சென்னை, ஜூலை 27 சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அழைப்பு மய்யத்தில் நேற்று (26.7.2022) திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொலைபேசியில் பொதுமக்களின் புகார் குறித்து கேட்டறிந்தார்.
நாவலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி முடிந்தபின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அழைப்பு மய்யத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஈரோட்டிலிருந்து அழைப்பு மய்யத்தை தொடர்பு கொண்டவரிடம், அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர், புதுக்கோட்டை மாவட்ட துணை ஆணையர் ஒருவரை தொடர்புகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அழைப்பு மய்யத்திற்கு வரும் தொலைப்பேசி அழைப்புகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க காலதாமதமாவது ஏன் என்பது குறித்து கேட்டறிந்தார். அழைப்பு மய்யத்திற்கு வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அலுவலகத்தை முதலமைச்சர் தொடர்பு கொண்டு, அழைப்பு மய்யத்திற்கு வந்த புகார்களின் மீதான அம்மாவட்ட அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
No comments:
Post a Comment