வற்றா நதியாய் வாரீர்! வாரீர்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

வற்றா நதியாய் வாரீர்! வாரீர்!!


வணக்கம்

பெரியார் உலகம்!

அரியலூரில்

அரிமாக்களின்

கர்ச்சனை!

இளைஞர் சேனையின்

எழுச்சி முரசம்!

இருபால் இளைஞர்களும்

இருளைக் கிழிக்கும்

இரவியாய்க் கூடுவர்!


கருஞ்சட்டை என்றால்

கருத்துப்பாசறை

திராவிடர் கழகம் என்றால்

தீரர்களின் கோட்டம்


எங்களுக்கு மதம் இல்லை

கற்பனைக் கடவுளின்

காலில் விழ மாட்டோம்

மூடத்தனத்தின்

முள்ளை எடுத்துக்

கண்களில் 

குத்திக் கொள்ளவும்

மாட்டோம்!


முன்னேறு நாங்கள்

முற்போக்கு எங்களின் திசை

மக்கள் வழியில் செல்லாமல்

மக்களைத் தம் வழியில்

ஈர்த்த ஈரோட்டுக்

கிழவரின்

வழிவந்த சேனை நாங்கள் - அவர்

கிழித்த கோட்டைத்

தாண்ட மாட்டோம்!


கேடுறும் பழைமைப்

பாசிசத்தின் முகத்திரையைக்

கிழித்துக் காட்டுவோம்!

சனாதனம் எங்களுக்குச்

சலாம் போடும்!

வர்ணாசிரமம் எங்களைக்

கண்டால்

வெறித்தோடும்!


திசைகாட்டும்

தீர்மானங்கள்

மூடநம்பிக்கை நஞ்சை 

முறிக்கும்

பேரணி மூலிகையாம்

சீரணி!

கருத்தரங்கம்

பட்டிமன்றங்களில்

இளைஞர் சேனையின்

நாக்கு முரசம்!


தமிழர் தலைவர்

அழைக்கிறார்

கருத்தமுதம் 

படைக்கிறார்

அமைச்சர் பெருமக்கள்

ஆற்றும் உரைகளில்

“திராவிட மாடல்”

அரசின் கீதங்கள்!


அடடே!

அற்புதமான மாநாடு

அறிவில் திளைப்போம்

அன்பில் குளிப்போம்!

திராவிடம் வெல்லும்

வரலாறு என்றும் சொல்லும்

வாரீர்! வாரீர்!! 

வற்றா நதியாய்

வாரீர்! வாரீர்!!

- கவிஞர் கலி.பூங்குன்றன் 


No comments:

Post a Comment