மாணவச் செல்வங்களே விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்திடுங்கள்!
பழைமைவாதத்தைப் புறந்தள்ளி, பகுத்தறிவுப் பாதையில் நடைபோடுவீர்!
அண்ணா பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகுத்தறிவு சங்கநாதம்!
சென்னை, ஜூலை 29 பழைமைவாதங்களைப் புறந் தள்ளி, பகுத்தறிவுப் பாதையில் விஞ்ஞான மனப்பான் மையுடன் உங்கள் எதிர்காலத்தை வளர்த்துக் கொள்வீர் என்று இருபால் மாணவர்களுக்கும் கருத்துரை புகன்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.7.2022) சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
உலகளாவிய செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேற்று (28.7.2022) நம்முடைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.
செஸ் ஒலிம்பியாட் என்பது இந்தியாவில் நடப்பது இதுதான் முதல்முறை, ஆசியாவில் நடப்பது மூன்றாவது முறை என்கின்ற உலகளாவிய பெருமை நமக்கு கிடைத் திருக்கிறது. உலகச் சதுரங்க அரங்கில் இந்தியாவின் மதிப்பு நேற்று முதல் வானளாவிய அளவுக்கு முன் னேற்றம் கண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் உலக அளவில் பெருமை சேர்க்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடருக்கான தொடக்க விழாவை நேற்று தொடங்கி வைத்ததற்காக மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு இன்று மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களுக்கு வாழ்த்துகள்!
இங்கு தமிழ்நாட்டின் அடுத்த பெருமையை சொல்ல வேண்டிய தருணம், ஒன்றிய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தேசிய உயர்கல்வி நிறு வனங்களுக்கான N.I.R.F தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கக்கூடிய நிறுவனங்களில் மிகப் பெரு வாரியானவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது அனைவருக்கும் தெரியும். இத்தகைய உயர்கல்வியில் மேன்மை பெற்ற தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருக்கக் கூடிய மாண்புமிகு பிரதமர் அவர்களை உங்கள் அனைவரின் சார்பில் நான் அன்புடன் வரவேற்கிறேன்.
கையில் பட்டத்துடனும், கண்களில் கனவுகளோடும் அமர்ந்திருக்கக் கூடிய மாணவ, மாணவியர் அனை வருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
காஞ்சியில் பிறந்த வள்ளுவன் - பேரறிஞர் அண்ணா அவர்களது பெயரில் அமைந்துள்ள பல்கலைக் கழகத் தின் பட்டமளிப்பு விழா இது.
அறிஞர் அண்ணா கூறியது என்ன?
பேரறிஞர் அண்ணா அவர்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசும் போது சுட்டிக் காட்டியதைச் நான் சுருக்கமாக, உங் களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன், அதை என்னு டைய கடமையாகக் கருதுகிறேன்.
இந்த பட்டம் யாருக்காக? உங்களுக்காகவா?
உங்களுக்காக மட்டுமல்ல, நாட்டுக்காக!
பட்டம் பெற்ற நீங்கள்தான் இந்த நாட்டின் திருவிளக்கு.
நாட்டைச் செழிக்கச் செய்யக்கூடிய வல்லுநர்கள் நீங்கள்தான்.
தமிழ் - உமது முரசம்,
பண்பாடு - உமது கவசம்,
அறிவு - உமது படைக்கலன்,
அறநெறி - உமது வழித்துணை,
உறுதியுடன் செல்வீர்.
ஊக்கமுடன் பணிபுரிவீர்,
ஏற்றமிகு வெற்றியினை ஈட்டிடுவீர்!"
- என்று பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைத்தான் உங்கள் அனைவருக்கும் நான் எடுத்துக்காட்டிட விரும்புகிறேன்.
இந்தப் பட்டத்தோடு உங்களது படிப்பு முடிந்துவிட வில்லை. அடுத்த பட்டத்தை நோக்கி உயருங்கள். பட்டங்கள் என்பவை, வேலை வாய்ப்புக்காக மட்டுமல்ல, உங்களது அறிவாற்றலை மேம்படுத்துவதற்காக என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.
உங்களுக்குப் பட்டம் வழங்கும் விழாவுக்கு இந்திய நாட்டினுடைய பிரதமர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடிய பிரதமரே முதன்மை விருந்தினராக வருகை தந்துள்ளார். இது உங்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய பெருமை.
'நான் பட்டம் வாங்கும்போது பிரதமரே வந்திருந்தார்' என்று உங்களது எதிர்காலப் பிள்ளைச் செல்வங்களிடம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்! இத்தகைய பெருமைகளோடு எதிர்காலத்துக்குள் நீங்கள் நுழை கிறீர்கள். அறிவாற்றல்தான் அனைத்திலும் வலிமை யானது என்பதை உணருங்கள்.
ஜாதி - மதம் - பணம் - அதிகாரம் - வயது - அனுபவம் - பதவி - நாடுகள் - வளர்ச்சி ஆகிய அனைத்தின் தன்மையும் ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால், அறிவு மட்டும் தான் அனைத்தையும் கடந்து ஒரே அளவுகோலோடு அளவிடப்படுகிறது.
'திராவிட மாடல்' அரசு
தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள். கடல்வணிகம், கடற்படை, இரும்பு வார்க்கும் தொழில்நுட்பம், கல்லணை, தஞ்சை பெரிய கோவில் என வரலாற்றில் நிலைத்திருக்கும் பல படைப்பு களைத் தனது தொழில்நுட்ப அறிவால், எல்லோருக்கும் முன்னோடியாகத் தமிழன் படைத்திருக்கிறான்.
