சென்னை, ஜூலை 29 மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரயில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால், 2021-2022ஆம் நிதியாண்டில் 63 லட்சம் மூத்த குடிமக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்துள்ளனர். எனவே, மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
ரயில் பயணத்தில் 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவீதம் கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. இது, மூத்த குடிமக்களுக்கு பேருதவியாக இருந்தது. இந்நிலையில், ரயில்வேயில் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை 2020ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது.
மருத்துவ சிகிச்சைக்கு சென்று வரவும் மூத்த குடிமக்களுக்கு இந்த கட்டண சலுகை பேருதவியாக இருப்பதால், இதை மீண்டும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், “இந்த கட்டண சலுகையால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,667 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாது” என்று ரயில்வே அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த கட்டண சலுகை ரத்து காரணமாக, 2021-2022ஆம் நிதியாண்டில் 63 லட்சம் மூத்த குடிமக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்திருப்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால், 2020-ஆம் ஆண்டு முதல் பயணத்தை படிப்படியாக தவிர்த்து வரு கின்றனர்.
நாடு முழு வதும் கடந்த 2019-2020ஆம் நிதியாண்டில், 6.18 கோடி மூத்த குடிமக்கள் ரயில் களில் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இது, 2021-2022ஆம் நிதியாண்டில் 5 கோடியே 55 லட்சமாகக் குறைந்தது. இதன்மூலம், 63 லட்சம் குடிமக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்துள்ளனர். 2020-2021ஆம் நிதியாண்டில் கரோனா காரணமாக, மிகக் குறைந்த அளவில் 1.90 லட்சம் பேர் மட்டும் பயணம் செய்தனர்.
தற்போது, இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கட்டண சலுகை இல்லாத காரணத்தால், மூத்த குடிமக்கள் பயணத்தை தவிர்த்து வருவது தெரியவந்துள்ளது. எனவே, மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தட்சிண ரயில்வே பென்ஷனர் யூனியன் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு அய்ரோப்பிய நாடுகளில் மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இருந்த கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 6 கோடி மூத்த குடிமக்களுக்கு ரூ.1,667 கோடி கொடுக்கக்கூடாதா? 63 லட்சம் பேர், வெளியூர் பயணம் செய்வதை தவிர்த்துள்ளனர். கட்டண சலுகை போக மீதமுள்ள 50 சதவீதம் டிக்கெட் வருமானம் ரயில்வேக்கு கிடைத்திருக்கும். மருத்துவ சிகிச்சைக்காகவும், சுற்றுலாவுக்காகவும் மூத்த குடிமக்கள் வெளியூர் சென்று வருகின்றனர். எனவே, இந்த கட்டணச் சலுகையை பெரிய சுமையாகக் கருதாமல் மீண்டும் வழங்க வேண்டும்.
இவ்வாறு தட்சிண ரயில்வே ஓய்வூதிய சங்கத் தலைவர் இளங்கோவன்
கூறினார்.
No comments:
Post a Comment