60 ஆண்டுகால ‘விடுதலை’ ஆசிரியருக்கு 60 ஆயிரம் சந்தாக்கள் அளித்து- நூறாம் ஆண்டு ஆசிரியர் விழாவில் அவரிடம் லட்சம் சந்தாக்களை அளிப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

60 ஆண்டுகால ‘விடுதலை’ ஆசிரியருக்கு 60 ஆயிரம் சந்தாக்கள் அளித்து- நூறாம் ஆண்டு ஆசிரியர் விழாவில் அவரிடம் லட்சம் சந்தாக்களை அளிப்போம்!

 *    ‘விடுதலை’யால் நம் மக்கள் பெற்ற பயன் அளவற்றவை!

* நெருக்கடி காலத்தில் பார்ப்பன தணிக்கைக் கத்தரிக்கோல் ‘விடுதலை’யைப் பதம் பார்த்தது!

* கொள்கைப் பரப்புதலுக்காக விளம்பரங்களைக் குறைத்துக்கொண்ட அதிசய மனிதர் நம் அய்யா!

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரை

சென்னை, ஜூலை 27  ‘விடுதலை’யின் எதிர்நீச்சல் என்ற காணொலி உரையில் ‘விடுதலை’ சந்தித்த விழுப்புண்கள், ‘விடுதலை’யால் நம் மக்கள் பெற்ற பலன்கள், 60 ஆண்டு ஆசிரியர் என்ற சாதனைகள் குறித்து ‘விடுதலை’யின் பொறுப்பாசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார்.

விடுதலையின் எதிர்நீச்சல் - 

காணொலி சிறப்புக் கூட்டம்

கடந்த 25.7.2022 அன்று மாலை ‘விடுதலை’யின் எதிர்நீச்சல் என்ற தலைப்பில் காணொலிமூலம் நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்க வுரையாற்றினார்.

அவரது தொடக்க உரை வருமாறு:

அனைவருக்கும் வணக்கம்!

குறிப்பாக ‘விடுதலை’யின் எதிர்நீச்சல் என்ற தலைப்பிலே உரையாற்றவிருக்கக் கூடிய 60 ஆண்டுகால ‘விடுதலை’யின் ஆசிரியர் அவர்களுக்கு முதலாவதாக என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தக் காணொலியில் கலந்துகொண்டிருக்கக் கூடிய கழகப் பொறுப்பாளர்கள், இன உணர்வாளர்கள், பகுத் தறிவாளர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

ஆசிரியரின் கின்னஸ் சாதனை!

நம்முடைய ஆசிரியர் அவர்கள், ‘விடுதலை’ யின் ஆசிரியராகப் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் ஆகப் போகின்றன.

உலக அளவிலே ஓர் இதழுக்கு அல்லது ஏட் டுக்குத் தொடர்ந்து 60 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய கின்னஸ் சாதனைக்கு உரியவர் நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அது உள்ளபடியே, நம்முடைய இயக்கத்திற்கு மட்டுமல்ல, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகவும் பெருமை சேர்க்கக்கூடிய ஒரு தகவல் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

இன்னொன்று, நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு நம்முடைய தமிழ்நாட்டு மக்களும், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பகுத்தறிவாளர்களும், இன உணர்வாளர் களும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.

1962 இல், தந்தை பெரியாருடைய அழைப்பை ஏற்று, நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள், ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை ஏற்காமல் இருந்திருந்தால், ‘விடுதலை’ நாளேடாக வந்திருக்காது.

அது வார ஏடாகத்தான் வந்திருக்கும் என்பதைத் தந்தை பெரியார் சொல்கிறார்.

ஆகவே, இன்றைக்கு ‘விடுதலை’ நாளேடாக இருக் கின்றது என்று சொன்னால், அதற்கு அடிப்படை காரணமாக இருக்கக்கூடியவர் நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள்.

‘விடுதலை’ வெறும் வார ஏடாக நடந்திருந்தால்...

அது நாளேடாக இருந்த காரணத்தினால்தான், நம் மக்கள் பல்வேறு பலன்களையும், நலன்களையும் பெற்றி ருக்கின்றார்கள் என்கின்ற கண்ணோட்டத்தில் பார்க் கின்றபொழுது, மிகப்பெரிய நன்றியை, அவருக்குக் காலம் காலம் உள்ளவரை செலுத்துவதற்கு நாம் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

‘விடுதலை’யின் எதிர்நீச்சலைப்பற்றி ஏராளமான தகவல்களை நம்முடைய ஆசிரியர் அவர்களும் சேகரித்து வைத்திருக்கிறார்கள்.

