"காவல்துறையினர் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

"காவல்துறையினர் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும்"

காவல்துறை இயக்குநர்  

மதுரை, ஜூலை 3 காவல்துறை அரசாங்கத்தின் அங்கம், அது சட்டத்தின் பார்வையில் இருக்கிறது. காவல்துறையினர் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும், கோட்பாடுகளுக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரியில், காவல்நிலையங்களில் எதிர்பாரத விதமாக நடக்கும் மரணங்களை முன்கூட்டியே தடுப்பது குறித்து, தென்மாவட்ட அளவிலான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களை, மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் வரவேற்றார்.

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு கருத்தரங்கை தொடங்கி வைத்து காவல்நிலைய மரணங்களை தடுப்பது குறித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: "தமிழகத்தில் இனிமேல் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் போது ஒருவர்கூட உயிரிழக்கக் கூடாது, காவல் நிலையங்களில் மரணங்கள் நிகழக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர்   அறிவுறுத்தியுள்ளார். அதனை ஏற்று காவல்துறையினர் செயல்படவேண்டும். அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஒருவரை, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்ல வேண்டும். கடந்த 1902ஆம் ஆண்டிலேயே காவல்துறையினர் துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகமாக 2018இல் 18 மரணங்களும், 2021இல் 4 பேர், 2022இல் 2 பேர் காவல் நிலையங்களில் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்ததில், காவல்துறையினரின் பிழையால் 12 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சி.பி.சி.அய்.டி விசாரணையில் தெரியவந்துள்ளன. மற்ற 68 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் உடல் உபாதைகள், நோய்கள் காரணமாகவும், தற்கொலையாலும் உயிரிழந்துள்ளனர்.

நோய் காரணமாக உயிரிழந்தாலும் காவல்துறையினர் மீதே குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக 48 காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறை அரசாங்கத்தின் அங்கம், சட்டத்தின் பார்வையில் இருக்கிறது. சட்டத்திற்கும், மனசாட்சிக்கும், கோட்பாடுகளுக்கும் உட்பட்டு காவல்துறையினர் செயல்பட வேண்டும்" என்றார்.

ஒருங்கிணைந்த பொறியாளர் பணி 

 தேர்வை 68,414 பேர் எழுதினர்

சென்னை, ஜூலை 3  ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் காலியாக உள்ள 626 பதவிகளுக்கு நேற்று (2.7.2022) நடத்தப்பட்ட தேர்வை 68,414 பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் காலியாக உள்ள 626 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 3ஆம்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 68,504 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 68,414 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.

 சென்னை, புதுக்கோட்டை, கோவை, ராமநாதபுரம், சிதம்பரம், சேலம், காஞ்சிபுரம், காரைக்குடி, நாகர்கோவில், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, உதகமண்டலம், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 15 மய்யங்களில் இந்த தேர்வு  நடந்தது. 

காலை 9.30 மணி முதல் இத்தேர்வை 68,414  பேர் எழுதினர். தேர்வு நடைபெற்ற அனைத்து மய்யங்களிலும் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

தேர்வு நடந்த மய்யங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.

No comments:

Post a Comment