செஞ்சியில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய ப.க.வினருக்குப் பாராட்டுகள் தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டும் - கருத்துரையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 1, 2022

செஞ்சியில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய ப.க.வினருக்குப் பாராட்டுகள் தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டும் - கருத்துரையும்

 * உலகிலேயே பகுத்தறிவாளர் அமைப்பு  வெகு சிறப்பாக  மக்கள் இயக்கமாக நடைபெறுவது தமிழ்நாட்டில் மட்டும்தான்!

* பகுத்தறிவாளர் கழகம்பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று வெளிவர வேண்டும்

சென்னை, ஜூலை 1 செஞ்சியில் கடந்த ஜூன் 19ஆம் தேதி நடந்த பகுத்தறிவாளர் கழக பொன் விழா நிறைவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தும், நமது பகுத்தறிவாளர் கழகத்தைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று வெளியிடப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தும் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக பொன்விழா தொடக்கத்துக்கான மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. அதன்பின்னர் கரோனா தொற்று பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால், இடைவெளிவிட்டு இயல்புநிலை திரும்பியதும் செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு நடத்தப்படும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார். 

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி, கடந்த 19.6.2022 அன்று ஒரு நாள் மாநாடாக மாபெரும் எழுச்சியுடன் கருத்தரங்கம், மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி, தலைவர்கள் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றிய மாநாடு என செஞ்சி நகரமே வரலாறு படைத்தது.

அம்மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, பாராட்டும் நிகழ்வு - சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் 29.6.2022 அன்று மாலை பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர். 

திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோருக்கு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

பகுத்தறிவாளர் கழக மாநாட்டு செலவு போக எஞ்சிய தொகை ரூ.5லட்சத்து 5ஆயிரத்து 555க்கான காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் அளித்தனர். (செஞ்சி மாநாட்டில் அளிக்கப்பட்ட ரூ.3 லட்சமும் சேர்த்து)

மேலும், விடுதலை சந்தாக்களை தோழர்கள் ஆர்வத்துடன் தமிழர் தலைவரிடம் வழங்கினார்கள்.

நிகழ்வின் தொடக்கத்தில் தமிழர்தலைவர் ஆசிரியர், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன் முன்னிலையில் திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்  மாநாட்டுக்காக உழைத்த திண்டிவனம் பகுதி திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். 

அவர் உரையில், மாநாட்டுக்காக உழைத்தவர்களை பாராட்ட வார்த்தையே கிடையாது. செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி தோழர்கள் உள்ளிட்ட பலருக்கும் பாராட்டுகள். புதிதாக பொறுப்பேற்ற பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் பலருக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் மேகநாதன் மாநாட்டுக்கு முன் திடீரென ஆசிரியர் அவர்களின் எடை எவ்வளவு என்றுகேட்டார். ஆசிரியர் அவர்களின் எடைக்கு எடை நாணயம் (ரூ.50 ஆயிரம்) அளித்தார். இப்படி செஞ்சி மாநாட்டின் வெற்றிக்காக பலரும் உழைத்து வெற்றியைத் தந்துள்ளனர். அனைவருக்கும் பாராட்டு என்று குறிப்பிட்டு, விழுப்புரம் மண்டல செயலாளர் க.மு.தா.இளம்பரிதி, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் நவா.ஏழுமலை, பரந்தாமன்,  வில்லவன்கோதை, பாவேந்தன், சாமிநாதன், ரமேஷ், மாரிமுத்து ஆகியோருக்கு சிறப்பு செய்தார்.

