'விடுதலை' 'விடுதலை' 'விடுதலை' தோழர்களே, உங்களைத்தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

'விடுதலை' 'விடுதலை' 'விடுதலை' தோழர்களே, உங்களைத்தான்!

நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் 'விடுதலை' ஏட்டுக்கு 60 ஆண்டுகள் ஆசிரியராக அரும் பணியாற்றியுள்ளார். ஆகா... 60 ஆண்டு பணியாற்றினார் என்று கூறி நாம் ஆடல் பாடல்களை நடத்தவில்லை - தோரணங்களைக் கட்டவில்லை - வாண வேடிக்கை களைக் காட்டவில்லை.

மாறாக என்ன செய்கிறோம்! 60 ஆண்டு 'விடுதலை' ஆசிரியரா? இந்தக் கின்னஸ் சாதனையை எப்படி அணுகுகிறோம்?

60 ஆயிரம் 'விடுதலை' சந்தாக்களைச் சேர்த்து, 60 ஆண்டு காலம் 'விடுதலை'க்கு மாய்ந்து மாய்ந்து எழுதிய கரங்களில் அளிப்பது என்று தீர்மானித் துள்ளோம்.

இது போன்ற ஆக்க ரீதியான அணுகுமுறை என்பது நமது இயக்கத்திற்கு உரித்தான  தனித் தன்மையானது.

60 ஆயிரம் சந்தாக்கள் என்பது வருமானத்திற்கா? வியாபார நோக்கின் அடிப்படையிலா? இன்னும் சொல்லப் போனால் 'விடுதலை'யைக் கூடுதலாக அச்சிட, அச்சிட பொருளாதார நட்டமும் அதிகரிக்கும் என்ற பொருளாதார உண்மை பெரும்பாலோருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.

ஆனாலும், அதுதான் உண்மை!

பின் ஏன், சந்தா சந்தா என்று சதா அலைகிறோம் - காற்றாக வீசுகிறோம்.

'விடுதலை'யின் வாசகர்கள் எண்ணிக்கை பெருகப் பெருகத்தான் நம் மக்களுக்கு 'விடுதலை' கிடைக்கும் - மூடநம்பிக்கை விலகி ஓடும்  - பகுத்தறிவு மலர் மணம் விரிக்கும். சமூக நீதி காப்பாற்றப்படும் - அடுத்த கட்டத்திற்கு அதன் பரிணாமம் தலை தூக்கும்.

'நீட்' என்று நம் பிள்ளைகளின் கழுத்தை நெரிக்கும் தூக்குக் கயிறு துண்டிக்கப்படும் - பெண்ணடிமைத்தனம் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டம் பிடிக்கும்.

சனாதனம் சவக்குழிக்குப் போகும். ஆதிக்க சக்திகளின் அடி வயிறு கலங்கும் - அவர்களின் வேர் அழியும்.

எனவே தோழர்களே நமது தலைவர் ஆசிரியர் - 60 ஆண்டு காலம் ஆசிரியராக அரும் பணியாற்றுகிறார். அதற்காக 60 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் என்பது ஒரு குறியீடே!

நோக்கம் நம் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி மலர வேண்டும் - விடுதலை எழுச்சி பெற வேண்டும் என்பதுதான்.

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் 'விடுதலை' சந்தாவைப் பெற்று உற்சாகப் பதிகம் பாடியுள்ளார். அமைச்சர் பெரு மக்களும் அகமகிழ்ந்து வழங்குகின்றனர்.

தோழர்களே, தோழர்களே, ஒவ்வொரு தமிழர் வீட்டின் கதவுகளையும் தட்டுங்கள். 'விடுதலை'யின் வீர வரலாற்றை அந்த விடுதலையால் ஏற்பட்ட விளைச்சலைப் பக்குவமாக எடுத்துக் கூறுங்கள்.

இடையில் நாட்கள் அதிகம் இல்லை.  கூட்டத்தில் 'கோவிந்தா' என்று வைதிகர்கள் கூறுவதுபோல நாம் கூற முடியாது.

'எடுத்துக் கொண்ட இலக்கை முடிக்காமல் கண் துஞ்சோம்' என்ற கடமை உணர்வோடு இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறந்து பறந்து பணியாற்றுங்கள்! (பணியாற்றுகிறீர்கள் என்பதும் தெரியும்)

ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. இலக்கை முடிக்காததற்குச் சமாதானம் சொல்ல வேண்டாம் - சாமர்த்தியமான பதில்கள் கருஞ்சட்டைக்கரர்களுக்கானதல்ல.

ஒவ்வொரு வரும் அவரவர்க்குரிய பொறுப்புணர்வுக்கு பொறுப்பு ஏற்க வேண்டாமா? ஏற்க வேண்டியவர்களே நாம்!

அதிகம் சொல்லத் தேவையில்லை. நாம் பகுத்தறி வாளர்கள் அல்லவா!

கருஞ்சட்டை ரத்தினங்கள் அல்லவா! அய்யாவின் சீரிய தொண்டர்கள் அல்லவா!

அய்யாவுக்குப்பின் அன்னையாரின் அன்பான கட்டளைகளை நிறைவேற்றியவர்கள் அல்லவா?

அன்னையாரின் மறைவிற்குப் பிறகு, நமது  தலைவர் ஆசிரியரின் கடும் உழைப்பால் வார்த்தெடுக்கப் பட்டவர்கள் அல்லவா!

இதற்கான உறுதிப்பாட்டை - அடை யாளத்தை- இயக்க வரலாற்றில் நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் நம் ஒவ் வொருவரின் தலையிலும் விடிந்திருக்கிறது.

இடையில் சில நாட்களே! விரையுங்கள் - விரையுங்கள்! உழைப்போம்! உழைப்போம்! அதன் விளைச்சலை நம் ஆசிரியரின் அரும் கரத்தில் ஒப்படைப்போம்! ஒப்படைப்போம்!!

நினைவிருக்கிறதா நம் ஆசிரியரின் பொன்மொழி -

"நம்மால் முடியாதது - வேறு யாராலும் முடியாது

வேறு யாராலும் முடியாதது - நம்மால் மட்டுமே முடியும்!"

- இது வெற்றுச் சொற்கள் அல்ல - வெற்றியின்  வைரச் சொற்கள்!

எழுமின்! எழுமின்!!

வெற்றி நமதே!


- கலி. பூங்குன்றன்

சென்னை பொறுப்பாசிரியர், விடுதலை

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

27.7.2022 


No comments:

Post a Comment