பொத்தனூர் க. சண்முகம் நூற்றாண்டு விழாவில் நூற்றாண்டு மலரினை தமிழர் தலைவர் வெளியிட ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பெற்றுக் கொண்டார்
1942ஆம் ஆண்டு முதலே தந்தை பெரியார் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டவர். அப்பொழுது அவர் திருச்சி நேஷனல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். 1944இல் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாட்டிலேயே பங்கு கொண்டவர்.
1946இல்நீடாமங்கலத்தில் நடைபெற்ற மாநில திராவிட மாணவர் கழக மாநாட்டில் பங்கேற்றவர். அம்மாநாட்டில் திருச்சி மாவட்டப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர்.
திருச்சியில் வட மண்டல திராவிட மாணவர் கழக மாநாடு - மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெற்றதே, அதன் வரவேற்புக் குழுத் தலைவரும் இவரே!
கரூர் வட்ட திராவிடர் கழக மாநாடு தவிட்டுப்பாளையத்தில் நடைபெற்றபோதுதான் முதல் திராவிடர் கழகக் கொடி ஏற்றப்பட்டது. அம்மாநாட்டுக்குச் சென்று வந்த இவர் தம் வீட்டில் திராவிடர் கழகக் கொடியை ஏற்றினார்.
ஆம், அவர் வீட்டில் பறக்கும் திராவிடர் கழகக் கொடிக்கு வயது 74.
88ஆம் ஆண்டு விடுதலையில் 77 ஆண்டு அதன் வாசகர். 79 ஆண்டு காலமாகக் கழக உறுப்பினர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படக் கூடியவர்.
திருச்சி நகர திராவிட மாணவர் கழகத் தலைவர், பொத்தனூர் கழகத் தலைவர், நாமக்கல் வட்டக் கழகத் தலைவர், சேலம் மாவட்டக் கழகத் தலைவர் சேலம் மண்டலக் கழகத் தலைவர், ஈரோடு மண்டலக் கழகத் தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினர், அதன் துணைத் தலைவர், தற்போது அதன் தலைவர்.
கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் களம் கண்டவர். 'மிசா' கைதியாக ஓராண்டு சேலம் சிறையில் இருந்தவர்.
தந்தை பெரியார் பெயரில் படிப்பகம் - ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பெயரில் நூலகமும் தம் சொந்த செலவில் அமைத்துக் கொடுத்தவர்.
இப்படி 20 வயது முதல் 80 ஆண்டு காலமாக தாம் கண்ட - கொண்ட தலைவர் தந்தை பெரியார் உயிரோடு இழைந்த இயக்கம் திராவிடர் கழகம் - 74 ஆண்டு காலமாக தம் வீட்டில் பறக்கும் திராவிடர் கழகக் கொடியின் கீழ் வாழ்பவர் - அவர் நூற்றாண்டைக் கண்டார் (2.7.2022) என்றால் அவர் யாராகத்தான் இருக்க முடியும் - மானமிகு பொத்தனூர் க. சண்முகம் அவர்களைத் தவிர!
கடந்த ஜூலை 2, 3 ஆகிய இருநாட்களிலும் நாமக்கல் அருகில் உள்ள பொத்தனூர் கோலாகலம் கண்டது. ஆயிரக்கணக்கான கழகத்தினரும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஊர்ப் பொது மக்களும், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்துறையினரும் அந்த அரும் பெரும் - முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரை ஆரத் தழுவி, ஆடைகளும் மாலைகளும் அணிவித்து மரியாதை தெரிவித்தனர் என்றால், இதற்காக ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழரும், தந்தை பெரியார் தொண்டரும் அடையும் மகிழ்ச்சிக்கும், பெருமிதத்துக்கும் தலை நிமர்வுக்கும் அளவேயில்லை. இவற்றை முழுமையாக எடுத்துக் கூற வார்த்தைகள் இல்லை.