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் உரையாற்றுகையில், 

செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாடு நடத்துவதற்கு அனுமதித்த தமிழர் தலைவருக்கு பகுத்தறி வாளர்கழகம் சார்பில் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். காலை நிகழ்விலும், மாலை நிகழ்விலும் நெடுநேரம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மேடை யில் இருக்கச் செய்தமைக்கும் மன்னிப்பை கோருகிறோம். நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து வழி நடத்திய கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்களுக்கும், பொருளாளர் அவர் களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர் தலைவர் செஞ்சியில் மாநாடு என்று அறிவித்ததும், எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்று கலந்துரையாடினோம். நிகழ்ச்சி நிரல், ஜனத்திரள், பொருள் திரட்டல் என மூன்றிலும் மாநாடு வெற்றிகரமாக நடத்துவது குறித்து திட்டமிடப்பட்டது. கலந்துரையாடலில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் செஞ்சிக்கே வருகைதந்து ஆலோசனைகளை வழங்கினார். 2ஆவது கலந்துரையாடல் விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் செஞ்சி துரை.திருநாவுக்கரசு மாநாட்டின் பணிகளில் உறுதுணையாக இருந்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்துள்ளார். ஆகவே, மாநாட்டுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளிப்பதாக  அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உறுதி அளித்தார். செஞ்சி, திண்டிவனம்  பகுதி தோழர்கள் சிறப்பாக ஒத்துழைப்பை அளித்தார்கள். மாநாடு குறித்து சுவரெழுத்து, பிரச்சாரங்கள் எல்லாம் ஒரு வாரத்தில் மக்களிடையே மாநாடு குறித்து விழிப்பை ஏற்படுத்தியது என்றார்.

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், செஞ்சி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த செஞ்சி பகுதியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை.திருநாவுக்கரசு, பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர் சுடரொளி சுந்தரம்,  மேல்ஒலக்கூர் ஆசிரியர் கணபதி,  திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் கோபன்னா, பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்வேலன்,  தமிழன்பாபு, கிருட்டினமூர்த்தி, சாக்ரட்டீஸ், அறிவுடைநம்பி, பெருமாள், க.திருநாவுக்கரசு,செஞ்சி ந.கதிரவன், அண்ணாமலை, வினோத் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன்,  பொருளாளர் சி.தமிழ் செல்வன், துணைத் தலைவர்கள் பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன், வேண்மாள் நன்னன், கோபு.பழனிவேல், அண்ணா.சரவணன், அ.தா.சண்முகசுந்தரம், பொறியாளர் கரிகாலன், ரஞ்சித்குமார், தருமபுரி மாவட்ட தலைவர் அரூர் இராஜேந்திரன், பகுத்தறிவு கலை இலக்கியத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, மாநில அமைப்பாளர் மேகநாதன், பேரா சிரியர் சுலோச்சனா, பகுத்தறிவு ஆசிரியரணி தம்பி பிரபாகரன் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

மாநாட்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்தளித்த திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் வலைக்காட்சி உடுமலை வடிவேல் மற்றும் செஞ்சி பொன்விழா நிறைவு மாநாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் அலகு குத்தி கார் இழுத்த திண்டிவனம் இரமேஷ், மாரிமுத்து ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

செஞ்சி மேல்ஒலக்கூர் கல்பனா, மணிமேகலை ஆகியோருக்கு பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை.திருநாவுக்கரசு, செஞ்சியில் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு நடத்த அனுமதி வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நீண்ட காலத்துக்குப்பின்னர் கழக மாநாட்டை காணும் வாய்ப்பு பெற்றதாக வேண்மாள் நன்னன் குறிப்பிட்டார். 

செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டமைகுறித்தும். மாநாடு குறித்து பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது குறித்தும் ரஞ்சித்குமார் விரிவாக எடுத்துரைத்தார். செஞ்சியிலா மாநாடு என்று திகைத்தபோது, தமிழர் தலைவர் ஆணைப்படி தன்னெழுச்சியாக மாநாட்டுப்பணிகள் சிறப்புற நடைபெற்றன என்று குறிப்பிட்டார்.

மாநாட்டின் வெற்றி குறித்து கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, க.மு.தா.இளம்பரிதி, பகுத்தறிவு ஆசிரியரணி தமிழ். பிரபாகரன், ப.க.துணைத்தலைவர் கோபு.பழனிவேல், பொதுச்செயலாளர் வி.மோகன் உள்ளிட்ட பொறுப்பாளரகள் மாநாட்டின் பணிகள், அனுபவங்கள்குறித்து எடுத்துரைத்தனர்.

