‘விடுதலை'யின் எதிர்நீச்சல்பற்றி காணொலிவழி - செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தொடக்கவுரை
சென்னை, ஜூலை 31- அரசு ஊழியர்களின் முன்னேற் றத்தை முடக்கிப் போட்ட இரகசிய குறிப்பேட்டை ஒழித்தது தந்தை பெரியாரும் - 'விடுதலை'யுமே என்றார் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள்.
விடுதலையின் எதிர்நீச்சல் - இரண்டாம் நாள்
காணொலி சிறப்புக் கூட்டம்
கடந்த 26.7.2022 அன்று மாலை ‘விடுதலை’யின் எதிர்நீச்சல் என்ற தலைப்பில் காணொலிமூலம் நடை பெற்ற இரண்டாம் நாள் சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தொடக்க வுரையாற்றினார்.
அவரது தொடக்க உரை வருமாறு:
போற்றுதலுக்குரிய தமிழர் தலைவர் விடுதலை நாளேட்டினுடைய 60 ஆண்டுகால ஆசிரியராகத் தொடர்ச்சியாகப் பணியாற்றி வரலாறு படைத்திருக்கிற வரலாற்று நாயகர் ஆசிரியர் அவர்களே,
கழகத்தினுடைய துணைத் தலைவர் அவர்களே, இந்தக் காணொலியைக் கண்டுகொண்டிருக்கின்ற கழகத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னு டைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நேற்றைய காணொலி கூட்ட உரையில் நம்முடைய கழகத் தலைவர் அவர்கள், விடுதலை ஏடு தொடங்கி நடத்துவதற்கு எவ்வளவு சிரமங்களைத் தந்தை பெரியார் அவர்கள் அனுபவித்தார்கள் என்பதைச் சொல்லி, வருத்தமான வரலாற்றைப் பதிவு செய்தார்.
புதிய வரலாற்றை நாம் படைக்கவேண்டும்
தொடர்ந்து விடுதலையினுடைய எதிர்நீச்சல்கள் எப்படி இருந்தன என்பதைப்பற்றி ஆதாரப்பூர்வமாக நம்மிடையே இன்றைக்கு விளக்கி, கழக வரலாற்றை நமக்குச் சொல்லி, புதிய வரலாற்றை நாம் படைக்க வேண்டும் என்கின்ற வேண்டுகோளை வைக்கின்றார்.
இதனிடையே நானும் சில கருத்துகளைப் பேச வேண்டும் என்று பணிக்கப்பட்டு இருக்கின்ற காரணத் தினால், நானும் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
பொதுவாக தந்தை பெரியார் அவர்கள், அவருடைய நண்பர் தங்கப்பெருமாள் பிள்ளை காங்கிரஸ்காரர் - இருவரும் சிறைச்சாலையில் இருந்தபொழுதுதான், காங்கிரசிலே நம்முடைய லட்சியத்தை நிறைவேற்று வதற்கான வாய்ப்புகள் இல்லை. சமூகநீதிக்கு காங்கிரஸ் ஒத்து வரமாட்டேன் என்கிறது என்கின்ற காரணத்தி னாலே, அனைத்தும் அனைவருக்கும் என்கின்ற தத் துவத்தை வலியுறுத்துவதற்காக, தனியாக ஓர் இயக்கம் காணலாம் என்று அவர்கள் இருவரும் பேசி முடிவு செய்து,
அதன் தொடர்பாக ஓர் இயக்கம் என்று சொன்னால், அதற்கு ஏடு இருப்பது அவசியம் என்கின்ற காரணத்தினாலே, ஏடு இல்லாத இயக்கம் - இறக்கை இல்லாத பறவை என்றுதான் மேலைநாட்டு அறிஞர்கள் சொல்லியிருக்கின்றார்கள் என்பதையெல்லாம் அவர் கள் அறிந்திருந்த காரணத்தினாலே, ஏடு தொடங்க வேண்டும் என்று, குடிஅரசு ஏட்டைத் தொடங்கினார்கள் என்ற வரலாறு நாம் அறிந்த ஒன்று.