நேற்று (3.7.2022) அதிகாரப்பூர்வமாக நடைபெற்ற அந்தப் பெரியார் பெருந்தொண்டரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வருகிறார் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் காத்துக் கொண்டிருந்தன.
நேற்று காலை 10 மணிக்கு கார்கள் அணி வகுக்க, அவர் இல்லத்திலிருந்து நூற்றாண்டு விழா நடைபெறும். ஆர்.கே. திருமண மண்டபம் வரை பல வீதிகள் வழியாக சென்றபோது - காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த க.ச. அவர்களை (அந்தப் பகுதியில் அவரை இப்படித்தான் அழைப்பார்கள்) ஊர் மக்கள் வீடுகளிலிருந்து வேக வேகமாக வெளிவந்து ஆண்களும், பெண்களும் கை கூப்பி வணங்கிய காட்சி கண் கொள்ளாக் காட்சி!!
கடை வீதியில் கடைக்காரர்களும், வாடிக்கைக் காரர்களும் வாஞ்சையோடு இரு கரம் கூப்பி வணங்கினர்.
ஒரு கடவுள் மறுப்பாளருக்கு, தந்தை பெரியார் தொண்டருக்கு, கருஞ்சட்டை வீரருக்கு மக்கள் இவ்வளவு மரியாதை காட்டினார்கள் என்றால் இது இந்த இயக்கத்துக்கு, இயக்கக் கொள்கைகளுக்கு இயக்கத் தலைமைக்குக் கிடைத்த கிரீடம் என்றுதான் சொல்ல வேண்டும். தந்தை பெரியார் காலத்தில் மட்டுமல்ல; அவரைத் தொடர்ந்து கழகத்துக்குத் தலைமையேற்று நடத்திச் சென்ற அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தலைமையின் கீழ் இன்றளவும், மாசுமறு இல்லாமல் கட்டுப்பாடு காக்கும் கவசத்தின் அடையாளமாகத் திகழக் கூடிய க.ச. அவர்கள் 150 ஆண்டு வாழ வேண்டும், 200 ஆண்டு வாழ வேண்டும் என்று வைதிக மனப்பான்மையினரும் வாழ்த்திப் பேசினார்களே!
ஆம், பெரியார் ஒருவாழ்க்கை நெறி - திராவிடர் கழகம் அரசியலுக்கு அப்பால் நின்று அனைவருக்கும் அனைத்தும் என்ற சுயமரியாதை - பகுத்தறிவு - சமத்துவ - சமதர்மக் கொள்கையை ஏந்தி நிற்கும் ஈடு இணையற்ற இயக்கம்! எதையும் எதிர்பாராமல், இழப்புக்கு மட்டும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் கருப்பு மெழுகுவத்திகள் என்று நாட்டு மக்கள் உணர்ந்து தான் வைத்திருக்கிறார்கள்.
இன்றைய "திராவிட மாடல்" ஆட்சிக்கு இதுதான் அடித்தளம். தந்தை பெரியார் பிறந்த நாளை 'சமூகநீதி நாளாக' சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அறிவித்து செயல்படுத்தியது - திராவிட மாடல் அரசு என்பதற்கான அஸ்திவாரமும் அடையாளமும் ஆகும்.
மானமிகு க.ச. போன்ற நூற்றாண்டுக் காணும் கருஞ்சட்டைச் சரித்திரத்தின் மாசிலாமணிகள் புதிய தலைமுறையினருக்குப் புத்துணர்ச்சி தரும் வழிகாட்டிகள் என்பதில் அய்யமில்லை.
முற்பகல் நிகழ்ச்சி ஆர்.கே. திருமண மண்டபத்தில் தொடங்கப்பட்டது. திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் தொடக்கவுரையாற்றி வாழ்த்தரங்கத்தைத் தொடங்கி வைத்தார் (முழு விவரம் பின்னர்).
No comments:
Post a Comment