கல்வி என்பதுதான் யாராலும் திருட முடியாத, பறிக்க முடியாத சொத்து. அதனால்தான், படிப்புக்கு மட்டும் எத்தகைய தடைக்கல்லும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். அதனால்தான் இன்றைய 'திராவிட மாடல்' தமிழ்நாடு அரசானது, கல்விக் கண்ணைத் திறப்பதையே பெரும்பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தின் முழுமுதல் கொள்கை யான சமூகநீதிக்கு அடிப்படை என்பதே கல்விதான்.
தமிழ்நாடு அரசின் கல்விச் செயற்பாடுகள்
அனைவரும் படிக்கவேண்டும், அனைவரும் வேலைவாய்ப்பைப் பெற வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது. அதற்காகவே சமூகநீதிக் கருத்தியலும் தோன்றியது.
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரிக் கல்வி, அனைவருக்கும் உயர் கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
· இல்லம் தேடிக் கல்வி
· எண்ணும் எழுத்தும் திட்டம்
· முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
· நான் முதல்வன்
· கல்லூரிக் கனவு
· அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில மாதம் 1000 ரூபாய் நிதி உதவி
· அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற் படிப்புகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு - அவர்களுக்கான கட்டணங்களை அரசே ஏற்பு
· டாடா நிறுவனத்துடன் இணைந்து சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் மி.ஜி.மி.கள் தொழில்நுட்ப மய்யங்களாகத் தரம் உயர்வு
· இனமானப் பேராசிரியர் அன்பழகனார் பெயரில் பள்ளிகள் சீரமைப்பு
· பெருந்தலைவர் காமராசர் பெயரால் கல்லூரிகள் சீரமைப்பு ஆகிய ஏராளமான திட்டங்களின் மூலமாக தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை நிகழ்த்தி வருகிறோம்.
படிப்பு என்பது என்ன?
படிப்பு என்பதைவிட பட்டத்தோடு மட்டுமே சுருக்கி விடாமல், வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம், சமூக வளர்ச்சி ஆகிய படிநிலையிலும் உயர்த்தும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். படித்து முடித்து வெளியில் வருபவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உடனுக்குடன் உருவாக்கித் தரும் சூழலை உருவாக்கி வருகிறோம்.
இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலமாக, ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன. அதனால்தான், தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இருந்து ஒரே ஆண்டில் 3 ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது நம்முடைய தமிழ்நாடு.
புதிய புதிய தொழில்களை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு அரசு தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஓராண்டில், செமி-கண்டக்டர்கள், மின் வாகனங்கள், லித்தியம்-அயன் பேட்டரிகள், ஒருங்கிணைந்த சூரிய ஒளி மின்னழுத்திகள் (Solar Photovoltaic) உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன்(Green Hydrogen), தரவு மய்யங்கள் (Data Centre) போன்ற துறைகள் சார்ந்த திட்டங்கள், தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்குத் தேவையான அறிவுத் திறனை உருவாக்கவே 'நான் முதல்வன்' திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.
தொழில்நுட்ப மாற்றம்
ஆண்டுதோறும் மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 10 இலட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் திட்டமிட மேற்கொண்டுள்ளோம். அவர்களுக்கு வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்து, அவர்களின் திறமையை அவர்களுக்கு உணர்த்தி, அதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவே நன்மை பெற்றிடும் வகையில், இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி (Industry 4.0) என்ற அந்த அடிப்படைக்கேற்ப, நமது இளைஞர்கள் தயாராக வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். தொழிற்சாலைகளையும் தரம் உயர்த்த தொழில் புத்தாக்க மையங்களை (Industrial Innovation Centres) உருவாக்கி வருகிறோம்.
நான் அடிக்கடி சொல்லி வருவதுபோல, 2026-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும். அதில் நீங்களும் இடம் பெற்றாகவேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். அதிலும் உங்கள் பங்கு இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய உலகத்தை உருவாக்க நீங்கள் உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள். உங்களை அனைத்து வகையிலும் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது வளர்ச்சிக்குத் தடையாக எது இருந்தாலும், அதனை தகர்த்து முன்னேற்றம் காணுங்கள்.
தேவை அறிவியல் மனப்பான்மை!
உங்களது கனவுகளை மட்டுமல்ல, உங்களது பெற்றோர் கனவுகளையும் நிறைவேற்றுங்கள். உங்களிடம் இருந்து இந்த மாநிலமும், இந்திய நாடும் நிறைய எதிர்பார்க்கிறது. தமிழ்நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்கிறீர்கள்.
அரசமைப்பு வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பழைமைவாதத்தைப் புறந்தள்ளி, புதிய கருத்துகளை ஏற்று, பகுத்தறிவுப் பாதையில் நடைபோட்டால்தான் நீங்கள் பெற்ற பட்டத்திற்குப் பெருமை!
இன்றுமுதல் நீங்கள் பட்டதாரிகள் மட்டுமல்ல; உலகெங்கும் வலம்வரப் போகும் இந்தியாவின் - தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர்கள்!
என் அன்புக்குரிய மாணவ, மாணவியர்க்கு என்னுடைய அன்பான வாழ்த்துகளும், அறிவான பாராட்டுகளும் எப்போதும் உண்டு.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற்காலத்தை உருவாக்க தொடர்ந்து அயராது உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்!
நன்றி! வணக்கம்!
- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
No comments:
Post a Comment