சென்னை, ஜூலை 29 கால நிலை மாற்றத்தின் காரணமாக ‘மெட்ராஸ் - அய்’ எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு தற்போது பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிக அளவில் அப்பிரச்சினை ஏற்படுவதாக கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள கண் மருத்துவமனைகளில் நாள்தோறும் அய்ம்பதுக்கும் மேற்பட்டோர் ‘மெட்ராஸ் - அய்’ பாதிப்புக்காக சிகிச்சை பெற வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் - அய்’ எனக் கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, ‘மெட்ராஸ் - அய்’ பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று பரவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் இந்த நிலையில், ‘மெட்ராஸ் - அய்’ தொற்று அண்மைக்காலமாக கணிசமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அகர்வால் கண் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவர் சவுந்தரி கூறியதாவது: ‘மெட்ராஸ் - அய்’ எளிதில் குணப்படுத்தக்கூடிய மிகச் சாதாரணமான நோய்த் தொற்றுதான். ஆனால், அதனை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலந்தாழ்த்தி அலட்சியம் செய்தால் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டு விடும்.
கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை ‘மெட்ராஸ் - அய்’-யின் முக்கிய அறிகுறிகளாகும்.
பொதுவாக ஒரு கண்ணில் ‘மெட்ராஸ் - அய்’ பிரச்சினை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். கடந்த சில வாரங்களாக நாளொன்றுக்கு குறைந்தது 2 பேருக்காவது ‘மெட்ராஸ் - அய்’ பாதிப்பு இருப்பதை நான் உறுதி செய்கிறேன் என்றர் அவர்.
சர்க்கரை நோயால்
கண் பாதிப்பு: குறைகிறது
புதுடில்லி. ஜூலை 29 சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு, பிற கண் பாதிப்புகள் அண்மைக்காலமாக குறைந்து வருவதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
பன்னாட்டு சர்க்கரை நோய் கூட்டமைப்பு (அய்.டி.எஃப்.) 2019-ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி உலகம் முழுவதிலும் 46.30 கோடி பேர்களும், இந்தியாவில் 7.70 கோடி பேர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்களில் 6-இல் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வரும் 2040 ஆம் ஆண்டில் அய்ரோப்பிய நாடுகளில் சர்க்கரை நோய் 15 சதவீதமும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 74 சதவீதம் அதிகரித்திருக்கும் என்று முன்கணிப்புகள் கூறுகின்றன. இன்றைய நிலவரப்படி சீனா சர்க்கரை நோயின் தலைநகராக உள்ளது. விரைவில் இந்தியா அந்த இடத்தை பிடிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 20 ஆண்டுகளில் போலியோ, நிமோனியா, காலரா, சின்னம்மை போன்ற நோய்களில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், தொற்றா நோய்கள் அந்த இடத்தைப் பிடித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய், உடல் பருமன், பக்கவாதம் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.
சர்க்கரை நோய் பாதிப்பு தீவிரமடைந்தால் கண்சார் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என்பது மருத்துவ உண்மை. அதை முறையாக கவனிக்காவிடில் பார்வை இழப்பு நேரிடக்கூடும். இந்நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்தியாவில் கடந்த நாற்பது ஆண்டுகளில் சர்க்கரை நோய் சார்ந்த கண் பாதிப்புகள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, ஒரு லட்சம் சர்க்கரை நோயாளிகளில் 102 பேருக்கு பார்வை இழப்பு பாதிப்பு இருந்த நிலையில், அது தற்போது 7-க்கும் கீழ் குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோய் மற்றும் அதுசார்ந்த விழித் திரை பாதிப்புகளுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் பரிசோதனைகள் மேம்பட்டிருப்பதே அதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment