1960களில் பிறமாநிலத்தவர்களுக்கு எதிராக, குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான கலவரங்களை கட்டவிழ்த்ததன்மூலம் உருவான சூப்பர் இந்துத்துவ அமைப்புதான் சிவசேனா. இந்துத்துவ அரசியல் முன்னெடுப்புகளில் இந்த அமைப்பு பிஜேபிக்கு முன்னுதாரணமாக இருந்தது என்றும் கொள்ளலாம். அரசியல் நையாண்டிகள் (political satire) உள்ளடக்கிய கார்டூன்களை வெளியிட்டு வந்த பால் தாக்கரே மக்களி டம் குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் செல்வாக்கைப் பெறத் தொடங்கினார். எல்லா அரசியல்வாதிகளையும் போன்று பால் தாக்கரே ஊழலுக்கு எதிரான கார்டூன் களைப் போட்டு மக்கள் செல்வாக்கை பெற்றார். மராத்தா இளைஞர்களுக்காக அவர்களது எதிர்காலத்திற்காகப் பாடுபடும் போராளியாக மாபெரும் சக்தியாக மக்களிடம் தன்மீது ஒரு பிம்பத்தை கட்டமைத்துக் கொண்ட கார்டூனிஸ்ட் பால் தாக்கரே, 1966இல் சிவசேனா என்ற அரசியல் கட்சியை நிறுவி மகாராட்டிர அரசியலில் தன் இருப்பை பலப்படுத்திக்கொண்டார்.
சிவசேனாவினர் பம்பாய்வாழ் தமிழர்கள்மீது அராஜகத்தை, அட்டூழியத்தை, வன்முறையை கட்ட விழ்த்து விட்டிருந்த நிலையில், தமிழர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன், தந்தை பெரியார் சிவசேனா எதிர்ப்பு மாநாட்டை செப்டம்பர் 1967இல் திருச்சியில் கூட்டினார். அதற்கடுத்த மாதம் அக்டோபரில் சென்னையில் ஒரு மாபெரும் சிவசேனா எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினார்.
பாபாசஹேப் அம்பேத்கரின் Riddles in Hinduism என்ற நூல் இந்துக்களின் கடவுள்களை அவமானப்படுத்துகிறது. ஆகவே அந்த நூலை தடை செய் என்ற முழக்கத்துடன் 1988 சனவரிமாதம் சிவசேனா பெரும் கலவரத்தை நடத்தியது. பாபாசாஹேப் உருவச்சிலைகள் பல இடங்களில் சேதமுற்றன. குடியரசு கட்சியின் தலைவராக இருந்த ராம்தாஸ் அதாவலே தமது தொண்டர்களுடன் பால்தாக்கரேவிற்கு எதிர் போராட்டத்தை நடத்தி சிவசேனாவிற்கு செக் வைத்தார். சிவசேனாவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாபெரும் தலித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே 2011 முதல் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஒரு அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு அமைதியாகி விட்டார்.
1992இல் இஸ்லாமியர்களுக்கெதிராக சிவசேனை கட்சியினர் பெருங்கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டனர். இஸ்லாமியர் பலர் கொல்லப்பட்டனர். இஸ்லாமியர் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன. இந்த கலவரத்தால், பால் தாக்கரே ஆறு ஆண்டுகள் தேர்தலில் பங்கெடுக்கக்கூடாதென்று தேர்தல் ஆணையம் தடை பிறப்பித்தது. அதன்பின்னர் சிவசேனா கட்சி இந்துத்துவ அரசியலை மிக மும்முரமாக அதே சமயம் மிகுந்த சாமர்த்தியத்துடனும் முன்னெடுக்கத் தலைப்பட்து.
பால் தாக்கரே மறைவுக்கு (2012)பின் தாக்கரேயின் மூன்று மகன்களில் மூத்தவர் உதவ் தாக்கரே தலைமைக் குவந்தபின், பங்காளி சண்டையால் கட்சி சரிவை சந்திக்கத் தொடங்கியது. அதேநேரத்தில் கலவரங்களும் சற்றுக் குறைய தொடங்கிற்று.
கடந்த தேர்தலில்(2019)பிஜேபியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா, பிஜேபியுடன் ஆட்சி அமைக்க விரும்பியது. பிஜேபி ஒத்துவராததால், சரத்பாவர் போன்றோரின் உதவியுடன் ஆட்சி அமைத் தது.
சிவசேனாவின் உத்தவ் தாக்கரேயுடன் ஆட்சி யமைக்க விரும்பாத பஜக இப்போது அதே சிவசே னாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சியில் பங்கெடுத்துள்ளது. இது சனநாயக படு கொலை. இதன் நோக்கம் எளிமையானது. சிவசேனாவை விழுங்கி கபளீகரம் செய்துவிடுவது. வருகின்ற தேர்தலில் பாஜக தனித்து ஆட்சி அமைப்பது. சிவசேனா உடைய வேண்டிய அமைப்புதான். அது இந்துத்துவ அமைப்பு. சனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் முரணான கட்சி. மதத்தை ஜாதியை முன்னிறுத்தி நடத்தும் அரசியலை வெறுத்து ஒதுக்க வேண்டியது அவசியம். அவசரம்.
- பேரா. முனைவர்.சுவாமிநாதன் தேவதாஸ்
No comments:
Post a Comment