தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகும் இளைஞர்கள் இன உணர்வோடு திராவிடர் கழகத்தில் இணையும் எழுச்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகும் இளைஞர்கள் இன உணர்வோடு திராவிடர் கழகத்தில் இணையும் எழுச்சி!

வரும் 30 ஆம் தேதி அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் அதைக் காண்போம்!

தந்தை பெரியார் அழைக்கிறார், அழைக்கிறார் புதியதோர் திருப்பத்தைக் காண அரியலூரில் கூடுவீர்!

தமிழர் தலைவரின் எழுச்சி அறிக்கை

வரும் 30 ஆம் தேதி அரியலூரில் கூடவிருக்கும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் புதிய திருப்பம் காண்போம் - வாரீர் தோழர்களே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அரியலூரில் இம்மாதம் 30 ஆம் தேதி திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது! அதற்கான ஏற்பாடுகளை மாநிலம் தழுவிய அளவில் ஆர்வம் கரைபுரண்டோடும் வகையில், கழக இளைஞர் பட்டாளம் ‘சுறுசுறுப்புச் சுயமரியாதைத் தேனீக்களாக' சுற்றிச் சுற்றி சுழன்று, பரப்புரை, விளம்பரம், கடைவீதி வசூல் என்ற வாய்ப்பின்மூலம் ஒரு வகை பிரச்சாரம் - இவற்றைக் கடந்த பல வாரங்களாகவே தொடர் நிகழ்ச்சிகளாக சூறாவளி வேகத்தில் நடத்தி, துடிப்புள்ள இளைஞர்களின் தொண்டறப் பணியாளர்களின் தோட்டம் இவ்வியக்கம் என்று அகிலத்திற்குப் பறைசாற்றி நம்மை மகிழ்விக்கின்றனர் என்பதைவிட, அவர்கள் அலுப்பு சலிப்பின்றி, உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர் என்பதுதான் தனிச்சிறப்பு!

சென்னை முதல் குமரி வரை - 

அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டுக்கு இளைஞர்கள் ஆயத்தம்!

சென்னை - திருத்தணி - குமரிவரை எங்கெங்கு காணினும் அரியலூர் திராவிடர் கழக இளைஞரணி மாநாடுபற்றிய பரப்புரை விளம்பரம் மற்றும் செயல்களின் தாக்கம்தான்!

‘தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் இருக்காது; ஏதோ ஊருக்கு நாலு பேர், அதுவும் வயது முதிர்ந்தவர்கள்தான் கருப்புச் சட்டை அணிந்து, அவர் பின்னால் கொடி பிடித்துக்கொண்டு நிற்பார்கள்; அவர் மறைந்தால் அந்தக் கட்சி தானே மறைந்துவிடும்' என்று ‘ஆரூடம்' சொன்னவர்கள் அலறித் துடிக்கிறார்கள் இன்று!

‘‘அப்பப்பா, இவ்வளவு கருப்புச் சட்டை இளைஞர் களா?'' - அதுவும் அவர்களுக்கு அரசியல் கட்சிகளைப் போல் ஒன்றையும்  தராது, வெறும் போராட்டம், களப்பணி, சிறைவாழ்வு - இவற்றை மட்டுமே தரும் கட்சியிலா இப்படி இளைஞர்கள் - அதுவும் படித்துப் பக்குவப்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று பேசி, வியப்போடு மூக்கில் விரலை வைத்து மூச்சு விடுவோர் - நம் இயக்கத்தின் தொடர் பணி கண்டு வியர்த்து வியக்கின்றனர்!

இன எதிரிகள் திகைக்கின்றனர்!

தந்தை பெரியார் என்ற அந்த மகத்தான அறிவு ஆசானுக்கு இளைஞர்கள், மாணவர்கள்மீது ஒரு வகையான தனி ஈர்ப்பு எப்போதும் உண்டு.

இயக்கத்தை அய்யா 

கட்டி வளர்த்த முறை

அவர் இயக்கத்தைக் கட்டி வளர்த்த முறைபற்றிய ஆய்வே ஒரு சிறப்பு ஆய்வுப் பட்டத்திற்கானது என்பதை பலரும் அறியமாட்டார்கள்!

சுயமரியாதை இயக்கமாக அவர் (காங்கிரசிலிருந்து வெளியேறி) 1925 இல் சமூகப் புரட்சிப் பணியை மய்யப் படுத்திய காலம் தொட்டே அவர் இளைஞர்களைத்தான் அழைத்தார் - பக்குவப்படுத்தி பணியிலும் அமர்த்தினார்!

இளைஞர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்

அவர் வயது ஒத்த நண்பர்களை அவர் களத்தில் இறக்கவில்லை.  அவரைவிட வயது குறைந்த வாலி பர்கள் தோழர்கள் தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி, அறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர், நாவலர் போன்றவர்களைத்தான் பரப்புரை பணித் தோழர்களாக பக்குவப்படுத்தி, ‘ஈரோட்டு குருகுலத்தை' நடத்தி, இளை ஞர்களை இயக்கத்தின் ஈட்டி முனைகளாக, கொள்கைப் போர்வாளாக, எதையும் தடுக்கும் கேடயங்களாக வார்த் தெடுத்து வலம் வரச் செய்தார்கள்!