துணைத் தலைவர் உரை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை யாற்றுகையில், 1970இல் தந்தை பெரியாரால் பகுத்தறிவாளர் கழகம்  தொடங்கப்பட்டு, அதன் நிரந்தர புரவலராக ஆசிரியர் அவர்கள் வழி நடத்தி வருகிறார். மாநாட்டை சிறப்பாக செஞ்சியில் செஞ்சி முடித்திருக்கிறார்கள்.

கீழ்வேளூர் பகுதியில் 1962களிலேயே பகுத்தறிவாளர் களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை நடத்தினோம். பகுத்தறி வாளர் கழகத்தில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றி ருக்கிறேன்.

எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். ஆசிரியர் அவர்கள் சொல்வது போல் தன்னம்பிக்கை, உழைப்புக்கு என்றும் வரவேற்பு உண்டு. மாநாடு என்றால் திராவிட இயக்கத்தின சிறப்பு. மக்கள் மத்தியில் கொள்கைகளை கொண்டு செல்வது, பிரச்சாரம், அறிவியல் கண்காட்சிகள் போல் அறிவார்ந்த செயல்பாடுகள், கடவுள் இல்லை என்று சொல்லி பெண்கள் தீச்சட்டி ஏந்திச் செல்வது நமக்கு சாதாரணமாக தோன்றலாம். பொதுமக்களுக்கு சிந்தனையை விதைப்பதாகும். அலகு குத்தி கார் இழுத்தார்கள். பார்ப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கும். பிரச்சாரம் மட்டுமல்ல, இயக்கத்தின் வெற்றி என்பது இதுபோன்ற செயல்பாடுகள் மூலமே. தீமிதித்தல்  இதுமாதிரி இயக்கம் உலகில் வேறு எங்கும் இல்லை.

பகுத்தறிவாளர்கள் உலகெங்கும் இருந்தாலும், இயக்கமாக, மக்கள் இயக்கமாக உருவாக்கி  தந்தைபெரியார்தான் கொண்டு சென்றார். தற்பொழுது நூறாண்டு காணும் அய்.ஏ.எஸ். பத்மநாபன் உள்பட பெரிய பெரிய அரசு அதிகாரிகள் பகுத்தறிவாளர் கழகத்தில் இருந்தார்கள். அரசாங்க அதிகாரிகள் துவேஷ பிரச்சாரத்தில் ஈடுபடு கிறார்கள் என்று இராஜகோபாலாச்சாரியாரே கல்கியில் எழுதும் அளவுக்கு பகுத்தறிவாளர் கழகம் நியாயமாக, சரியாக செயல்பட்டது.

பகுத்தறிவாளர் கழக மாநாடு சேலத்தில் நடைபெறும்போது எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். அதையும் பின்னர் நடத்தி னோம். 

செஞ்சி மாநாடு சிறப்பு பெறுகிறது என்றால், தந்தை பெரியார் தொண்டால் பலன் பெறாத தமிழர் இல்லை. தந்தைபெரியார்தான் அடித்தளம். கெடார் சு. நடராசன் போன்றவர்கள் அதன்படி செயல்பட்டார்கள்.

இன்னமும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. 

விடுதலை சந்தா திரட்டுவதில் திராவிடர் கழகத்தை பகுத்தறிவாளர் கழகம் மிஞ்ச வேண்டும்.

-இவ்வாறு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்டார்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் உரை

என் கணிப்பு தவறவில்லை. நம்மால் முடியும். தன்னம் பிக்கை உழைப்பு இருக்க வேண்டும். பொதுவாழ்க்கையில் பதவியால் என்பதைவிட, பண்பால் மதிக்கப்பட வேண்டும். பகுத்தறிவாளர் - பொதுநலத்தொண்டன்  என்பதால் மதிப்பு ஏற்படும்.