இரண்டு நாள்களுக்கு முன்பு என்னிடம் பேசும் பொழுதுகூட, அதை வெளிப்படுத்தினார். ஆகவே, அதற்குள் நான் நுழையாமல், பொதுவாக, ‘விடுதலை’யில், 45 ஆண்டுகாலம் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்கின்ற முறையில், பொதுவாக ‘விடுதலை’ப் பற்றிய செய்திகளை சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இவ்விடுதலை, 1.6.1935 அன்று, நீதிக்கட்சியால், வாரம் இரண்டு முறை பத்திரிகையாகத்தான் வெளிவந்தது. அப்பொழுது அதனுடைய விலை அரையணா.

அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்தான், ‘விடுதலை’, தந்தை பெரியாருடைய கைக்கு வந்தது.

இன்றைக்கு 90 வயது காணவிருக்கும் நம்முடைய தலைவர் ஆசிரியர்; ‘விடுதலை’க்கு வயது 88.

இதுவும் ஒரு வகையில் நெருக்கமான தொடர்பு இருப்பதை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

‘விடுதலை’பற்றி 

எதிரிகளின் கணிப்பு என்ன?

‘விடுதலை’யைப்பற்றி நாம் கணிப்பதைவிட, நம்முடைய எதிரிகள் எப்படி கணிக்கிறார்கள் என்பது முக்கியமான ஒன்றாகும்.

1964 இல் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மலருக்காக, ஆச்சாரியார் இராஜகோபலாச்சாரி யாரிடம், வாழ்த்துச் செய்தி கேட்ட நேரத்தில், அவர் சொன்ன இரண்டு வரிகள் -

‘‘விடுதலையும் - பெரியாரும்

என் அன்பார்ந்த எதிரிகள்!’’ என்றார்.

இது ஒன்று போதும்.

‘அன்பார்ந்த’ என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

ஆக, ‘விடுதலை’ என்பது யாருக்கு எதிரி என்பது, எதிரியே ‘நற்சான்று பத்திரம்’ வழங்கிவிட்ட பிறகு, ‘விடுதலை’யினுடைய கொள்கையைப்பற்றியோ, அதனு டைய தொண்டுகளைப் பற்றியோ நான் விரிவாகப் பேசவேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகின்றேன்.

‘விடுதலை’ பல தளங்களிலும் பாடுபட்டு இருக்கிறது.

கம்யூனிஸ்ட் தலைவர் 

ஏ.கே.கோபாலன் பாராட்டு

1950-களில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டபொழுதுகூட, அவர்களுக்காக உரிமைக் குரல் கொடுத்தது ‘விடுதலை’ ஏடு.

இதைப்பற்றி முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சியினு டைய தலைவர் ஏ.கே.கோபாலன் அவர்கள் சொல்கிறார்,

‘‘நாங்கள் எல்லாம் வேட்டையாடப்பட்டபொழுது, சேலம் சிறையிலே, 22 பொதுவுடைமைத் தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபொழுது, எங்களுக்காக குரல் கொடுத்தவர் பெரியார். எங்களுக்காகக் குரல் கொடுத்தது திராவிடர் கழகம்; எங்களுக்காக எழுதியது ‘விடுதலை’'' என்று ஏ.கே.கோபாலன் அவர்கள் சொன்னதை இந்த நேரத்தில் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

அதேபோல, மறைந்த கல்யாண சுந்தரம் அவர் கள்கூட, எழுதிய ஒரு ஆசிரியருக்குக் கடிதமும் - ‘விடுதலை’யிலே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பதும் மிக முக்கியமான ஒன்றாகும்.

விடுதலை பல சோதனைகளைக் கடந்தது. 

நெருக்கடி நிலை காலத்தில் 

‘விடுதலை’ பட்ட பாடு!

குறிப்பாக, நெருக்கடிகாலத்தைப்பற்றி மட்டும் நான் பேசலாம் என்று இருக்கிறேன்.

நெருக்கடி காலத்திலே, ‘விடுதலை’, ‘முரசொலி’, ‘தீக்கதிர்’ போன்ற ஏடுகளுக்குத் தணிக்கை முறை இருந் தது. மற்ற ஏடுகளுக்கெல்லாம் அந்த நிலை இல்லை.

‘துக்ளக்‘ பத்திரிகையை நடத்திப் பார்த்தார்; நெருக்கடி நிலையை எதிர்த்து அவரால் பத்திரிகையை நடத்த முடியவில்லை, கடையை மூடிவிட்டார்.

