அரியலூர் படைத்தது அரும்பெரும் வரலாற்றை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 31, 2022

அரியலூர் படைத்தது அரும்பெரும் வரலாற்றை!

 89 வயது தலைவர் 29 வயது இளைஞராகத் திரும்பினார்

மின்சாரம்

ஜூலை 30 - அரியலூர் வரலாற்றில் அதி முக்கிய நாள்! ஒரு காலத்தில் அரியலூர்ப் பகுதி கடல் பகுதியாக இருந்தது என்று புவியியல் ஆய்வறிஞர்கள் கூறுகின் றனர்.

நேற்று மக்கள் கடலாக - அதிலும் குறிப்பாகக் கருஞ்சட்டை இளைஞர்களின் இன எழுச்சி மாக் கடலாக அலைகள் வீசி ஆர்ப்பரித்தது.

குமரி முதல் திருத்தணி வரை இளைஞரணி தோழர்கள் வாகனங்கள் மூலம் வந்து கொண்டே இருந்தனர்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனிப் பேருந்துகள், தனி வேன்கள்மூலம் ஒரு மாநாட்டுக்கு திரண்டதைப் பார்க்க முடிந்தது.

கடந்த ஏப்ரல் 30 இல் சென்னையில் இளைஞரணியின் மாநிலம் தழுவிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற் றது. 400க்கும் மேற்பட்ட  பொறுக்கி எடுக்கப்பட்ட முத்து களாக அவர்களைப் பார்க்க முடிந்தது. 

இலட்சிய எஃகுப் பட்டறையில் வார்த்து எடுக்கப்பட்ட வடிவங்களாக அவர்கள் காணப்பட்டனர்.

பெரும்பாலும் புதிய முகங்கள் - "விட்டேனா பார்!" என்று எகிறும் இளம் குருதியின் துடிப்பு அவர்களிடம் காணப்பட்டது.

அவர்களுக்கு ஒரு வடிகாலாக ஒரு மாநாட்டை நடத்துவது என்று தலைவர் ஆசிரியர் முடிவெடுத்தார்.

அதன் அரிய எழிலார்ந்த வீச்சினை அரியலூரில் காண முடிந்தது. (30.7.2022)

மாநாட்டையொட்டி எத்திசை நோக்கினும் கழகக் கொடிகள் கலகலப்பை ஊட்டின. சலசலப்பைக் காட்டலாம் என்று கருதிய சங்கிகள் பதுங்கிக் கொண்டனர்.

"அடேயப்பா, அரியலூரா இது? எங்கிருந்து கிளம் பியது இந்த இளஞ் சிறுத்தைகள் - கருஞ்சிறுத்தைகள்!" என்று கண்டோர் மூக்கில் மேல் விரலை வைக்கும் அளவுக்கு ஆச்சரியக் குறியாய் நின்றனர்.

இந்த மாநாட்டுக்காக கழகத் தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என்று ஒரு திங்களுக்கு மேலாக தேனீக்களாகப் பறந்து பறந்து பணியாற்றினர்.

திட்டமிட்டு எதையும் செய்தால் - அது எதிரிகளுக்குத் திகைப்பை ஏற்படுத்தும் வண்ணம் 'திகு திகு' தீயெனக் கொழுந்திட்டு திருமுகத்தைக் காட்டும் என்பதற்கு அரியலூர் நல்லதோர் பாடத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

எல்லா ஏற்பாடுகளும் நுணுக்கத்துடன், துல்லியமான ஏற்பாடுகளுடன் பரிமளித்து மணம் பரப்பியதைப் பார்க்க முடிந்தது.

வாணி மகால் என்னும் ஒரு மண்டபம் - அவ்வளவுப் பெரியது - பால்கனியும் மூன்று பக்கங்களிலும்! கருஞ்சட்டைச் சேனையை அதற்குள் அடக்க முடியவில்லை. கீழ்த் தளத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து கேட்கும் வண்ணம் எல்இடி திரை ஏற்பாடாகி இருந்தது.

வெளியூர்களிலிருந்து வந்தவர்களுக்கெல்லாம் காலைச் சிற்றுண்டி - மதிய உணவு - 'அடேயப்பா -திருமண வீடா?' என்று திகைக்கும் வண்ணம் தித்திப்பான உபசரிப்புகளும், ஏற்பாடுகளும் பலே பலே!

வாணி மண்டபத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியோடு சரியாகக் குறிப்பிட்ட நேரத்தில் காலை 10 மணிக்கெல்லாம் தொடங்கப்பட்டு விட்டது.

திருத்தணி முனைவர் நா.பன்னீர்செல்வம் குழுவினரின் எழுச்சியூட்டும்  இன்னிச்சைப் பாடல் தேன் மழையில் தோழர்கள் குளித்தனர்.

