்யா சொல்லுவார், தமிழர்களுடைய நூல்களை யெல்லாம் ஆடிப் பெருக்கு என்று சொல்லி, சிலவற்றை எரித்துவிட்டார்கள்; சிலவற்றை ஆற்றில் கரைத்து விட்டார்கள் என்று.
அதுபோன்று திட்டமிட்டே அந்த ஏடுகள் மறைக் கப்பட்டன. ஆய்வுகள் செய்கின்ற நேரத்தில், சில குறிப்பு களைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். அதனால்தான் சில செய்திகள் வரலாற்று ரீதியாக இருக்கவேண்டும் என்று சொல்வது மிக முக்கியமானது.
ஜஸ்டிஸ் பத்திரிகை
ஜஸ்டிஸ் பத்திரிகையை தொடங்குகிறார்கள். அப்படி தொடங்குகின்ற நேரத்தில், திட்டமிட்டு, அதை ஒரு கம்பெனியில் பதிவு செய்து, அதற்கு ஓர் ஆசிரியரைத் தேடுகிறார்கள்.
அப்படி தேடுகின்ற நேரத்தில், ‘பாட்ரியாட்' என்ற ஒரு பத்திரிகை நடந்துகொண்டிருந்தது. அந்தப் பத் திரிகை அலுவலகத்தை அப்படியே வாங்கி, இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சர்.பிட்டி.தியாக ராயரும், நாயரும் முடிவு செய்து, அதற்குரிய பணிகளை செய்கிறார்கள்.
அப்படி செய்கின்ற நேரத்தில், திடீரென்று பார்ப்பனர் கள், மற்றவர்கள் சாமர்த்தியமாக என்ன செய்தார்கள் தெரியுமா?
ஆரிய சூழ்ச்சி என்பது மிகச் சாதாரணமானதல்ல - எந்த இடம் பலகீனம் என்று கண்டுபிடித்து, அந்தப் பலகீனத்தைத் தெரிந்து, அவர்களைக் கிளப்பிவிட் டார்கள்.
‘இந்தியன் பேட்ரியாட்’ இதழின் ஆசிரியர் கே.கருணா கரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ‘இந்தியன் பேட்ரியாட்’ இதழை வாங்கி, அதற்கு ஜஸ்டிஸ் என்று பெயர் வைத்து, கருணாகரனுக்கு மாதச் சம்பளமாக ரூ.350-லிருந்து 400 ரூபாய் வரை அளிப்பது என்று பேசப்பட்டது.
டாக்டர் நாயர் அவர்களின் துணிச்சலை
நாம் பாராட்டியாகவேண்டும்!
‘ஜஸ்டிஸ்’ பத்திரிகை வெளிவரப் போகிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆறு நாள்களுக்கு முன்பு, இந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொள்ளவிருந்த ‘இந்தியன் பேட்ரியாட்’ இதழின் ஆசிரியர் கே.கருணாகரன் பின்வாங்கினார். ‘‘என்னால், ஆசிரியராகப் பொறுப்பேற்க முடியாது; என்னால் வர முடியாது’’ என்று சொல்லிவிட்டார்.
அந்தக் காலகட்டம், நீதிக்கட்சி ஆட்சியில்கூட இல்லை. தேர்தலில் போட்டிப் போடவேண்டிய கால கட்டம்.
உடனடியாக டாக்டர் நாயர் அவர்களின் துணிச்சலை நாம் பாராட்டியாகவேண்டும். இந்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
அவர் ஒரு மிகப்பெரிய இ.என்.டி. சர்ஜன்; பெரிய அறிவியல் மேதை - இங்கிலாந்தில் படித்தவர். சென்னை யில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
தியாகராயரும், டாக்டர் நாயரும் சண்டை போட்டு, பிறகு நண்பர்களானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அப்படிப்பட்ட நேரத்தில், டாக்டர் நாயர் அவர்கள், நானே ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கி றேன் என்று சொன்னார்.
நாயர் அவர்கள் வெறும் டாக்டர் மட்டுமல்ல - மிகப் பெரிய வாய்ப்பு பெற்றவர் என்பதற்கான அடையாளம் நிறைய உள்ளன.
அதில் முக்கியமாக உங்களுக்குச் சொல்லவேண்டு மானால், மூன்று பத்திரிகைகள் வந்தபொழுது, ஜஸ்டிஸ் என்று பத்திரிகைக்குப் பெயர் சூட்டியவர் டாக்டர் நாயர் அவர்கள்.