‘குடிஅரசு’ பத்திரிகையைத் தொடர்ந்து
நடத்த முடியாத ஒரு சூழல்!
அந்தக் குடிஅரசு ஏட்டினுடைய மீட்சியாக, ‘விடு தலை’ நாளேட்டை நடத்தி, அதன் வாயிலாக நம்முடைய கொள்கையைப் பரப்பலாம் என்ற முடிவினை 1937 இல் செயல்படுத்த ஆரம்பிக்கிறார் என்கிறபோது, அதற்கு ‘குடிஅரசு’ பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த முடியாத ஒரு சூழல்தான் காரணம் என்பதை நாம் அறிவோம்.
பொதுவாகவே நம்மை சொல்வார்கள், வெள்ளை அரசாங்கத்தோடு நாம் இணக்கமாக, நட்போடு இருந் ததாக. அதனால் நாம் ஏதோ சலுகைகளை எல்லாம் அனுபவித்தோம் என்பதுபோன்று விவரம் தெரியாத வர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள், இப்போதும் சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வரலாற்றைப் படிக்காமலேயே பேசுகிறார்கள்
ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை - ஏனென் றால், வரலாற்றைப் படிக்காமலேயே பேசுகிறவர்கள் இன்றைக்கு நிறைய பேர்.
இந்த ஆட்சி முறை ஏன் ஒழியவேண்டும் என்ற ஒரு தலையங்கத்தை எழுதிய காரணத்திற்காக, அறிக்கை எழுதிய காரணத்திற்காக தந்தை பெரியாரும், குடிஅரசு ஏட்டினுடைய பதிப்பாளருமாகிய அவருடைய தமையனாரும் சேர்ந்து தண்டிக்கப்பட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காது.
அதனுடைய விளைவாகவே குடிஅரசு ஏட்டை நிறுத்தி, ஈடுகாண என்று சொல்வார்களே, ஜாமீன் தொகையை அதிகமாக்கி அவர்கள் கேட்டபொழுது, அதனை ஒரு தண்டனை போன்று கருதி, அதனை செலுத்துவதற்குத் தயாராக இல்லாத தந்தை பெரியார் அவர்கள், குடிஅரசு ஏட்டை நிறுத்திவிட்டு ‘புரட்சி’ என்ற ஏட்டைத் தொடங்கினார்.
எந்தப் பெயரில் ஏட்டை நடத்தினாலும் சரி, அவர் கொண்ட கொள்கை ஒன்றேதான் என்பது நாம் அறிந்ததுதான்.
அந்த வகையிலே, அவருடைய எழுத்துகள் மீண்டும் பாதிக்கின்ற ஒரு நிலைமையை - மக்களை பாதிக்கின்றன, மதத்துக்காரர்களை பாதிக்கின்றன என்கின்ற சாக்கு போக்குகளைச் சொல்லி, அந்தப் புரட்சி ஏடும் நிறுத்தப் படுவதற்கான ஒரு காரியமாக, பிரிட்டிஷ் அரசாங்கம் அன்றைக்கு நடந்துகொண்டது.
அதனை நிறுத்திவிட்டு, ‘பகுத்தறிவு’ ஏட்டைத் தொடங்கினார்.
ஜாமீன் தொகை கேட்ட ஒரு நிலை!
பகுத்தறிவு ஏட்டினுடைய எழுத்துகள் எங்களுடைய மனதைப் புண்படுத்தி விட்டன என்று ஊரும், உலகத் துக்காரர்களும் சொன்னார்கள். அதற்கும் ஈடுகாண ஜாமீன் தொகை கேட்ட ஒரு நிலையில்தான்,
அவற்றை எல்லாவற்றையுமே விட்டுவிட்டு, விடுத லையை நாம் தீவிரமாக நடத்தலாம் என்கிற முடிவுக்கு வந்து, விடுதலை ஏடு தொடங்கப்பட்டது.
வியாபார நோக்கம் அல்ல எனக்கு;
நான் கொண்டிருக்கின்ற மனிதப் பற்று!
