28.02.1948 - குடிஅரசிலிருந்து...
வரி வாங்கிப் பிழைக்கும் அரசு - மக்களின் தன்னரசு என்று ஆகாது. மக்கள் வேறு! அரசு வேறு! என்ற மண் மூடவேண்டிய - பிரித்துக்காட்டும் நிலைமையையே உணர்த்தும். பணக்காரன், முதலாளி, பிறவி முதலாளிகள் துணைக்குத்தான் வரிவாங்கும் அரசு உழைத்து வருகிறதே தவிர - உழைக்க முடியுமே தவிர - பாட்டாளி மகனுக்குத் துணை செய்ய முன்வராது. அதன் இயல்பும் அதுவல்ல.
நம் நாடும் எதிர்காலத்தில் அமைத்துக் கொள்ளப்போகும் அரசியல் முறை இது.
இன்று வரியால் பிழைக்கும் அரசியல் முறையில், பாட்டாளி மக்களையும், அவ்வரிக் கொடுமைக்கு ஆளாக்கும் போது கொடுமை! கொடுமை என்ற கூக்குரல் உண்மையொலியோடு அடிவயிற்றிலிருந்து எழுந்து முழங்கப்படுவதைக் கேட்கிறோம். இக்கொடுமை தொலையவேண்டும் என்றே ஒவ்வொரு மனிதாபிமானம் உள்ளவனும் நினைப்பான்.
இந்த நிலையோடு, இந்நாட்டில் பார்ப்பனர்களுக்குக் கொடுத்துவரும் வரிகளையும் சேர்த்து எண்ணும்போது, அரசாங்க வரிகொடுமைக்கு முன்னால் உஞ்சிவிருத்திக் கூட்டம் மக்கள் உழைப்பை உறிஞ்சிவரும் கொடுமை முதலில் ஒழிய வேண்டுமென்றே வஞ்சகம் - தன்னலம் இல்லாத எந்த அரசியல்வாதியும் எண்ண முடியும் - எண்ண வேண்டும்.
அரசாங்கத்திற்கு வரி கொடுப்பவர்கள் எத்தகையவர்கள்? எத்தனை பேர்? தகுதியும் எண்ணிக்கை வரையறையும் இதற்குண்டு.
ஆனால், பார்ப்பானுக்கு வரி கொடுப்பவர்கள் எத்தகையவர்கள்? எத்தனை பேர்? தகுதியும் இல்லை; வரையறையும் இல்லை. இந்து என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்றவனாய் சூத்திர பட்டியலில் இருக்கும் எல்லோருமே எத்தகுதியுடையவர் களாய் இருந்தாலும் கொடுத்து வருகின்றார்கள் எப்படி?
1. குழந்தை பிறந்தால், அது பிறந்தவுடனே பார்ப்பனனுக்கு வரி (தட்சணை) கொடுக்க வேண்டும். இல்லையேல் குழந்தை நலமுடன் வளராது.
2. குழந்தை பிறந்த 16 ஆவது நாள் தீட்டுக்கழியும் சடங்கு. இந்தத் தீட்டைக் கழிக்க மந்திரத்தையும், தர்ப்பைப் புல்லையும் கொண்டுவருவான் பார்ப்பான். இதற்கு அவனுக்கு வரி.
3. குழந்தை பிறந்த சில நாள் கழித்துக் குழந்தைக்குப் பெயரிடல். பெயரைத் தேர்ந்தெடுத் தவர்கள் பெற்றோர்கள். இதை அவன் வாயால் அழைத்துப் போவதற்கு அவனுக்கு வரி.
4. குழந்தை பிறந்து ஓர் ஆண்டு முடிந்தால் அப்பொழுது ஆண்டுவிழா. இந்த விழாவிற்கும் அவனுக்கு வரி.
5. பிறகு அந்தக் குழந்தைக்கு உணவூட்டல். இந்த உணவூட்டுவதற்கும் பார்ப்பானுக்கு வரி.
6. குழந்தை ஆணாயிருந்தால், அக்குழந்தைக்குச் சிரைத்துக் குடுமி வைக்க வேண்டும். இதற்கும் பார்ப்பானுக்கு வரி.
7. அய்ந்தாவது அல்லது ஏழாவது வயதில் குழந்தைக்கு அட்சராப்பியாசம். இதற்கும் பார்ப்பானுக்கு வரி.
8. பெண் குழந்தையாயிருந்தால் அது பருவமடைந்தவுடன் ருது சாந்தி. இதற்கும் பார்ப்பானுக்கு வரி.
9. எந்தக் குழந்தையாயிருந்தாலும் கலியாணமென்றால், பொருத்தம் பார்ப்பது, நாள் குறிப்பது, கலியாணம் செய்து வைப்பது, இருவரையும் படுக்கவைப்பது என்கிற பெயர்களால் இத்தனைக்கும் பார்ப்பானுக்கு வரி.
10. இறந்தால், இறந்த பிணத்தை அடக்கம் செய்ய, இருப்பவர்கள் பிணத்திற்காகப் பார்ப்பானுக்கு வரி கொடுக்க வேண்டும்.
11. இறந்தவர்களின் மகன் உயிரோடிருக்கும் வரை, ஒவ்வொரு ஆண்டும் திவசம் என்ற பெயரால் பார்ப்பானுக்கு வரி கொடுக்க வேண்டும்.
12. கிரகண நாளாயிருந்தால், கிரகணத்திற்கும், மாதாமாதம் அமாவாசைக்கும் பார்ப்பானுக்கு வரி.
13. இன்னும் கலப்பை கட்டுவது, விதைப்பது, அறுப்பது ஆகிய உழுதொழிலுக்கும், அவைகளுக்கு நாள் பார்த்துக் கொடுப்பதற்கும் பார்ப்பானுக்கு வரி.
இவை போன்ற - எந்த அரசாங்கமும் வாங்காத வரிகள் எல்லாம் பார்ப்பனியம் வாங்கிக் கொள்ள கொடுத்து வருகிறோம். எப்படி?
பார்ப்பான் காலில் விழுந்து, நான் கொடுக்கும் இது எவ்வளவு குறைவாயிருந்தாலும், அதைக் குறைவாகக் கருதாமல், பூரணமாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிராத்திக்கின்றோம். இதற்குப் பார்ப்பான் காட்டும் நன்றி, முழங்கால் முட்டி அடிபட, விழுந்து விழுந்து எழுந்திருக்கச் செய்வதும், மாட்டு மூத்திரம், சாணிகளை மாகாத்மியமாக எண்ணிக் குடிக்கச் செய்வதும், தேவடியாள் பிள்ளை என்ற பட்டமும்.
இந்த வரிகள் கொடுக்க வேண்டுமா? பார்ப்பான் பழங்கதையும் சாதிரத்தையும் காட்டிப் பணம் பிடுங்கத்தான் வேண்டுமா? நாங்கள் இழிவையேதான் அடைந்து வர வேண்டுமா? இதையெல்லாம் கேட்பதா வகுப்புத்துவேஷம்? உன் சொந்தப் புத்தியைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து பின் நீ முடிவு கட்டு!
No comments:
Post a Comment