கருப்பு பணம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப் பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ''அண்மையில் வெளியான சில தரவுகளின்படி, கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2021ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனினும், அதைக் கருப்புப் பணமாகக் கருதக்கூடாது - இருப்பினும் எவ்வளவு பணம் மற்றும் எப்படி சென்றது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எங்களிடம் இல்லை" என்று கூறினார்
"சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்து அதிகாரபூர்வ கணக்கீடுகள் ஏதுமில்லை.வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாமல் சேமித்து வைத்துள்ள தொகைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ரூ.8,468 கோடிக்கும் அதிகமான வரியைச் செலுத்துமாறும், ரூ.1,294 கோடியை அபராதமாகச் செலுத் துமாறும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கோரப்பட்டுள்ளது."
"கடந்த ஆண்டு வெளியான - வெளிநாட்டு வங்கி களில் இந்தியர்களின் பணம் தொடர்பான புள்ளி விவரங் களில் கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 2021ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர் களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது."
"கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 368 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.14,820 கோடி வரியாகக் கோரப்பட்டுள்ளது. இத்தரவுகள் கடந்த மே மாதம் வரையிலானவை” எனவும் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதிக பணம் வைத்துள்ள நபர்களின் பெயர்களோ அல்லது இதர விவரங்களோ தங்களிடம் இல்லை என்றும் கூறியுள்ளார். புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாத நிலையில், அந்தப்பணம் எப்படிச் சென்றது என்ற விவரமும் இல்லாத நிலையில், அப்பணத்தை கருப்புப்பணம் என்று கூறுவது சரியல்ல என்று கூறி அதிர்வலையை ஏற்படுத்துகிறார். ஒரு நிதி அமைச்சரின் கூற்றா இது?
பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது "சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணத்தை எடுத்துச்சென்று பதுக்கி வைத்துள்ளனர். இந்தப் பணத்தை மீட்டு வந்து அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன்" என்றார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு கொண்டுவந்து கருப்புப்பணம் அனைத்தும் வங்கிக் கணக்கில் வந்து விடும் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் பொருளா தார வல்லுநர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, உயர்மதிப்பு பணம் (2000) அச்சிட்டார். ஆனால் இந்த உயர்ரக பணம் எளிதாகப் பணத்தைப் பதுக்கவும், அதனை முதலீடாக மாற்றியும், ஹவாலா முறையிலும், வெளிநாடுகளில் பதுக்கவும் மட்டுமே உதவியது. இந்த நிலையில் தற்போது கருப்புப்பணம் மற்றும் அதனைப் பதுக்கியவர்களின் விவரம் தங்களிடம் இல்லை என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு - ஆளும் கட்சியாக “அவதாரம்" எடுத்தால் எதிர்மறையான சொல் வீச்சு!
கருப்புப் பணத்தை சிண்டைப் பிடித்துக் கொண்டு வந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் போடுவேன் என்று வீரவசனம் பேசினாரே - மோடிஜி என்று எதிர்க்கட்சிகள் கேட்டதற்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்ன பதில் என்ன? அது வெறும் ‘ஜும்லா' (ஏமாற்றுவார்த்தை) என்று சொன்ன ‘நாணயத்திற்குச் சொந்தக்காரர்கள் என்னதான் பேசமாட்டார்கள்? ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா அம்மையாரின் பேச்சையும் அப்படித்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும். வெகு மக்கள் இவர்களை அடையாளம் காணட்டும்!
No comments:
Post a Comment