அந்த விடுதலை ஏட்டினுடைய தொடக்க விழாவின்போது தந்தை பெரியார் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டார்.
‘‘இந்த ஏட்டினை தொடங்கி நடத்துவதற்குக் காரணமாக ஒரு வியாபார நோக்கம் அல்ல எனக்கு. நான் கொண்டிருக்கின்ற மனிதப் பற்று, இனப்பற்று அடிப்படையில், யாரையும் நான் திருப்திபடுத்த வேண்டிய அவசியமில்லாத நிலையில், இந்த இதழைத் தொடங்கி நடத்தவிருக்கின்றேன். அது லட்சிய நோக்கோடு நடக்கும்’’ என்றார்.
எந்த அளவிற்கு உண்மையோடு குடிஅரசு ஏடு தொடங்குகின்றபொழுது அய்யா அவர்கள் கருத்தைத் தெரிவித்தார்களோ, அதே கருத்திலேயே விடுதலை ஏடு தொடங்குகின்றபொழுதும் நிலையாக நின்றார் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.
அப்படி பணத்திற்காக இல்லாமல், கொள்கையைப் பரப்புவதற்காக ஏடு நடத்தினார்.
இனத்தை ஏற்றமுறச் செய்வதும்-
மாற்றமுறச் செய்வதும்!
அப்படிப்பட்ட அந்த விடுதலை ஏடு கொள்கையோடு இருந்தால்தான், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குறிப்பிட்ட தைப்போல,
‘‘ஓர் இனத்தை ஏற்றமுறச் செய்வதும்
மாற்றமுறச் செய்வதும் ஏடே ஆகும்’’
என்று சொன்னார்.
நேற்றுகூட நம்முடைய ஆசிரியர் அவர்கள், புரட்சிக் கவிஞருக்கும், தனக்கும் இருந்த தொடர்பைப்பற்றி எழுதியிருக்கிறார். நாமெல்லாம் மீண்டும் படித்துத் தெரிந்துகொள்வதற்காக, இளைஞர்கள் தெரிந்துகொள் வதற்காக.
அப்படிப்பட்ட புரட்சிக்கவிஞருடைய கருத்துகளை, ஏற்றமுறச் செய்வதும், மாற்றமுறச் செய்வதும் ஏடே ஆகும் என்ற லட்சிய நோக்கத்தோடு, மாற்றமுறச் செய்ய வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட ஏடுதான் விடுதலை.
அந்த விடுதலையினுடைய ஏட்டின் ஆசிரியர் பொறுப்பில், பெரியார் அவர்கள் இருந்து செயல்பட்டார் என்ற நிலையில், 1962 இல், எந்த சூழ்நிலையில் ஆசிரியர் அவர்களிடத்தில் அந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டது என்பதை வயதானவர்கள் அறிவார்கள். அந்தக் கசப் பான செய்திகளை நான் மீண்டும் சொல்லி கஷ்டப்படுத்த விரும்பவில்லை.
எனவே, அந்த நிலையில், அந்தப் பொறுப்பிலே அமர வைக்கப்பட்ட நம்முடைய ஆசிரியர் அவர்கள், அதே கொள்கையோடு விடுதலையை தொடர்ந்து நடத்தினார்.
ஒருவர் முன்னர் குறிப்பிட்டதைப்போல, வாய்ப்பு மறுக்கப்பட்டவருக்காக, வழக்குரைஞராக விடுதலை ஏட்டை அவர் நடத்தினார்.
வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு
வாய்தா வாங்காத வக்கீல்!
தந்தை பெரியாரைப்பற்றி ஒரு எழுத்தாளர் குறிப்பிடும்பொழுது சொன்னார், ‘‘வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு வாய்தா வாங்காத வக்கீல்’’ என்று.
விடுதலை ஏட்டினுடைய ஆசிரியராக நம்முடைய ஆசிரியர் அவர்கள் பணி ஏற்றது முதல் - 1962 ஆம் ஆண்டுமுதல் - சிறப்பாக நடந்துகொண்டிருந்த தன்னு டைய சொந்த வழக்குரைஞர் தொழிலை, மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, விடுதலை ஆசிரியராக இருந்து, இந்த சமுதாயத்தினுடைய வழக்குரைஞராக அவர் மாறினார் என்பதைத்தான் நான் அழுத்தமாக பதிவு செய்யவேண்டிய செய்தியாகும்.