தலைவர் முன்மொழிவு, வரவேற்புரை, கருத்தரங்கம், பட்டிமன்றம், வரலாற்றில் என்றென்றும் பேசப்படும் 19 தீர்மானங்கள் மாநாட்டின் தகுதியை விண்ணில் பல வண்ணத்தில் பறக்க விட்டன.

நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் இளைஞர் சேனையின் எழுச்சியைக் கண்டு உள்ளம் உருகி விட்டார். பூரிப்பில் திளைத்து விட்டார். 

பெரியாருக்குப் பின்னால் இயக்கம் இருக்காது என்றார்களே இருந்ததே - அம்மா  தலைமையில் இலட்சியச் செருக்குடன் வீறு நடை போடவில்லையா? "இராவண லீலா" ஒன்றே ஒன்று போதாதா?

நெருக்கடி நிலை என்னும் நெருப்பு மலைப் பாம்பு நம் இயக்கத்தைச் சுற்றி வளைத்ததே - அதன் கோரப் பற்களைப் பிடுங்கி எறியவில்லயா?

நமது தலைவர் ஆசிரியர் அவர்களையும், நாடு தழுவிய அளவில் கழக முக்கியஸ்தர்களையும் 'மிசா' கைதியாக்கி, நம் இயக்கத்தின் இடுப்பெலும்பை முறித்து விடலாம் என்று நினைத்தார்களே, உடல் நலிவுற்று இருந்த நமது அன்னையார் எழுச்சி வீராங்கனையாக நமது கழகத்தை கோரப் பற்கள் கொண்ட விலங்குகளிடமிருந்து, தாய்ப் பறவையாக நமது கழகத்தைக் கண்ணை இமை காப்பது போல் காக்கவில்லையா?

'விடுதலை'யைத் தணிக்கை என்ற விஷக் கத்தரிக்கோலால் அதன் இறக்கைகளை வெட்டிச் சாய்த்து விடலாம் என்று எண்ணி இறுமாந்திருந்தார்களே  'உனக்கும் பேப்பே - உன் அப்பனுக்கும் பேப்பே!' என்று, நெஞ்சை நிமிர்த்தி நாள்தோறும் நாள்தோறும் விடுதலை வீறு நடைபோட்டு வன்நெஞ்சர்களின் மண்டையில் மரண அடி கொடுக்கவில்லையா?

அன்னையாரும் மறைந்தார். அப்பொழுது நமது தலைவர் ஆசிரியருக்கு வயதோ 45 தான்! 'என்ன செய்வார் வீரமணி பார்ப்போம்!' என்று பல்லிளித்து நின்ற கூட்டம் பற்கள் நொறுங்கி விழ -  பதைபதைக்கச் செய்யும் அளவுக்கு இயக்கப் பணிகளைக் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப உத்திகளை மேற்கொண்டு புது ஊட்டச்சத்துக் கொடுத்து கழகத்தைக் கல் தூணாகத் தூக்கி நிறுத்தவில்லையா?

பிரச்சாரக் களத்தில் 'விடுதலை' என்னும் போர் வாளின் வீச்சு முக்கியம் அல்லவா!

என்ன செய்தார் நம் தலைவர் ஆசிரியர்? 4 பக்க 'விடுதலை'யை எட்டுப் பக்கமாகப் பல வண்ணத்தில் வெளியில் கொண்டு வந்தார். இணையத்தின் மூலம் முதலில் வெளிவந்த ஏடு 'விடுதலை' என்ற பெருமையை ஏற்படுத்தினாரே! உலகெங்கும் அடுத்த நொடியில் கொண்டு சேர்த்தாரே!

சென்னையில் மட்டுமல்ல - தந்தை பெரியார் தலைமையிடமாகக் கொண்ட திருச்சியிலும் இன்னொரு பதிப்பு என்று கொண்டு வந்தார் - 'விடுதலை' அச்சு இயந்திரங்களை நவீனத்துவத்துடன் மாற்றி அமைந்தார்.

வெளியீடுகளை, நூல்களை அணி வகுத்து அணி வகுத்து வரும்படி வெளியிட்டுக் கொண்டே இருந்தார்  - ஒரு பழைய நூல் என்றால், இன்னொரு புதுநூல் என்று - பூணூலார் புறமுதுகிட்டு ஓடும் வகையில் வெளியீட்டுப் பிரிவை வேக இயந்திரமாக மாற்றினார். பெரியார் நூலகம் - ஆய்வகத்தை விரிவுபடுத்தினார் - விஞ்ஞான வசதிகளுடன்.

சமூகநீதிக் களத்தில் தோள் தூக்கி நின்று அவர் தலைமையில் இயக்கம் சாதித்தது - சரித்திரத்தின் பொன்னிழைகள்!

இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டப்படி கொண்டு வரப்படவில்லையா? அகில இந்தியாவிற்கே மண்டல் குழுவை செயல்படுத்தும்படி 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 27 விழுக்காடு இடங்கள் பெறும்படிச் செய்து அவர்களின் வயிற்றில் எல்லாம் பால் வார்க்கவில்லையா?

