29.07.1944 - குடிஅரசிலிருந்து...
நகைச்சுவை மன்னர் தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், மங்கள பாலகான சபாவைத் தலைமை ஏற்று நடத்த முன் வந்ததைப் பாராட்டி மறுமலர்ச்சி வைபவம் 19.7.1944ஆம் தேதி சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடந்ததைக் கண்டு நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சினிமா உலகில் பகுத்தறிவு சம்பந்தமான கருத்துக்களைப் புகுத்தி புரட்சி செய்து வருவது யாவரும் அறிந்ததே. இதனால் எவ்வளவு பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது பட உலகில் என்பது மறுக்க முடியாது. இதற்கு யார் பொறுப்பாளியாக இருந்த போதிலும் தோழர் என்.எஸ்.கே. அவர்களே பாராட்டுதலுக்கு உரியராவார் என்பதை நாம் தைரியமாகச் சொல்லுவோம். இது வரை சினிமா உலகில் செய்த புரட்சி போதாதென்று நாடக உலகிலும் புரட்சி செய்ய முன் வந்து விட்டார். இந்நாட்டிலே சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக நாடகக் கலையை வளர்ப்பது போல் அல்லாமல், மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆன முறையில் நாடகக் கலை பயன்படும்படியாக உழைக்க முன் வந்து விட்டார் நமது தோழர். அவர் இந்த நாடகக் கம்பெனியை விலைக்கு வாங்கி நடத்த முன் வந்தது தமது சொந்த லாபத்தைக் கருதியல்ல என்பதை அவர் நன்கு விளக்கி விட்டார். பிறருக்கு உதவி செய்யும் பொருட்டே அவர் அதை வாங்கியிருக்கிறார். எனவே இவருடைய தாராள சிந்தனையைப் பாராட்டுகிறோம். மற்றும், இவரது தலைமையில் இக்கம்பெனியார் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் முற்போக்குக்கும் ஆன நாடகங்களை நடித்து வருவார்கள் என்பது நிச்சயம்.
No comments:
Post a Comment