ஆனால், ‘விடுதலை’, ‘முரசொலி’, ‘தீக்கதிர்’ போன்ற ஏடுகள், செத்துப் பிழைப்பது என்று சொல்வார்களே, அதுபோன்று ஒவ்வொரு நாளும் மாலையில் வர வேண்டிய ஏடு, தணிக்கை என்ற கத்தரிக்கோலுக்கு ஆளாக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் வெளிவரவேண்டிய நெருக்கடி!

தணிக்கை அதிகாரிகள் மூவரும் 

பார்ப்பனர்களே!

பத்திரிகையை அச்சிட்டு வெளியிடுவதற்கு முன்பாக - அப்பொழுது ‘விடுதலை’ நான்கு பக்கங்கள்.  அதனைத் தயார் செய்து, அதனுடைய மாதிரியை, தணிக்கை அதிகாரிகளிடம் கொண்டு போய் கொடுக்கவேண்டும். தணிக்கை அதிகாரி களாக இருந்த மூன்று பேரும் பார்ப்பனர்கள்.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பது என்று சொல்வார்களே அதுபோன்ற நிலை.

‘விடுதலை’யின் எதிர்நீச்சலில் முக்கியமான பகுதி. நெருக்கடி காலத்திலிருந்து ‘விடுதலை’ எப்படி தப்பி வந்தது?

ஆசிரியர் அவர்களோ, மிசா கைதியாக சென்னை மத்திய சிறைச்சாலையில் இருக்கிறார். அன்னை மணியம்மையார் அவர்கள் மட்டும் இருக்கிறார்கள், உடல்நலம் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில்.

திக்குத் தெரியாத ஒரு சூழ்நிலையில், தத்தளிக்கக் கூடிய காலகட்டம். அந்த ஓராண்டும், ‘விடுதலை’யை நடத்துவதற்கு அன்னை மணியம்மையாருடைய அந்த மனத்திடம் - அந்தத் துணிவு - அந்த வீரம் - இந்தப் பலத்தின் காரணமாகத்தான் ஓராண்டு அந்தப் பத்திரி கையை நாங்கள் நடத்தக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்தது.

‘விடுதலை’க்குக் கூடுதலான நெருக்கடி

‘‘இந்தியாவில் நெருக்கடி நிலை'' என்று இரா.சுப் பிரமணி என்பவர் ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

அந்த நூலில், ‘விடுதலை’ப் பட்ட பாட்டைப்பற்றி அவர் குறிப்பிடுவதை, இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

‘‘வைதீக எதிர்ப்பு,

ஜாதி மறுப்பு,

இந்துத்துவ எதிர்ப்பு,

பெண்ணுரிமைப் போன்ற அடிப்படைக் கொள் கையை உள்ளடக்கிய திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடாக, ‘விடுதலை’ வெளிவந்தது.

திராவிடர் கழகம் அரசியல் ரீதியாக தி.மு. கழகத்தை ஆதரித்து வந்தது. ‘விடுதலை’யும் நெருக்கடி நிலையை, எதிர்ப்பு நிலையை மேற்கொண்டது.

நெருக்கடி நிலையை எதிர்த்த ‘தினமணி’, ‘முரசொலி’ போன்ற ஏடுகளைவிட, கூடுதலாக ‘விடுதலை’ தணிக்கை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது.

இதற்குக் காரணம், அதன் வைதீக எதிர்ப்பும், பிராமண எதிர்ப்பும் ஆகும். பகுத்தறிவு கருத்துகளை மய்யமாகக் கொண்டு வெளியிடப்படும் ‘விடுதலை’, பிராமணர்களை விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்டது.

எனவே, ‘விடுதலை’ பத்திரிகை தணிக்கையின் கூடுதல் கண்காணிப்பிற்கு உள்ளானது. பல்வேறு நெருக்கடிக்கு உள்ளானது.

‘விடுதலை’ மற்ற ஏடுகள் சந்திக்காத புதிய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

பொருளே மாறும்படி திருத்தத் திரிபுகள்

தணிக்கைக்கு அனுப்பப்படும் ‘விடுதலை’ பத்திரி கையின் செய்திகள் பொருளே மாறும்படி, தணிக்கை அதிகாரிகளால் திருத்தங்கள் செய்யப்பட்டன.

ஒரு செய்தியில், பார்ப்பனர் என்ற வார்த்தை இருந்தால், அதைத் தணிக்கை அதிகாரிகள் பண்டிதர் என்று மாற்றினர்.

இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் என்று இருந்தால், அந்த வரி, இராஜாஜியின் தொழில்கல்வித் திட்டம் என்று மாற்றப்படும்.’’