டாக்டர் க்ளோமென்ஸோ
ஜஸ்டிஸ் என்று சொல்லும்பொழுது, வீ வாண்ட் ஜஸ்டிஸ்.
காரணம் டாக்டர் நாயர் அவர்கள், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த டாக்டர் க்ளோமென்ஸோவிடம் மருத்துவப் பயிற்சியைப் பெற்றவர்.
டாக்டர் க்ளாமென்ஸோ ஜார்ஜஸ் பிரெஞ்சு நாட்டு பிரதமராக, அரசியல் மேதையாக, புரட்சி யாளராக இருந்த மிகப்பெரிய அளவிற்கு மிக முக்கியமானவர். (1841-1929).
1906 முதல் 1909 ஆம் ஆண்டுவரையில் பிரான்சின் பிரதமராக இருந்த காலத்தில், க்ளாமென்ஸோ செய்த காரியம் என்னவென்றால், அவர் பிரதமராக இருந்த காலத்தில், அரசு வேறு - மதம் வேறு என்று தனித்தனியாக இரண்டையும் பிரிக்க சட்டமியற்றியவர். 1917 இல் மீண்டும் பிரதமரானதும், முதல் மகா யுத்தத்தில் பிரான்சை வழிநடத்தியவர்.
செக்குலரிசம் என்று சொல்கிறார்கள் அல்லவா, அதற்குத் தத்துவமே அவர்தான்.
எனவே, அவரிடமிருந்து பயின்று, மிகப்பெரிய அளவிற்கு வந்தவர் நம்முடைய நாயர் அவர்கள்.
எனவேதான், முதல் இதழ் 12 பக்கங்களுடன், மாலை இதழாக 1917 பிப்ரவரி 26 ஆம் தேதிமுதல், (26.2.1917 முதல்) வெளிவந்திருக்கிறது.
இன்னொரு பக்கம் தமிழ்ப் பத்திரிகை வரவேண்டும். அதற்கு என்ன பெயர் வைப்பது?
‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’
இயக்கத்திற்கு, ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ (‘நான் பிராமின் மூவ்மெண்ட்’) என்று வைத்திருந்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில் டாக்டர் நாயர் மற்றும் நண்பர்களுக்கு எப்படிப்பட்ட அற்புதமான சிந்தனை வந்தது என்பதைப் பாருங்கள்.
தமிழ்ப் பத்திரிகைக்குத் ‘‘திராவிடன்'' என்று பெயர் சூட்டினார்கள்.
தமிழ் நாளேடான ‘திராவிடன்’ நாளேட்டில் 1917 இல் முதல் தலையங்கம் எழுதுகிறார்கள். இதனுடைய தொடர்ச்சிதான் ‘விடுதலை'.
ஆகவே, இதனுடைய முன்பகுதிகள் நம்முடைய இதழாளர்கள் பல பேருக்குத் தெரியாது.
பல இடங்களில் இருந்து திரட்டப்பட்ட செய்திகள் எல்லாம் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான், இந்த உரையையும், இதையொட்டி ஒரு தனி நூலையும் அரியலூர் மாநாட்டில் வெளியிட இருக்கின் றோம்.
நெருக்கடி காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை யெல்லாம் அற்புதமாக ‘முரசொலி’ ஏட்டின் சார்பாக, ‘முரசொலி’ செல்வம் அவர்கள் ‘‘நூறு நாள்கள்’’ என்ற தலைப்பில் ஓர் அருமையான புத்தகத்தை எழுதி யிருக்கிறார்.
அதேபோன்று இன்னொரு செய்தி- இங்கே கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சொன்னாரே, அவரும் ஒர் அருமையான நூலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அந்த நூலும் ஆய்வுக்கு வருகிறது.
இன்னும் ஒரு சிறப்பு, இரா.சுப்பிரமணி அவர்கள் ஒரு நூலில், நெருக்கடி நிலையில், பத்திரிகைகளின் நிலையைப்பற்றி சொல்லியிருக்கிறார்.
‘‘ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?’’
அந்த நண்பர்தான் இப்பொழுது ஆய்வு செய்து, டாக்டரேட் பட்டம் பெற்று - சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில், மிகப்பெரிய அளவிற்கு ஆய்வாக அமைந்து, சிறப்பாக ஒரு நூலை எழுதியிருக்கிறார் - ‘‘ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?'' தந்தை பெரியாரின் இதழியல்பற்றி இவ்வளவு பெரிய புத்தகத்தை எழுதியிருக்கிறார். அத்தனை தகவல்களும் பெரியார் நூலக ஆய்வகத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ‘திராவிடன்’ நாளேட்டில் முதல் தலையங்கத்தில் என்ன எழுதப்பட்டது என்பதைப் பார்ப்போம்!