விடுதலை ஏட்டினுடைய ஆசிரியர் உரை என்று சொல்லப்படுகிற தலையங்கங்கள் இருக்கின்றனவே - அவையெல்லாம் பொதுநல வழக்குகளின் மனுக்கள்; இன்றைக்கும்கூட - 60 ஆண்டுகாலமாக அப்படித்தான்.
ஆசிரியர் அறிக்கைகள் அத்தனையும்
பொதுநல வழக்கு மனுக்கள்தான்!
சரியாக உங்களுக்கெல்லாம் விளங்கும்படி சொல்ல வேண்டும் என்று சொன்னால், பொதுநல வழக்குகள் என்று இன்றைக்குப் பத்திரிகைகளில் படிக்கின்றோமே, அப்படிப்பட்ட பொதுநல வழக்குகளுடைய மனுக் களாகவே விடுதலை ஏட்டினுடைய தலையங்கங்கள் இன்றைய வரைக்கும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆசிரியருடைய அறிக்கைகள் - இன்றைக்கு அதிக மாக அவர் தலையங்கம் எழுதுவதில்லை என்றாலும், ஆசிரியருடைய அறிக்கைகள் வேறு வகையில் முதல் பக்கத்தில் வந்துவிடுகிறது. அந்த ஆசிரியர் அறிக்கைகள் அத்தனையும் பொதுநல வழக்கு மனுக்கள்தான்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெறுவதற் காக போடப்பட்ட வழக்குகள்.
விடுதலை தொகுப்புகள் என்று எடுத்துச் சொன்னால், அந்த வழக்கு கட்டுகள்தான்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், தொடர்ந்து 60 ஆண்டு காலமாக ஆசிரியர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
ஆசிரியர் உரையிலே தெறிக்கின்ற அந்தக் கனல் - அந்த அனல் - ஆவேசமான கருத்துகள் - முன்பு அவர் அகப்பையார் என்ற பெயரில் எழுதுகிற அவியல் பகுதிகள் நகைச்சுவையோடு, நையாண்டியோடு, நக்கலோடு குறிப்பிட்டவிடயங்களில் எள்ளி நகையாடும் வகையில் அதனை எழுதினார்.
தலையங்கத்தில் தணல் தெறிக்க எழுதிய பேனா இன்று அவியலில் இப்படி எழுதுகிறதே என்று நாம் ஆச்சரியப்படத்தக்க வகையிலே அந்தப் பகுதி இருக்கும்.
மெக்கல்லன்ஜியிலே சொல்வார்கள், உலோகங் களைத் கடினப்படுத்துவதற்காக, உஷ்ணப்படுத்தி, பிறகு அதை தண்ணீரில் செலுத்துவதை கொல்லன் பட்டறையில் பார்த்திருக்கின்றோம். இன்றைக்குக் கொல்லன் பட்டறைகளையும் காணோம், அதைப் பார்க்கின்ற வாய்ப்புகளும் இல்லை.
ஆசிரியர் அவர்கள் கோபமாகவும் எழுதினார், கிண்டலாகவும் எழுதினார்!
ஆனால், பட்டறைகள் இருந்தபொழுது, அங்கே இப்படித்தான் இரும்பை உஷ்ணப்படுத்தி, தண்ணீரை ஊற்றி, பிறகு சுத்தியலில் அடித்து, கொல்லர் அதனைக் கடினப்படுத்தினார்.
அப்படிப்பட்ட வகையில், ஆசிரியர் அவர்கள் கோபமாகவும் எழுதினார், கிண்டலாகவும் எழுதினார்.
எந்த வகையில் எழுதினாலும்கூட, அவை அத்த னையும் மக்களை ஏற்றமுற செய்யவேண்டும்; வஞ் சிக்கப்பட்டவர்களுக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத் தரவேண்டும் என்பதற்காகத்தான்.
