ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என போராடிய சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாத், மேனாள் அய்.பி.எஸ் அதிகாரிகள் ஆர்.பி.குமார், சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளார்களே..? எங்கு போய் நிற்கும்?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: இது பாசிசத்தின் முழு வடிவில் - அரச பயங்கரவாதத்தில் தொடங்கி முடியுமோ என்ற அச்சத்தில் மக்கள் உறையும் நிலையையே உருவாக்கும்.

- - - - -

கேள்வி: அதிமுக தொண்டர்களுக்குத் தாய்க் கழகத் தலைவராக தங்கள் அறிவுரை என்ன?

-அ. தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: முதலில் நோய் நாடி, நோய் முதல் நாடுங்கள். இந்த பொம்மலாட்டத்தினை நடத்துவோரின் ஆதிக்கத்திற்கு 'அ.தி.மு.க. அடிமை நிலை' என்ற நிலையை மாற்றி, முன்பு ஜெ. அம்மையார் கேட்ட கேள்விக்குச் சரியான விடை காண முயலுங்கள்.

'லேடியா? மோடியா?' என்பதே அக்கேள்வி!

- - - - -

கேள்வி: பாஜக, மகாராட்டிரா போலவே மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களிலும் தனது பிரித்தாளும் வேலையை காட்டும் என்கிறார்களே ?

- த. திருவேங்கடராஜா, கத்தார்

பதில்: நிச்சயம் செய்வர் - மேற்கு வங்கத்தில் முன்பு முயன்று தோல்வி அடி வாங்கினர் - என்றாலும் தொடருவர் - முன் எச்சரிக்கையும், எப்போதும் சரியான விழிப்பு நிலையும் முக்கியம்.

"ஓடுபவராக இருந்தால் துரத்துவர்

ஒடுபவர் திரும்பி நின்று எதிர்த்தால் தான்

துரத்துபவர்கள் பின் வாங்குவார்கள்" - என்பது அரசியலில் பால பாடம்!

- - - - -

கேள்வி: தீவிர அம்பேத்கரியம் பேசும் தோழர்கள் கூட பிஜேபியின்  தலித் பிரதிநித்துவ நாடகத்திற்கு பலியாகி திராவிட இயக்கத்தில் இவை சாத்தியமா என்று கேட்கிறார்களே?

- அகிலன், நாகர்கோயில்

பதில்: அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். அம்பேத்கரியத்தைச் சரியாக அவர்கள் படித்திருந்தால், கண்ணி வெடியைப் புதைத்ததை அகற்றாமல் அதனைப் புகழ மாட்டார்கள். அட்டையை மட்டுமே பார்த்துவிட்டுப் புத்தகத்தை முழுமையாகப் படித்துப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள். "வில்லில் விரல் முக்கியம் - அம்புக்கு அதனை மீற ஏது சக்தி?" புரியவேண்டாமா இதை?

- - - - -

கேள்வி: அறிவியலுக்குப் புறம்பாகப் பேய் ஓட்டுதல் என்ற பெயரில் இளம்பெண்களைக் காட்டுமிராண்டித் தனமாக தாக்குவதைத் தடுக்க சட்டம் கொண்டுவர முடியாதா?

- நிறைநிலா, வளசரவாக்கம்

பதில்: நிச்சயம் வரவேண்டும் சட்டம் - வரும் - அழுத்தம் கொடுக்க வேண்டியது நமது கடமை!

- - - - -

கேள்வி: "அக்னி பத் வீரர்கள் என்ற பெயரில் பாஜக தொண்டர்களுக்கு வேலைத் தரமுடியாது. அதற்குப் பதிலாக எங்கள் மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிப்போம்" என்று மம்தா கூறியுள்ளாரே?

- பாலகங்காதரன், வியாசர்பாடி

பதில்: முதுகெலும்புடன் செயல்படும் முதல் அமைச்சர் என்று பிரகடனப்படுத்துகிறார் - வாழ்த்துகள்.

- - - - -

கேள்வி: சனாதன எதிர்ப்பு மாநாடுகள் நடந்த மாநிலத்தில், அதனைத் தூக்கிப் பிடிக்கும் ஆளுநரின் அட்டகாசம் தாங்க முடியவில்லையே,  இதற்கு என்னதான் தீர்வு?

- பவிநிதா, திருவள்ளூர்

பதில்: முடிவு உண்டு எதற்கும்! மக்கள் எழுச்சிக்கு அவர் வித்திட்டு விதைக்கு நீர்ப் பாய்ச்சட்டும். அறுவடை பிறகு யாருக்கு என்பது புரியும்.

- - - - -

கேள்வி: அயோத்தி கோயிலுக்கு நன்கொடை ரூ.5500 கோடி வந்துள்ளதாமே - இது எதைக் காட்டுகிறது?

- சங்கர் அப்பாசாமி, திருமுடிவாக்கம்

பதில்: ஆட்சி - கார்ப்பரேட் ஆட்சியானதால். இதில் என்ன அதிசயம்?

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான அப்பட்டமான விதி மீறல் - முரண் நிலை.

- - - - -

கேள்வி: தமிழ்நாடு அரசு சிதம்பரம் கோயில் பிரச்சினையை சரியாகக் கையாள்கிறதா? 

- இரா. காமராசு, திருவிடைமருதூர்

பதில்: கலைஞர் வழியே சிறந்த வழி. எதிலும் நிதானப் போக்குக் காட்டும் நமது "திராவிட மாடல்" முதல் அமைச்சர் உரிய முடிவை உரிய நேரத்தில் எடுப்பார் என்பது நிச்சயம் - அசரமாட்டார்! இது நமது உறுதியான நம்பிக்கை.

- - - - -

கேள்வி: கல்வித்துறை அதிகாரிகளை விட உள்ளூர் பிரமுகர்கள் ஆதிக்கத்தில் இயங்கும் பள்ளி மேலாண்மை குழுக்கள் பயன் தருமா?

- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை

பதில்: அனுபவம் தான் இதற்குரிய பதிலை அளிக்க முடியும்; நாம் அல்ல!


No comments:

Post a Comment