ஜனநாயகமா - காவி நாயகமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

ஜனநாயகமா - காவி நாயகமா?

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அங்கு ஆட்சியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை ஏலம் எடுத்து ஆட்சி நடத்தும் அசிங்க அரசியலை நடத்தி வருவது வெட்கக் கேட்டுக்குப் பிறந்த வெட்கக் கேடு! கோவா, கருநாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் சில வட மேற்கு மாநிலங்களில் இந்த ஏல அரசியலை நடத்தி மக்களாட்சியின் மாண்பை அசிங்கப் படுத்தியது பா.ஜ.க.. 

மணிப்பூரில் ஆரம்பித்து கோவா, கருநாடகா, உத்தராகண்ட், நாகாலாந்து, மிசோரம்,  மத்தியப் பிரதேசம், மராட்டியம் எனத் தொடரும் இந்தக் கேவலங்களின் மூலம் மக்களாட்சி முறைக்கு வேட்டு வைக்கப்படுகிறது. மேலேகூறிய அனைத்து மாநிலங்களிலும் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட பாரதிய ஜனதா சட்டத்திற்குப் புறம்பாக சகலவித தில்லுமுல்லுகள் மூலமே ஆட்சியில் அமர்ந்துள்ளது! 

தேசியக் கட்சிகள் தங்களின் அதிகாரப் பலம் குன்றிவிடக்கூடாது என்பதற்காக தேசியம் என்ற பெயரில் அம்மாநில மக்களை மயக்கி, மாநில உரிமைகள் குறித்து சிந்திக்கவிடாமல் செய்திருந்தனர். இதன் விளைவு தற்போது கருநாடக மொழி உரிமை சிதைந்து, அவர்கள் தங்களின் மொழி கன்னடம் என்று சொல்வதற்குக்கூட போராட வேண்டிய சூழல் உள்ளது.   தேசியம் என்ற பெயரில் பாஜக கருநாடக தலைவர்களின் வரலாறுகளை அழித்து அந்த இடத்தில் மதம் சார்ந்த தலைவர்களது -  கோல்வால்கர், சாவர்க்கர் குறித்த பாடங்களை வைத்து வருகிறது.

 இதன் மூலம் இளைய தலைமுறையினர் கருநாடக உரிமைக்காக போராடியவர்களை தவிர்த்து ஆங்கிலேயர்களிடம் 17 முறை மன்னிப்பு கேட்ட சாவர்க்கர் மற்றும் பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவருக்குமே கல்வி அறிவைத் தருவது ஆபத்து என்று கூறிய கோல்வால்கரையும் படிப்பார்கள். அவர்களின் சிந்தனைதான் சரியானவை என்று அவர்களின் உள்ளத்தில் புகுத்தும் வேலைகள் திட்டமிட்டு நடைபெறுகின்றன. மகாராட்டிராவில் முதல் முதலாக மாநில அரசியல் கட்சி நடத்திய ஆட்சியை உடைத்துள்ளது பா.ஜ.க.

ஒரே இந்துத்துவ கொள்கையால் மகாராட்டிராவில் பாஜகவுடன் சிவசேனா உறவு பூண்டு, கூட்டணி கண்டது. ஆனால், 25 ஆண்டு கால நட்பில் தான் இளைத்தும், பா.ஜ.க. பெருத்தும் வருவதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டது! அதனால், பாதை மாறி, பயணத்தை தொடர்ந்தது! 

2019ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று மராட்டிய ஆளுநர் பகத்சிங் கொஷியாரி அதிரடியாக அதிகாலை மூன்று மணிக்கு பா.ஜ.க.வின் தேவேந்திர பட்நாவிசை முதல்வராகவும், தேசிய காங்கிரசை சேர்ந்த அஜீத் பவாரை துணை முதல்வராகவும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  80 மணி நேரமே, அதாவது மூன்று நாட்களே தாக்குப்பிடித்த இந்த அவசர கோல ஆட்சி அற்ப ஆயுளில் செத்துப் போனது.  

அப்பொழுது இந்த அநாகரிக செயலுக்கு , சிவசேனா கட்சிக்கு பாரதீய ஜனதா கட்சி இழைத்த அநீதியையும், நம்பிக்கைத் துரோகத்தையும் எதிர்த்து முண்டா தட்டியவர் ஏக்நாத் ஷிண்டே! அந்த அநீதிக்குப் பாடம் புகட்ட எதிரணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து மகராட்டிர விகாஸ் கூட்டணி  ஏற்படுத்தி, உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதில் மும்முரமாக பணியாற்றி, அவ்வாட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர் தான் ஏக்நாத் ஷிண்டே!