‘‘இது உண்மையா?’’ என்ற தலைப்பில் அந்தக் காலத்தில் ஒரு பெட்டிச் செய்தி அடிக்கடி வரும்.
அந்தப் பெட்டிச் செய்தி வந்தவுடன், அதில் எந்தச் செய்தி குறிப்பிடப்பட்டிருந்ததோ, அதற்கான பரிகாரம் உடனடியாகக் காணப்படும் - தொடர்புடைய அரசுத் துறையால்.
கல்வித் துறை பாழ்பட்டுக் கொண்டிருக்கின்றது
‘‘கல்வி நீரோடையில் பார்ப்பன முதலைகள்’’ என்று எழுதுவார்.
அந்தக் கல்வி நீரோடை ஒரு காலத்தில் அப்படி இருந்தது. இன்றைக்குப் பார்ப்பன முதலைகளுக்குப் பதில், வேறு யாரோ முதலைகள் உட்கார்ந்துகொண்டு, கல்வித் துறை பாழ்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு வருத்தமான செய்தியையும் நான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
அப்படிப்பட்ட வகையிலே, கல்விதான் மக்களுடைய எழுச்சிக்கு, அவர்களுடைய வளர்ச்சிக்குக் காரணம் என்ற காரணத்தினாலே, அதில் அக்கறை செலுத்திய இயக்கம் நம்முடைய இயக்கம்.
மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கியது நம்முடைய ஆசிரியருடைய எழுத்துகள்!
அதற்காக எழுத்துகளை எழுதி, மக்களுக்கு விழிப் புணர்வை உருவாக்கியது நம்முடைய ஆசிரியருடைய எழுத்துகள் விடுதலையின்மூலமாக.
அதுபோலவே, ஒவ்வொரு துறையிலும் - அரசாங் கத்தினுடைய எந்தத் துறையாக இருந்தாலும், அந்தத் துறையிலே பார்ப்பனர்களுடைய ஆதிக்கம் இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றன.
ஆட்சியினுடைய தலைமைப் பொறுப்பிலே காமராசர் இருந்தபோதும் சரி, அண்ணா இருந்தபோதும் சரி, பார்ப்பனர்களுடைய கொட்டம் அளவுகடந்து மீறிக் கொண்டிருந்த நேரத்தில், அவற்றையெல்லாம் அடித்து, அவர்களின் தலையில் தட்டி, மட்டம் தட்டி உட்கார வைத்து, மூலையில் உடைத்துப் போடுகின்ற காரியத்தை, விடுதலையினுடைய அந்தப் பெட்டிச் செய்திகள் தெரிவித்துக் கொண்டிருந்தன - நிலைநாட்டிவிட்டன.
அப்படிப்பட்ட ஒரு சிறப்பான பணியிலே 60 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றி, அதனாலே இந்த சமுதாயம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
அன்று எவ்வளவு பேருக்குப் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருந்தது - என்ன காரணத்தினால்.
நான் ஒரு மேனாள் அரசு அலுவலன் என்ற முறையிலே, நன்றியோடு நான் சொல்லவேண்டியது என்ன வென்று சொன்னால், எங்களுடைய எதிர்காலத்தை, எங்களுடைய பதவி உயர்வை, எங்களுடைய முன்னேற்றத்தை முடக்கப்படப் போடப்பட்ட அந்த ரகசிய குறிப்பேட்டு முறையை, விடுதலையைத் தவிர வேறு எந்த ஏடாவது எழுதியதா?
நன்றி செலுத்தியது
அரசு அலுவலர் சமுதாயம்!
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, விடுதலை ஏட்டிற்கும், விடுதலை ஏட்டினு டைய தோற்றுநர், எழுத்தாளர், சரியான, உண்மையான ஆசிரியர் தந்தை பெரியார் அவர்களுக்கும் நன்றி செலுத்தியது அரசு அலுவலர் சமுதாயம்.
அப்படி எல்லோருக்குமான ஒரு இயக்கமாக - தொண்டாக இந்த விடுதலை ஏடு செயல்பட்டு இருந்தது.
