ஈரோடு இரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது. ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவர் கே.என்.பாட்ஷா இந்திய இரயில்வே போர்டு தலைவருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
"ஈரோட்டில் இரயில் நிலையம் மற்றும் தண்டவாளப் பணிகள் நடந்தபோது, ஈரோட்டில் தந்தை பெரியாரின் தகப்பனார் வெங்கடப்ப நாயக்கர் அவரது சொந்த விவசாய நிலத்தை இரயில்வேக்குத் தானமாக வழங்கியதுடன், பணிக்காக தனது பணியாளர்களையும் அனுப்பினார். லண்டனை சேர்ந்த பார்க்கர் நிறுவனத்தினர் இந்த பணியை நிறைவேற்றினார்கள்.
முதலில் இரயில்வே பாதைக்காக தேர்ந் தெடுக்கப்பட்ட பகுதி அண்ணாமலைப் பிள்ளை என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. ஆனால் அவர் அந்த இடத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் பெரியாரின் தந்தை வெங்கடப்ப நாயக்கர் இரயில்வே தொடர்பான நன்மைகளை எடுத்துக் கூறியதால் அண்ணாமலைப் பிள்ளை 1 லட்சம் ரூபாய்க்கு தனது நிலத்தை வெள்ளைக்கார நிர்வாகத்திடம் விற்றார்.
அதன்பின்னர் 1865-ஆம் ஆண்டு ஈரோட்டில் இரயில்வே போக்குவரத்துத் தொடங்கப்பட்டது. முதன் முதலில் இரயில் நிலையம் வெண்டிபாளையத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் தந்தை பெரியாரின் முயற்சியால் 1925-ஆம் ஆண்டு தற்போதைய இரயில் நிலையம் தொடங்கப்பட்டது.
எனவே ஈரோடு இரயில் நிலையம் அமைய காரணமாக இருந்தவரும், சமுதாய சீர்திருத்தவாதியாக, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண் அடிமைத்தன ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்திய தந்தை பெரியாரின் பெயரை ஈரோடு இரயில் நிலையத்துக்குச் சூட்ட வேண்டும் என்று ஈரோடு மக்களின் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறி உள்ளார். ('The Hindu' 22.7.2022).
இன்றைய ஒன்றிய அரசு இந்தக் கோரிக்கையை ஏற்றுச் செயல்படுத்துமா என்பது ஒருபுறம்;
அதே நேரத்தில் ஹிந்து ஆங்கில ஏட்டில் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பெருமகனார் எழுதி இருக்கும் தகவலும், கருத்தும் மிகவும் முக்கியமானவையாகும்.
தி.மு.க. அரசு - ஈரோட்டில் இருக்கும் தலைமைப் பொது மருத்துவமனைக்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டியது. ஈரோடு இரயில்வே சந்திப்புக்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுவதால், சூட்டியவர்களுக்குத்தான் பெருமை!
இதே கோரிக்கையை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் மக்களவையில் வைத்ததுண்டு (11.7.2019).
இரயில்வே நிலையங்களுக்கு ஒருவரின் பெயரைச் சூட்டுவது ஒன்றும் புதிதல்லவே! சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்டவில்லையா?
எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல - அவர் யார் பெயரால் கட்சியை வைத்திருக்கிறாரோ (அண்ணா தி.மு.க.), யார் உருவத்தைத் தம் கட்சிக் கொடியில் பொறித்துள்ளாரோ, அந்த அண்ணா கண்ட - கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் தானே.
அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரே சென்னை அண்ணா மேம்பாலத்தின்கீழ் தந்தை பெரியார் சிலையை நிறுவவில்லையா? அப்படிப் பார்க்கும் போது ஈரோடு பெருமகனாரின் கோரிக்கை உணர்வுப் பூர்வமானது - வரலாற்று அம்சத்தை உள்ளடக்கமாகக் கொண்டதும் ஆகும்.
காலம் வரும் காத்திருப்போம்!
No comments:
Post a Comment