சிறை இலக்கியம் படைத்த சிந்தனைச் செல்வர் தோழர் பாலன் (3) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

சிறை இலக்கியம் படைத்த சிந்தனைச் செல்வர் தோழர் பாலன் (3)

 சிறை இலக்கியம் படைத்த சிந்தனைச் செல்வர் தோழர் பாலன் (3)

சீரிய கொள்கை வீரரான மார்க்சிஸ்ட் தோழர் 

கே.பாலதண்டாயுதம் அவர்களது இந்த நூலை நம் இளைஞர்களும், கொள்கையாளர்களும் முழுமையாகப் படித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காகவே அவருடைய சிறைக் குறிப்புப் பதிவுகள் சிலவற்றை வாசக நேயர்களுக்கு எடுத்துக் காட்டினோம்.

அவருடன் சில காலம் பழகவும், அவர் பெரியார் திடலுக்கே வந்து சந்தித்து - நாங்கள் நீண்ட நேரம் கொள்கை உரையாடலை நடத்தி மகிழ்ந்த வாய்ப்புகளும் மறக்க முடியாதவை.

திருத்துறைப்பூண்டிக்கு அருகே கச்சனம் என்ற ஒரு ஊர் உண்டு; அங்கே ஜாதி ஒழிப்பு மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தியது; அதில் தந்தை பெரியார், ஈ.வெ.கி. சம்பத், தோழர் கே.பாலதண்டாயுதம் முதலியோர் கலந்து கொண்டு ஆற்றிய உரைகள் மிகச் சிறப்பானவை!

நானும் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது மட்டுமின்றி, தோழர் கே.பாலதண்டாயுதத்தினை சென்னையிலிருந்து கச்சனம் அழைத்துப் போகும் பொறுப்பையும் தோழர்கள் என்னிடத்தில் ஒப்படைத்திருந்தனர்!

அவருக்கென சென்னை தியாகராயர் நகருக்குக் கார் அனுப்பி அவர் பெரியார் திடல் வந்தபிறகு நாங்கள் இருவரும் இணைந்தே பயணம் சென்றோம்.

அப்படிப் போகும் போதுகூட, நீண்ட நேரம் உரையாடி மகிழும் நல்வாய்ப்பும் கிட்டியது. அப்போது அவர் "கம்யூனிஸ்ட் கட்சி செய்யத் தவறிய பணி ஜாதி ஒழிப்புக்கான தீவிரப் பிரச்சாரம் - போராட்டங்களை முன் எடுக்காமல், வருணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வர்க்கப் பேதம் என்பதையே பேசி வந்தது.  இந்திய நாட்டைப் பொறுத்து தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் வருணபேதத்தை சரியாகக் குறி வைத்து, ‘தொடர்' பணிகளைச் செய்வது மிகச் சரியானது.

இடதுசாரிகளும், திராவிடர் கழகம் போன்ற முற்போக்குக் கொள்கையாளர்களும் இதில் இணைந்து ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிட முன் வருதல் காலத்தின் கட்டாயம்" என்று பகிரங்கமாக தங்கள் கட்சி செய்யத் தவறியது - இனி அதிகமாகச் செய்ய வேண்டியது ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் - பெரும் கிளர்ச்சிகள்தாம் என்று ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி மனதிற்பட்டதை ஒளிக்காமல் சொன்னார்!

கச்சனம் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பேசியபோது, இதே கருத்தை அப்பட்டமாக விளக்கி, "இனி எங்கள் கட்சி இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டுமென்று கட்சிக் குழுவில் வற்புறுத்துவேன்" என்று கூறியபோது, மேடையில் கேட்டுக் கொண்டிருந்த தந்தை பெரியார் கைதட்டி வரவேற்று ஆமோதித்து மனமகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

மாநாட்டுப் பந்தலே கைதட்டலில் அதிர்ந்தது; அதை விட தோழர் பாலன் அவர்கள் அன்றைய உரையில்,

"சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக நான் இருந்த போது, சிறைப் பார்வையாளர் (யிணீவீறீ ஸ்வீsவீtஷீக்ஷீ) என்ற முறையில் என்னைப் பார்த்து சர். பி.டி.ராஜன் அவர்கள் நலம் விசாரித்த போது, ‘என்ன நீ நம்ம பையனாக இருந்தும் இப்படிப்பட்ட காரியங்களில் மாட்டி ஜெயிலுக்கு வந்திருக்கிறாயே' என்று கரிசனத் துடன் விசாரித்தார்!

அப்படி விசாரித்த சர். பி.டி.இராஜன் அவர்கள் ஜஸ்டீஸ் கட்சிக்காரர்; அவர் கம்யூனிஸ்ட் அல்ல; அவருக்கும் எனக்கும் அதிக பழக்கமும் கிடையாது. பிறகு ஏன் அவர் ‘நீ நம்ம பையனாக இருந்தும்' என்று கூறி தனது ஆதங்கத்தை தெரிவிக்கிறாரே - ஏன் என்று நான் நன்கு ஆழமாக யோசித்தப் பிறகுதான் தெரிந்தது அவர் எந்த உணர்வில் இதைக் குறிப்பிட்டார் என்று.

அவர் சார்ந்த ஜாதிக்காரனாம் நான்! ‘கம்யூனிஸ்ட் களுக்கு ஜாதி கிடையாது; இருக்கக்கூடாது; இவரோ எனக்கு அனுதாபம் காட்டக்கூட காரணமானது அந்த ஜாதி தான். கொள்கையால் மாறுபட்ட பெரு நிலக் கிழாரான அவர், கம்யூனிஸ்ட்டாகிய நான் - எங்களை இணைக்கும் பார்வை ஜாதிப் பார்வையாகத் தான் இன்றும் (அது 1965 என்று நினைப்பு) உள்ளது" என்று சொல்லியதைக் கேட்ட தந்தை பெரியார் சிரித்தார்; கூடியிருந்த கூட்டத்தினர் வெகுவாகக் கைத்தட்டி ஆமோதித்தனர்.

ஆணித்தரமாகவும், கருத்துச் சுவையோடும், அருமையாக சரளமான தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் உரையாடத் தவறாத  அவர் சிறையில் இருந்தபோது அவருடன் சிறையில் இருந்தவர்கள் பெருந்தலைவர் காமராசரும், இராஜாஜியும் ஆவர் என்பதும் குறிப்பிடத்தகுந்ததல்லவா?

அவரது விடுதலைக்கு (முறைப்படியானதுதான்) காமராசர் பங்களிப்பும் இருந்தது என்பதும் ஓர் அரிய உண்மையாகும்.

- நிறைவு


No comments:

Post a Comment