‘திராவிடன்’ நாளேட்டினை அச்சிடுபவராகவும், வெளியிடுபவராகவும் ராவ்பகதூர் பி.தியாகராச செட்டி பி.ஏ. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை. சென்னை மவுண்ட் ரோடு, 16-ஏ, எண்ணில் உள்ள ‘ஜஸ்டிஸ் பிரிண் டர்ஸ் ஒர்க்ஸ்' அச்சகத்தில் இந்த இதழ் அச்சிடப்பட்டு வந்தது.
இதற்கு ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள் - பக்தவத்சலம் பிள்ளை பி.ஏ., துணை ஆசிரியர்களாக சுவாமி ருத்திரகோடீசுவரரும், பண்டித வில்வபதி செட்டியாரும் பணியாற்றினார்கள்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், எல்லோருக்கும் தெரிந்தது - ‘திராவிடன்’ பத்திரிகையினுடைய ஆசிரியர் ஜனசங்கர கண்ணப்பர் என்று.
கண்ணப்பரை பிறகு தேசிய இயக்கம் விலைக்கு வாங்கிவிட்டது.
கடைசி காலத்தில், கண்ணப்பரே கொஞ்சம் மாறிப் போய்விட்டார்.
எதிரிகள் தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள்
யார் யார் பெரியாரால் விளம்பரப்படுத்தப்பட்டார் களோ, திராவிட இயக்கத்தினால் விளம்பரப்படுத்தப் பட்டார்களோ, அவர்களில் பல பேருக்கு சபல புத்தி எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்து, அவர்களை எதிரிகள் தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள்.
‘திராவிடன்’ என்று இதற்குப் பெயர் சூட்டியது நாயர்.
‘திராவிடன்' முதல் இதழ் 1.6.1917 வெள்ளிக்கிழமை முதல் வெளிவந்தது.
அந்தத் ‘திராவிடன்’ நாளிதழின் முதல் தலையங் கத்தில், ஏன் திராவிடன் என்று பெயர் வைத்தோம் என்றால், அதற்கு விளக்கங்களை மிக அருமையாகச் சொன்னார்.
கோ.குமாரசாமி தனது நூலில்....
‘திராவிடன்' என்னும் பெயர் சூட்டப்பட்டதற்கான காரணத்தை, திராவிடன் எழுத்தாளராக இருந்த பண்டித எஸ்.எஸ்.அருணகிரி நாதர், கோ.குமாரசாமி (ஆசிரியர் திராவிடப் பெருந்தகை சர் பிட்டி தியாகராயர், 1985) கூறியதாக பின்வருமாறு கோ.குமாரசாமி தமது நூலில் கூறியுள்ளார்.
‘‘சங்கம் நடத்தி வந்த ‘திராவிடன்' நாளிதழுக்கு அப்பெயர் சூட்டப்பட்ட காரணத்தை பண்டித எஸ்.எஸ்.அருணகிரிநாதர் இவ்வாசிரியரிடம் கூறியது இவண் குறிக்கத்தக்கதாகும்.
சுமார், இரண்டு, மூன்று நாட்கள் டாக்டர் நாயரும், மற்ற தலைவர்களும் கூடி யோசித்த பின்னரே, தமிழ் நாளிதழுக்குத் ‘திராவிடன்' என்று பெயர் சூட்டப்பட்டது.
‘திராவிடன்’ என்று பெயர் சூட்டப்பட்டது
பிராமணரல்லாதாராகிய எல்லா ஜாதி வகுப்பாரையும், ஒரே குறியீட்டுப் பெயரால் அழைத்துவரும்படியான வழக்கம் ஏற்படவேண்டும். அக்குறியீட்டுப் பெயரால் அவர்களிடையே இன உணர்ச்சியை எழுப்பிவிட வேண்டும் என்ற விருப்பமே எல்லோருடைய பேச்சிலும் தெரிவிக்கப்பட்டது. இவ்விருப்பத்திற்கு ஏற்ப ஆலோ சித்துப் பார்த்தபோது, ‘‘திராவிடன்'' என்ற சொல்லே தமிழ் நாளிதழுக்கு முடிவு செய்யப்பட்டது.