இவற்றிற்கெல்லாம் யார் காரணம்? திராவிடர் கழகமும்,  அதன் தலைவரும் அல்லவா!

எரியாதா பூணூல் கூட்டத்திற்கு - நெஞ்சு வலி வராதா இந்த வெங்கண்ணாப் பரம்பரைக்கு?

மாநாடு கூட்டி, ஊர்வலம் நடத்தி 'வீரமணிக்குப் பாடை கட்டித் தூக்கினரே பழனியிலே பார்ப்பனர்கள்!'

சபாஷ்! தலைவர் வீரமணி ஜெயித்து விட்டார். அதற்கான நற்சான்றைப் பார்ப்பனர்கள் வைர எழுத்துக்களைப் பொறித்து, தங்கத் தாம்பாளத்தில் வைத்து 'நற்சான்றை'  கொடுத்து விட்டனர் நமது இன எதிரிகள்.

இன்றைக்கும் எத்தனை எத்தனையோ சவால்கள் - சமூகநீதியின் கழுத்தை முறிக்க பார்ப்பன சக்திகள் - சங்பரிவார்கள் அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு  ஆட்டம் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்களின் ஆவியைப் பறிக்கும் அறிவார்ந்த ஆயுதங்களை  நமது அறிவு ஆசான் அய்யா அவர்கள் நமது ஆசிரியர் கைகளில் கொடுத்து தானே சென்றிருக்கிறார்.

ஆளும் கட்சிகள் ஆசிரியர் என்ன சொல்லுகிறார், - 'விடுதலை'யில் அவரின் அறிக்கை என்ன சொல்லுகிறது? என்று கூர்மையாகக் கவனித்தும் கொண்டு இருக்கிறதே  - 

"எங்கள் பயணத்தை முடிவு செய்வது பெரியார் திடல் தான்" என்று திமுக தலைவர் பிரகடனப்படுத்தும் அளவுக்கு தலைவர் ஆசிரியர் இயக்கத்தை சீர்மையின் எல்லைக்குக் கொண்டு சென்று விட்டாரே!

ஆம். இயக்கம் வலிமையுடன் இருக்கிறது இளைஞர்களின் பாசறைக் கடலாய் அலையடித்துக் கிளம்பிவிட்டது. அதன் அடையாளத்தை அரியலூரில் நேற்றுக் கண்டோம் - கண்டோம் - களித்தோம் களித்தோம்.

இயக்கம் இருக்கும் - என்றைக்கும் இருக்கும். கடைசி சுரண்டல்காரன், கடைசி மூடநம்பிக்கையும், கடைசி ஆதிக்க சக்தியும், கடைசி பாலியல் அநீதி நிலைக்கும் வரை கழகத்திற்கு - கருஞ்சட்டைப் பட்டாளத்திற்கு வேலை உண்டு என்பதால் கழகம் நீடித்துக் கொண்டே, வீறு கொண்டே நிலைத்திருக்கும்" என்று தலைவர் ஆசிரியர் மாநாட்டில் கூறியது வெற்று வார்த்தைகள் அல்ல வெற்றி வீரியங் கொண்ட வீரவாள் சுழற்சி! "ஏதோ ஊருக்கு இரண்டு பேர் இருப்பார்கள் தி.க.வினர்" என்ற பொய்ப் பிரச்சார முகத்திரையை அரியலூர் மாநாட்டு இளைஞர் அணி சேனை எழுச்சி அரிவாள் கொண்டு கிழித்து எறிந்து விட்டது. பேரணி பார்வை மேடையில் ஆசிரியரோடு அமர்ந்து பேரணியைப் பார்த்த - தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் மானமிகு மாண்புமிகு எஸ்.எஸ். சிவசங்கரன் அவர்கள் பேரணியில் பங்கேற்ற இளைஞர்களின் எண்ணிக்கை மற்றும் எழுச்சி கண்டு பெருமிதம் கொண்டார் - மனந்திறந்து பாராட்டினார்.

ஆசிரியர் திறந்த வெளி மாநாட்டில் தெரிவித்தாரே - 89 வயது வீரமணியாக இங்கு வந்தேன் - 29 வயது இளைஞராகத் திரும்புகிறேன் என்றாரே அப்படியென்றால் அரியலூர் மாநாட்டின் எழுச்சியைத் தெரிந்து கொள்ளலாமே - வீரியத்தைப் புரிந்து கொள்ளலாமே!

அரியலூருக்கு நமது பாராட்டுகள்! பாராட்டுகள்!!

திராவிடம் வெல்லும் - 

நாளை வலராறு அதைச் சொல்லும். 

வாழ்க பெரியார்! 

வெல்க திராவிடம்!

 

No comments:

Post a Comment