மனிதன் என்றாலே சுயநலம் உள்ளவன்தான். அது எல்லையைத் தாண்டக்கூடாது. அதிலும் பொதுநலத்துக்கு எவ்வளவு லாபம் என்று சிந்திக்க வேண்டும். வெற்றிக்காக அனைவரையும் பாராட்டுவதோடு,  வெற்றியின் கனியை, உழவாரப்பணிபோல், அதன் அறுவடையையும் சிறப்பாக பார்க்க வேண்டும். தொடர்ந்து செயலாற்றிட வேண்டும். 

செஞ்சி மாநாட்டை ஒட்டி அனந்தபுரம், பனையபுரம், அன்னியூர் போன்ற பகுதிகளில் புதுப்பிக்க வேண்டும். 

தனித்தனியாக சிதறிக்கிடந்தவர்களை, எல்லோரையும் ஒரு குடும்பமாக ஆக்கியுள்ளது திராவிட இயக்கம். அடித்தளம் தந்தைபெரியார். 

பகுத்தறிவாளர் கழகம் என்று அமைப்பு குறித்து வானொலி உரையின்போது மாணவர்கள் லயோலா, பச்சையப்பன் கல்லூரிகளிலிருந்து என்னிடம் கேள்வி கேட்டார்கள். மனிதன் என்றாலே பகுத்தறிவு உள்ளவன்தானே என்றார்கள். பகுத்தறிவு எல்லோருக்கும் உள்ளதுதான். பகுத்தறிவை ஆள்பவர்கள் பகுத்தறிவாளர்கள் என்றேன். நடந்துசெல்லும்போது சாம்பல் மேலே கொட்டிவிட்டால் உடனே சுத்தம் செய்கிறோம். சிறிது தூரத்தில் கோயிலில் சாம்பலை கொடுத்தால் நெற்றியில் பூசிக்கொள்கிறார்களே, சாம்பலை சாம்பல் என்று சொல்லும் துணிவுதான் பகுத்தறிவு என்றேன்.

பன்னாட்டளவில் ஒப்பிடும்போது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பகுத்தறிவுச் சிந்தனை அதிகம் உள்ளது. அடுத்தாற்போல் கேரளா.

சனாதனத்தை கூறிவருகின்ற ஆர்.எஸ்.எஸ். தற்பொழுது அதற்கு விரோதமாக குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒரு பெண்ணை அறிவித்துள்ளது. சனாதனத்துக்கு, மனு தர்மத்துக்கு விரோதம். இங்கேயும் பகுத்தறிவே வென்றுள்ளது. 

பெரியார் என்றால் தனி மனிதரல்ல. சமூக விஞ்ஞானம். அதன்முன் மதம் மண்டியிட்டது. மன்னிப்பு கேட்டது. 

லெவி பிராகலின் பன்னாட்டளவிலான நாத்திக மனித நேய அமைப்பில்  (IHEU) திராவிடர் கழகம் உறுப்பினராக உள்ளது.

உலக அளவில் அதிகம் படிக்கின்ற புத்தகம் தந்தை பெரியார் குறித்த புத்தகம். பல மொழிகளில், அமேசான், பிளிப்கார்ட்மூலம் பெரியார் புத்தகங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

பெரியார் இயக்கம், திராவிட இயக்கம் தோற்றதே கிடையாது.தந்தைபெரியார் சொல்வது போல் வெற்றி சிறிது தாமதமாகலாம். அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நடை முறைக்கு வந்துவிட்டதல்லவா?

கொள்கை வலிமை பெறுவது திராவிட மாடல் ஆட்சிக்கு பலம். இயக்கம் என்பது இயங்கிக்கொண்டே இருப்பது. பகுத்தறிவாளர் கழகம் சார்பில் செயல்பாடுகளை விளக்கும் கையேடு ஆங்கிலத்தில் வரவேண்டும். வெளிநாடுகளிலும் பரவ வேண்டும்.

விடுதலை சந்தா திரட்டலில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்வின் முடிவில் பொறியாளர் கரிகாலன்  நன்றி தெரிவித்தார்.

அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்து உபசரிக்கப்பட்டது.


No comments:

Post a Comment