‘‘இந்துக்களில் பெரும்பாலோர் பிராமணரல்லாதவர் களாய் இருக்கிறார்கள். தென்னிந்தியாவின் ஜனத் தொகை சுமார் நான்கு கோடியில், பிராமணரல்லாத இந்துக்களின் தொகை மூன்றரை கோடிக்கு அதிக மாகிறது. இவ்வளவு பெருந்தொகையானராகிய நம் மவர்களுடைய குறைபாடுகளையும், முறைபாடுகளை யும் ராஜாங்கத்தாருக்குத் தக்கப்படி தெரிவித்து, இவர் களுடைய செல்வாக்கை அபிவிருத்தி செய்துகொள் வதற்கு ஏடுகள் இதுவரை இயலாமற் போயிற்று.
பொதுவாக இந்துக்கள் என்ற மொத்தப் பெயரை வைத்துக்கொண்டே, இந்துக்களில் மிகமிகச் சிறிய பிரிவினராகிய சிலரே (பார்ப்பனர்களே) எல்லா நலன் களையும், எல்லாப் பலன்களையும் இதுவரைக்கும் அனுபவித்து வருகிறார்கள். முக்கியமாய் இதற்குக் காரணம், பத்திரிகை போன்ற பலமுள்ள ஆயுதங்கள் அவர்களிடமிருப்பதுதான்.
முன் சொன்னபடி, தென்னிந்தியர்களில் பெரும்பா லோர் பிராமணரல்லாத இந்துக்களேயாவர். பிராமணர் என்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினர்.
பிராமணரல்லாதாவர்களை திராவிடர்கள் - தென்னிந்திய ‘‘மஹாஜனங்கள்’’
ஆகவே, பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற இரு வகுப்பினருள், பிராமணரல்லாதாவர்களை திராவிடர்கள் - தென்னிந்திய ‘‘மஹாஜனங்கள்'' என்று திருத்தமாய் நாம் கூறலாம்.''
இவ்வளவு சிறப்பாக இந்தக் கொள்கைகளை எடுத்துச் சொல்லி ‘திராவிடன்’ ஏடு வெளிவந்தது.
அந்த ஏடு எந்த அளவிற்கு நடைபெற்றது என்பதை எண்ணிப்பார்த்தோமேயானால், வேதனையான ஒரு செய்திதான்.
இந்த ஏட்டைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலைதான். ஜஸ்டிஸ் பத்திரிகையையும் தொடர்ந்து நடத்த முடியவில்லை.
இந்த ஏடுகளைப் பொறுத்தவரையில், 1917 ஜூன் 1 ஆம் தேதிமுதல், டிசம்பர் மாதம்வரை நடந்திருக்கிறது.
28 அக்டோபர், நவம்பர் இதழ்கள் மட்டும்.
1929 ஆம் ஆண்டில் முது இதழ்கள்.
1930 பிப்ரவரி முதல் நவம்பர்வரை
1931 ஜனவரி - மே முதல் டிசம்பர் வரை
1932 ஜனவரி - பிப்ரவரி வரை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் வரை
1918 முதல் 1928 செப்டம்பர் மாதம்வரை கடும் நிதிச் சுமையினால் திராவிடன் இதழ் நிறுத்தப்பட்டது.
1928 அக்டோபர் முதல் இதழினை தந்தை பெரியார் வழிநடத்துகிறார்.
அதற்காக நிபந்தனை சொல்கிறார், என் கொள்கைப் படி நடக்கவேண்டும் என்று.
பெரியாரிடம் இந்தப் பொறுப்பை - சிறப்பாக செய்வார். ஏனென்றால், ‘குடிஅரசு’ இதழை சிறப்பாக நடத்துகிறார் என்பதால் கொடுத்தார்கள்.
இதழ்கள் வெளியீட்டிற்குத் தடை
‘விடுதலை’ வெளிவருவது நின்று, மறுபடியும் பெரியாரிடம் அதைக் கொடுக்கிறார்கள்.
ஆகவே, 1931 ஆம் ஆண்டில் மூன்று மாதங்கள் கடன் செலுத்தாததால், இதழ்கள் வெளியீட்டிற்குத் தடை.
பெரியார் பணம் கொடுத்து, அந்தப் பத்திரிகையை நடத்துவதற்காக இரவு, பகல் பாடுபட்ட பிறகு, திராவிடன் இதழுக்காக, அதன் கடனுக்காக, 'திராவிடன்' பொறுப்பாசிரியர் என்ற முறையில், பெரியார் சிறைச்சாலைக்குப் போகிறார்.
இது மிகவும் அதிசயமாக இருக்கும்.
(தொடரும்)
No comments:
Post a Comment