சென்னை, ஜூலை 1- தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசின் பிடிவாதத்தால் நீட் தேர்வு திணிக்கப் பட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப் பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட மசோதாக்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டாலும், இன்னமும் ஒன்றிய பாஜக அரசு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப்பெற்றுத் தராமல் பிடிவாதத்துடன் நீட்டை திணித்துக்கொண்டிருக்கிறது.
பாஜக தவிர அனைத்துக்கட்சியினரும் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரை பறிக்கின்ற நீட் தேர்வு வேண்டாம் என்று வலியுறுத்திவந்தபோதிலும், நீட் திணிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (வயது 42). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு கரண்ராஜ், தனுஷ் (18) என 2 மகன்கள் இருந்தனர். இந்தநிலையில் தனுஷ் 29.6.2022 அன்று வீட்டில் தனியாக இருந்தார். தாயார் ஜெயந்தி வேலைக்கு சென்றுவிட்டு மாலை திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். உள்ளே தனுஷ் வீட்டின் படுக்கை அறையின் மேற்கூரையில் பெல்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த சூளைமேடு காவல்துறையினர், தனுஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணை யில், கடந்த 2020ஆம் ஆண்டு எம்.எம்.டி.ஏ அரசு மேல் நிலை பள்ளியில் பிளஸ்-2 முடித்த தனுஷ் மருத்துவராக வேண்டும் என நினைத்து 'நீட்' தேர்வு எழுதியதாகவும், ஆனால் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில் மீண்டும் 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை வீட்டில் இருந்தபடியே படித்து வந்ததாகவும், தன்னால் படிப்பில் சரியான பாதையை தேர்ந்தெடுத்து செல்ல முடிய வில்லையே என்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தாகவும் தெரியவந்தது.
No comments:
Post a Comment