அன்றே எச்சரித்து வெளியேறிய யஷ்வந்த் சின்ஹா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 1, 2022

அன்றே எச்சரித்து வெளியேறிய யஷ்வந்த் சின்ஹா

பாஜகவின் மூத்த தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த  வருமான  யஷ்வந்த் சின்ஹா பிஜேபியிலிருந்து பதவி விலகுவதற்கு முன்பு அவர் எழுதிய கட்டுரை.

இந்த மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவை பின்னோக்கி கொண்டு சென்று இருப்பதுடன், சுதந்திர இந்தியாவில் 2014-வரை கட்டிக்காக்கப்பட்ட ஒன்றிய அரசின் மாண்பை சீர்குலைத்திருக்கிறது. 

பி.ஜே.பி. என்ற ஒரு தேசிய கட்சியின் தற் போதைய தலைமை  உட்கட்சி ஜனநாயகத்தையும் கெடுத்து, குறைந்தபட்ச சகிப்புத்தன்மையையும் இழந்து மீள முடியாத தோல்வியை நோக்கிக் கொண்டு  சென்று கொண்டிருக்கிறது என்கிறார். 

மேலும் அவர் கூறியதாவது: இந்திய பொரு ளாதாரம் உலகில் வேகமாக வளர்கிறது என்ற ஒன்றிய அரசின் கூற்று தவறானது; நாடு கடு மையான பொருளாதார சிக்கலில் உள்ளது. வேகமாக வளரும் பொருளாதாரத்தில் வங்கி களின் வராக்கடன்கள் இந்த அளவிற்கு நான்கு ஆண்டுகளில் குவியாது - வேகமாக வளரும் பொருளாதாரத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்க மாட்டார்கள், விவசாயிகள் இந்த அளவிற்கு துயரத்தில் இருக்க மாட்டார்கள், சிறு தொழில்கள் இந்த நான்கு ஆண்டுகளில் அழிந்தது போல அழிந்திருக்காது, சேமிப்பும், முதலீடும் இந்த நான்கு ஆண்டில் முற்றிலுமாக குறைந்திருக்காது.

ஊழல் ஒரு மோசமான உயரத்தை அடைந்திருக்கிறது. வங்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது. மோசடிப் பேர்வழிகள் எளிதாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடிகிறது. அரசு வேடிக்கை பார்க்கிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை என்பது வழக்கமாகி விட்டது. பாலியல்வன்கொடுமை செய்பவனை தண்டிப்பதற்குப் பதிலாக அவர் களுக்கு ஆதரவாக ஆளும் தரப்பு பேசுகிறது. சிறுபான்மையினர் தனிமைப் படுத்தப் பட்டு துன்புறுத்தப் படுகின்றனர். தலித்துகளும், பழங்குடியினரும் இதுவரை இல்லாத அளவு வன்கொடுமைக்குள்ளாக்கப் படுகின்றனர். அவர் களுக்கு  சம உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அடிப்படை உரிமைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவு மறுக்கப் படுகிறது. வெளியுறவுக் கொள்கை என்பது வெளிநாட்டு சுற்றுலா செல் வது, கட்டிப் பிடிப்பது என்ற அளவில் சுருங்கி தோல்வியடைந்து விட்டது.

சீனா நமது உரிமைகளின்மீது  தாக்குதலைத் தொடுக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை இந்தியாவிற்குள் தொடர்ந்து அனுப்பி வருகிறது. நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம். காஷ்மீர் பற்றி எரிகிறது. சாதாரண குடிமக்கள் இதுவரை இல்லாத அளவு துன்பத்தில் உள்ளனர். பா.ஜ.க. வின் உள் கட்சி ஜனநாயகம் நசுக்கப்பட்டு விட்டது. கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தில் கூட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச அனுமதி இல்லை. கட்சிக்குள் தகவல் தொடர்பு ஒரு வழி தொடர்பு என்றாகிவிட்டது. அவர்கள் பேசு வார்கள். நீங்கள் கேட்க வேண்டும். பிரதமர் யாரிடமும் பேசுவதில்லை. கட்சித் தலைமை அலுவலகம் ஒரு நிறுவன அலுவலகம் போல ஆகி விட்டது. தலைமை செயல் அதிகாரியைப் பார்ப்பது என்பது முடியாத காரியம்  ஜனநாயகம் கேள்விக்குறியாகி இருக்கிறது. நாடாளுமன்றம் ஒரு வேடிக்கையாகி விட்டது. பிரதமர் ஒருநாள் கூட எதிர்க்கட்சியினருடன் கலந்து  ஆலோசித் தது இல்லை.

வரலாற்றில் இல்லாத அளவு உச்சநீதிமன்ற நீதிபதிகளே பேட்டி கொடுக்கும் அளவிற்கு ஒன்றிய  அரசு நிர்வாகம் மோசமாக செயல்படுகிறது. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று தீர்ப்பில் சொல்லும் அளவிற்கு நிலைமை கைமீறிப் போயிருக்கிறது!  சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி 31 சதவீத ஓட்டுகளைத் தான் பெற்றது. அடுத்த முறை அனைத்து எதிர்க் கட்சிகளும் சேர்ந்தால் பிஜேபி இருக்கும் இடம் தெரியாது. நான் பிஜேபியில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். அமைதி காத்தது போதும். பேசுங்கள் அத்வானி, ஜோஷி, அரசில் இருப்பவர்களிடம் இருந்து கட்சியையும் நாட் டையும் மீட்டு நல்வழிப் படுத்துவது நம் கடமை.  இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா எழுதியிருந்தார். 

இதை விட ஒரு ஒப்புதல் வாக்குமூலமும், நேர்மையான விமர்சனமும் யாரும் சொல்ல முடியாது.


No comments:

Post a Comment