'விடுதலை' 60ஆயிரம் சந்தா சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

'விடுதலை' 60ஆயிரம் சந்தா சேர்ப்பு

அய்யா அவர்களுக்கு வணக்கம். 29.06.2022 அன்றைய விடுதலை நாளிதழில் வாழ்வியல் சிந்தனை மற்றும் விடுதலை சந்தா சேர்ப்பு தொடர்பான கட்டுரைகளை படித்தேன். மிகவும் சிறப்பு, காலத்திற்கேற்ற கருத்து அக்கட்டுரைகள்.

ஒருவர் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும், அந்த உழைப்பு நிதானமாகவும், கட்டுப்பாடுடனும் இருக்கவேண்டும் என்பதை தங்களின் வாழ்வியல் சிந்தனையின் மூலம் உணர்ந்தேன். அடுத்தவர் முன்னேற்றத்தை பார்த்து ஒருவர் பொறாமை கொண்டால் அதுவே தன்னுடைய முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைந்துவிடும். ஆகவே பொறாமை எனும் தீங்குணத்தை விட்டொழித்து, உழைக்கவேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற கருத்தை மக்கள் மனதில் விதைக்கக்கூடிய கட்டுரையாக இந்த வாழ்வியல் சிந்தனை அமைந்திருக்கிறது. தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் நம்பிக்கையோடும், இலக்கை அடையவேண்டும் என்ற உறுதியோடும், தொடர்ந்து நாளும் உழைத்தால் அதன் பயன் வெற்றியே என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் நாளும் உழைப்பதை வாழ்வில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உழைப்பே வாழ்கைக்கு உறுதுணை என்பதை மய்யப்படுத்தி தாங்கள் எழுதியுள்ள இந்த வாழ்வியல் சிந்தனை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயபாடமாகும்.

அன்றைய விடுதலை நாளிதழில் இன்னொரு கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதையும் இக்கட்டுரையின் தொடர்சியாகவே நான் பார்க்கிறேன். நாள்தோறும் பல அரிய தகவல்களை, சிந்தனைகளை தன்னகத்தே கொண்டு வெளிவரும் விடுதலை நாளிதழுக்கு 60,000 சந்தாக்களை திரட்டும் பெரும்பணியில் ஈடுபட்டிருக்கும் கழக தோழர்கள் “வெற்றியின் ரகசியம் இதோ” என்னும் வாழ்வியல் சிந்தனையை படித்துவிட்டு, “விடுதலைக்கு சந்தா சேர்ப்பது முக்கியம்! மிக முக்கியம்!! தந்தை பெரியார் இட்ட கட்டளைக்கான விளக்கம்- அவரே தருவது!” என்ற தங்களின் தொடரை படித்தார்கள் என்றால் தாங்கள் மதுரை பொதுக் குழுவில் கூறிய “வீடுதோறும் விடுதலை செல்லட்டும் செல்லட்டும்” என்ற முழக்கம் செயல்வடிவம் பெற்று தன் இலக்கை அடைவது உறுதி.

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருள் களை ஒரு சேர வைத்து, அவற்றிற்கிடையேயுள்ள ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆராய்வ தென்பது ஆராய்சி படிப்பில் ஒப்பீட்டு ஆய்வு எனப்படுகிறது. அந்த ஒப்பீட்டு முறையில் தந்தை பெரியார் காலம் முதல் இன்று வரை ஊடகங்களில் பார்ப்பனர் ஆதிக்க ஆக்கிரமிப்பு தொடர்வதை தங்களுடைய இந்த கட்டுரை ஒப்பீட்டு ஆய்வு செய்து, படம்பிடித்து காட்டுகிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு, பார்ப்பனர்கள் கூறும் திரிபுவாதங்களுக்கு மாறுப்பு சொல்ல விடுதலையை விட்டால் வேறு நாதியில்லை. மக்களிடத்தில் பிரச்சாரம், பிரச்சாரம் என்று பேசிப் பேசியே வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம். ஆனால் இன்றைக்கு திராவிடர் கழகத்தைத் தவிர மற்ற இயக் கங்கள் எல்லாம் பிரச்சாரத்தை குறைத்துக் கொண்டன. இந்த சூழ்நிலையில் மக்களிடம் சுயமரியாதை, சமூக விடுதலை உணர்வினை ஊட்டும் பிரச்சார பெரும் பணியை செய்துவருவது தான் விடுதலை.

தந்தை பெரியாரின் கட்டளையையும், அதற்கான அவரது விளக்கத்தையும் உள்ளடக்கி வெளிவந்துள்ள இந்த ஆறாவது தொடர், விடுதலை தேனீக்களாக சந்தா திரட்ட பறந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற கழகத் தோழர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. அதே வேளையில் இலக்கை அடைந்து வெற்றியை காண ஊக்கம் மட்டும் போதாது உழைப்பு மிக முக்கியம் என்ற தங்களின் வாழ்வியல் சிந்தனை, இலக்கை எட்டும் வரை சிறகை மடக்காதே செல் செல் செல் என்று உழைக்க தூண்டுகிறது. ஆகையால் “வீடுதோறும் விடுதலை, நாடுதோறும் நம் இலட்சிய விளக்கங்கள்” என்பது செயல்வடிவம் பெறுவது நிச்சயம். திராவிடம் வெல்லும், வரலாறு அதை சொல்லும்.   

நெல்லுப்பட்டு முனைவர் 

வே.இராஜவேல்  


No comments:

Post a Comment