குட்கா ஊழல் : மேனாள் அமைச்சர்கள் உட்பட 9 பேர்மீது வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

குட்கா ஊழல் : மேனாள் அமைச்சர்கள் உட்பட 9 பேர்மீது வழக்கு

சென்னை, ஜூலை 25   சென்னை புறநகர் செங்குன்றத்தில் உள்ள எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவ னத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், அந்நிறுவனம் சுமார் ரூ.250 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக் கப்பட்டது.

இந்த சோதனையின்போது கைப் பற்றப் பட்ட டைரியின் மூலம், குட்காவை தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்ய, அப்போது தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், வணிக வரித் துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா, மேனாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், மேனாள் சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேர் உதவியதும், அவர் களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப் பட்டிருப் பதும் தெரியவந்தது.

இதையடுத்து, குட்கா ஊழல் தொடர்பாக சிபிஅய் விசாரணை கோரி, மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் தார். அந்த வழக்கில் ஒன்றிய கலால் வரித் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘டில்லியில் உற்பத்தி செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோத மாக தமிழ்நாட் டுக்கு கொண்டுவர ரூ.55 கோடி ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது’’ எனத் தெரி விக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த குற்றச்சாட் டில் சிக்கியுள்ள மேனாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக, சட்டரீதியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த முன்அனுமதி கோரி தமிழ்நாடு அரசுக்கு சில தினங்களுக்கு முன்பு சிபிஅய் கடிதம் அனுப்பி இருந்தது.

இது தொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலர் பணீந்திர ரெட்டி ஆகியோர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய, ஓய்வுபெற்ற 2 அய்பி எஸ் அதிகாரிகளைத் தவிர்த்து, மேனாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக சட்டரீதியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த தமிழ் நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 

ஓய்வுபெற்ற அய்பிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கருத்துரு அனுப்பவும் தமிழ்நாடு அரசு முடிவு செய் துள்ளது. 


No comments:

Post a Comment