இன்று அவர் 15 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் ஓடிப் போய் அசாம் ஓட்டலில் பதுங்கி, உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கவிழ்த்து, தானே முதலமைச்சர் ஆகிவிட்டார்.

 2014 தேர்தலில் மோடி வெற்றி பெற்றபின் சிவசேனாவும், பாஜ கவும் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பா.ஜ.க. (122) சிவசேனா(63) கூட்டணி ஆட்சி  - தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் அமைந்தது, சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பொதுப் பணித்துறை அமைச்சரனார்.

2019-இல் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இவ்விரு கட்சிகளும் தேர்தலுக்குப்பின் அவ்வணிக்கு பெரும்பான்மை இருந்தும் ஓரணியில் இருக்க இயலாமல் பிரிந்து விட்டனர் . இதற்கு பல காரணங்களைப் பலர் கூறினாலும், பாரதிய ஜனதா, சிவசேனாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறியதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, முறிவும் நேர்ந்தது. நம்ப வைத்து கழுத்தறுக்க துடித்த பா.ஜ.க.வை சிவசேனா முன்கூட்டியே தெரிந்துகொண்டது.

உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளை இணைத்து மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. தேவையின் அடிப் படையில் அமைந்த இந்த ஆட்சி இரண்டு ஆண்டுகளைக் கடந்து விட்டது. மதவெறி கலவரங்களற்ற அமைதியான ஆட்சியையும் தந்தது. உத்தவ் தாக்கரே அரசின் இந்தப் போக்கை பா.ஜ.க. ரசிக்கவில்லை. 

அரசியல் சட்டம் வழங்கியுள்ள தேர்தலின் மூலம் அமையப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பது என்ற கீழ்த்தரமான ஒரு புதிய கலாச்சாரமாக பாஜக  உருவாகிவிட்டது. இந்த உருமாற்றம் இந்திய மக்களை, இந்தியாவின் மனசாட்சியை  ஏன் உறுத்தவில்லை?

தீமையைக் கண்டு பொங்குவதும், அநீதியை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் நமது கலாச்சார பண்புகளில்லையோ என்று எண்ணு மளவிற்கு மக்களின் தீர்ப்புகள்  காலில்  போட்டு மிதிக்கப்படுகின்றன. ஜனநாயகம் காவி நாயகமாகி விட்டது.  

இந்த சீரழிவை தட்டிக்கேட்க வேண்டிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களோ, தேர்தல் ஆணையமோ பாராமுகத்தினராக இருப்பது மனுவின் மனப்பான்மையைத்தான் நினைவூட்டுகிறது.

கட்சி சார்பில் தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சுய லாபத்திற்காக ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதை தவிர்க்க, இயற்றப்பட்ட கட்சி தாவல் தடை சட்டம் இன்று வலுவிழந்து  காணப் படுகிறது.  இதில் உள்ள ஓட்டைகளின் மூலம் நீதி மன்றங்களின் கண்களில் மண்ணைத் தூவும் பாஜகவினர் மக்களை முட்டாளாக்குவதில் சாணக்கியர்களாக உள்ளனர். 

மோடியின் தலைமையில் பா.ஜ.க. பண பலம், ஆள் பலம், அதிகார பலம் ஆகியவற்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை ஆசை காட்டி, அல்லது அச்சுறுத்தி தேவைப்பட்டால் ஆட்களையும் கடத்தி தங்கள் கைப்பாவை அரசுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.  

காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பவர்களின் உண்மை நோக்கம்  - எதிர்ப்பார் இல்லாத இந்தியா தான்! அதற்காக, பாஜகவினரோ ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக காங்கிரசை மட்டுமல்ல, ஏனைய கட்சிகளையும் விட்டு வைக்கவில்லை.  

நீதித்துறை, தேர்தல் ஆணையம், திட்டக் குழு, ரிசர்வ் வங்கி முதலிய தன்னதிகார நிறுவனங்களின் வேர்கள் வெட்டப்படுகின்றன. விரும்பாதவர்களை அடைத்து வைக்க காவல்துறையும், சிறைகளும் உள்ளன. கீர்த்திகளைப் பரப்ப ஊடகங்கள் உள்ளன.அதை வைத்து என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொழுப்பு பி.ஜே.பி. - சங்பரிவார் தலைகளுக்கு மேல் வழிந்து கண்களை மறைக்கிறது. மக்கள் விழிக்காவிட்டால் மரணவோலைதான்!

 

No comments:

Post a Comment