அப்பணியில் பிறகு நம் கழகத்தில் ஒரு தொய்வு இருந்தது உண்மைதான்!

ஆனால், இன்றோ, அந்த பரந்து விரிந்த ஆலமரத்தின் விழுதுகளோ நாளும் பெருகி, வேரைத் தாங்கும் விழுதுகளாக இன்று வெளிச்சம் போட்டு, சமூகம், அரசியல், பண்பாடு, கலை என பல துறைகளிலும் பளிச் சிட்டு சாதனை சிகரங்களாக பரிணாம வளர்ச்சியைப் பெற்று மக்களைப் பரவசப்படுத்துகின்றது!

‘திராவிடர் கழகத்தில் இவ்வளவு இளைஞர்களா?' என்று வியப்பின் மேலீட்டோடு கேட்பவர்களுக்கு சரியான விடை இதுதான்.

21 மொழிகளில்

 தென்னாட்டு சாக்ரட்டீசின் நூல்கள்

‘‘பெரியார்தான் தங்களின் ஒரே பேராயுதம்; ஒரே போராயுதம்; தனித்த அறிவாயுதம்'' என்று உணர்ந்து கொண்டதால், பலாப்பழத்தை மொய்க்கும் ஈக்களாக, தேன் தேடி மலர்த் தோட்டத்தை நாடிடும் தேனீக்களாக நிற்கின்றனர் - அதுவும் உலக அளவில்!

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் ஏற்படாத ‘கிராக்கி' அவரது நூல்களுக்கு இன்று அமோகமாக அகிலம் முழுவதும் உள்ளது!

கிரேக்கத்து சாக்ரட்டீஸ் இளைஞர்களை அழைத்தார்; தென்னாட்டு சாக்ரட்டீசும் இளைஞர்களை அழைத்தார். அன்று ‘கிரேக்கத்து கிழவருக்கு' நஞ்சு கொடுத்தது - கிரேக்கத்தின் பரிதாப வரலாறு!

இன்று தென்னாட்டு சாக்ரட்டீசான இந்தக் ‘கிழவருக்கோ', அரசு மரியாதை செலுத்தியது - 21 மொழிகளில் அவரது சாகா சரித்திரங்களை ஞானக் கோவையாக ஞாலத்திற்கே தருகிறது!

காரணம், அவரது தொண்டு அப்பழுக்கற்ற பொது நலத்தின்பாற்பட்ட அரியதொண்டு, பதவிநாடா, புகழ் தேடா, நன்றி எதிர்பார்க்காத, மானம் பாராத, மகத்தான, தனித்தன்மையான தொண்டு; பொது ஒழுக்கம் காக்கும் புத்தாக்கத் தொண்டு!

இதனை இன்றைய இளைஞர் உலகம் புரிந்து கொண்டதால்தான் பெரியாரை வாசிப்பதோடு இல்லாமல் சுவாசித்தும் பயனடைகிறது!

இதுதான் திராவிடர் கழக இளைஞரணியின் அதி வேக அதிசய வளர்ச்சியின் ரகசியம்!

இராணுவக் கட்டுப்பாடு மிக்க கொள்கைத் தோழர் களின் கூடாரமே திராவிடர் கழக இளைஞரணி முதல் அனைத்து அணிகளும்!

பெரியார் அழைக்கிறார் - 

அரியலூர் மாநாட்டுக்குத் திரள்வீர்!

கொள்கையா? மானமா? உயிரா? என்ற கேள்வி அவர்களை நோக்கி எழுப்பப்பட்டால், ‘கொள்கையே' என்று ‘பட்'டென்று பதில் கூறும் பக்குவம் பெற்றவர்களே கழக இளைஞர்கள் என்ற செயல் வீரர், வீராங்கனைகள் - ‘செய்வோம் - அதற்காக செத்து மடிவோம்' என்று சூளுரைத்துத் திரள இருக்கும் எம் அருந்தோழர்காள்!

அரியலூர் மட்டுமல்ல, அகிலமே அதிசியக்கத்தக்க வண்ணம் அம்மாநாடு அமைய அனைவரும் திரண்டு - கடலைக் காணா அரியலூரில், கருஞ்சட்டைக் கடலைக் காட்டுங்கள்; பெரியார் என்ற பேராயுதத்தின் வலிமையை விளக்கும் வாலிபர்கள் கூட்டம் இதோ என்று மாற்றார், மருள, புரிய வைக்க வாருங்கள், சந்திப்போம்!

இன்னும் 8 நாட்களே - ஆயத்தமாகிவிட்டீர்களா?

ஆவலோடு காத்திருக்கிறேன் உங்களைச் சந்திக்க - சரித்திரம் படையுங்கள்!

தலைவர் பெரியார் அழைக்கிறார்! புதியதோர் திருப்பத்தை ஏற்படுத்த புறப்படுவீர்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

21.7.2022


No comments:

Post a Comment