மூடநம்பிக்கை ஒழிப்புச் செய்திகளை வெளியிடுவது - அரசு அலுவலகங்களில் திடீர் திடீர் என்று கோவில்கள் முளைக்கும். அந்தக் கோவில்கள் முளைக்கின்ற பொழுதே, அதைப்பற்றி ‘‘இது உண்மையா?’’ என்ற தலைப்பிலே விடுதலையில் பெட்டிச் செய்தி வந்தாலே, அது நிறுத்தப்பட்டு விடும் என்ற நிலைமை இருந்தது.
இன்றைக்கு அவர்களுக்கும் பழக்கப்பட்டு போய் விட்டது - என்னதான் எழுதினாலும், அவர்கள் பாட் டிற்குக் கோவிலைக் கட்டிக் கொண்டு போகிறார்கள்; அதுபோன்ற ஒரு மோசமான நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதை நினைத்தால் வருத்த மாகத்தான் இருக்கிறது, என்ன செய்வது?
விடுதலையினுடைய தேவை இன்னமும் தேவை - இன்னமும் அதிகமாகத் தேவை
அப்படிப்பட்ட சூழ்நிலையில், விடுதலையினுடைய தேவை இன்னமும் தேவை - இன்னமும் அதிகமாகத் தேவை என்கிற ஒரு எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.
அந்த வகையிலே ஆசிரியர் அவர்களுடைய பணி, ஆசிரியர் அவர்களுடைய உரைகளுடைய பணி -
ஒரு செய்தி -
ஆய்வுக்குரிய பொருளாக எடுத்துக்கொண்டு ஆய்வு செய்திருக்கிறார். வரலாற்றில் இப்படிப்பட்ட பெருமையை எந்த நாளேட்டின் ஆசிரியரும் பெற்றதாக எனக்குத் தெரியவில்லை. மற்றவர்களுக்குத் தெரிந் திருந்து சொன்னால், நான் திருத்திக் கொள்கிறேன்.
கரு.ராமச்சந்திரன் என்பவர், அவர் காமராசர் பல்கலைக் கழகத்தில், விடுதலை ஏட்டினுடைய ஆசி ரியர் அய்யா அவர்களுடைய உரைகளை, அறிக்கை களை, தலையங்கங்களை ஆய்வு செய்து எம்.பில்., பட்டம் பெற்றிருக்கிறார்.
இந்தப் பெருமையை இன்னொருவர் பெற்றிருக்கிறார். நம்முடைய ஆசிரியருக்கு முன்பாக, அந்த ஏட்டை வழிநடத்திச் சென்ற ஆசிரியராக இருந்த நம் எல்லோ ருக்கும் அறிவுக் கொளுத்திய ஆசானாக இருந்த தந்தை பெரியார் அவர்களுடைய குடிஅரசு ஏட்டினுடைய தலையங்கங்களை, குடியரசு ஏட்டிலே வந்த கருத்துகளை தன்னுடைய ஆய்வுப் பொருளாக வைத்து எம்.பில்., பட்டம் வாங்கியிருக்கிறார் சந்திரசேகரன் என்பவர், அதே மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்.
60 ஆண்டுகால ஆசிரியர்
நம்மிடத்திலே என்ன எதிர்பார்க்கிறார்?
இப்படிப்பட்ட சிறப்புமிக்க பணியாற்றிய, சிறப்புமிக்க எழுத்துகளுக்கு சொந்தக்காரராக விளங்கிக் கொண்டி ருக்கின்ற நம்முடைய ஆசிரியர் அவர்கள் - 60 ஆண்டு காலமாக ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற அவர், நம்மிடத்திலே என்ன எதிர்பார்க்கிறார்?
அதைத்தான் அவர் நேற்றைக்கும் குறிப்பிட்டார் - இன்றைக்கும் குறிப்பிடுவார் - நாளைக்கும் அதைக் குறிப்பிடுவார்.
அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது -
விடுதலையை வாங்கிப் படியுங்கள் -
No comments:
Post a Comment