இப்படி பொருளே மாறும்படியாக, மாற்றங்களைத் தணிக்கை அதிகாரிகள் செய்தார்கள் என்று, ‘விடுதலை’ப் பற்றி அந்த நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அர்த்தம் மாறுவதாகத் தணிக்கை அதிகாரிகளிடம் வாதம் செய்தாலும், பலன் இருக்காது.

திராவிடர் கழகத் தலைவர் பெரியார் அவர்கள் என்று எழுதினால், அவர்கள் என்ற வார்த்தை தணிக்கை அதிகாரிகளால் நீக்கப்படும்.

ஆனால், சங்கராச்சாரி என்று எழுதப்பட்டு இருந்தால், அதை சங்கராச்சாரியார் என மாற்றித் திருத்துவார்கள்.

அண்ணா நினைவிடத்தில், தொண்டர்கள் ஆண்டு தோறும் குடும்பத்தோடு கூடுவது வழக்கம். அதுகுறித்து ‘விடுதலை’ செய்தி வெளியிட்டது.

கடந்த ஆண்டு குடும்பத்தோடு வந்தோர், இந்த ஆண்டு குமுறலோடு வந்தார்கள். இதைக் கண்டதும் தோழர்கள் கண்ணீர்விட்டு, குமுறி குமுறி அழுதனர். கலைஞர் வாழ்க என முழங்கினர் என்ற பத்தியை அனுமதிக்க அதிகாரிகள் மறுத்தனர்.

இது மறைமுகமாக நெருக்கடி நிலையை விமர்சிப் பதாகத் தெரிவிக்கப்பட்டது.

நெருக்கடி நிலையின்போது, மக்கள் கண்ணீர் வடித்ததை வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன என்று ‘விடுதலை’ பட்ட பாட்டை, ‘‘இந்தியாவில் நெருக்கடி நிலை'' என்ற தலைப்பில் வெளிவந்த புத்தகத்தில் இரா. சுப்பரமணி அவர்கள் எடுத்துச் சொல்கிறார்கள்.

இதுபோன்ற ஏராளமான செய்திகளைச் சொல்லு வதற்கான தகவல்கள் நம்மிடம் இருக்கின்றன.

இன்னொன்று, தந்தை பெரியாரைப்பற்றி சொல்லு கின்றபொழுது, ‘‘அவர் ரொம்ப கஞ்சத்தனமானவர்’’ என்று சொல்கிறார்கள்.

தந்தை பெரியாரின் அறிவு நாணயம்!

உள்ளபடியே பார்க்கப்போனால், தந்தை பெரியார், வருமானமா? தன்மானமா? என்று வருகின்றபொழுது, எதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதற்கு ஒரே ஒரு செய்தியைச் சொல்கிறேன்.

ஆறு. அழகப்பன் அவர்களால், ‘‘பெரியார் ஈ.வெ.ரா.’’ என்ற நூல் எழுதப்பட்டது. அதனை சாகித்ய அகாடமி வெளியிட்டது.

அந்த நூலிலே (பக்கம் 59, 60) ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.

தந்தை பெரியார் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவருடைய அறிவு நாணயம் எப்படிப்பட்டது என்ப தைப்பற்றி அந்த நூலிலே ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார்.

‘‘தந்தை பெரியார் ‘குடிஅரசு’ இதழை நடத்திக் கொண்டிருந்தார். ‘திராவிடன்’ என்ற இதழை நீதிக்கட்சி நடத்திக் கொண்டிருந்தது. நீதிக்கட்சியால் திராவிடன் பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடியவில்லை.

அப்பொழுது நீதிக்கட்சியினர், தந்தை பெரியாரிடம் திராவிடன் இதழை ஒப்படைக்கிறார்கள்.

அப்பொழுதுகூட தந்தை பெரியார் அவர்கள், சில நிபந்தனைகளின் அடிப்படையில்தான் அந்தப் பத்திரிகையினுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

வெள்ளைக்கார ஆதிக்கம் ஒழிவதாக இருந்தால், நேரே, அது ஏழை மக்களான தொழிலாளர்களின் கைக்கு வருவதுதான் நன்மை. இந்தக் கொள்கையின் பேரில்தான், பணக்காரர்கள் பத்திரிகைக்கு உதவி செய்யவேண்டும்.

பணக்காரர்கள் உதவி செய்வதாக இருந்தாலும், இதை ஏற்றுக்கொண்டால்தான், நான் இந்தப் பொறுப்பை ஏற்பேன் என்று சொல்கிறார்’’ என்று அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தை பெரியாருடைய அந்தக் கொள்கை நாணயம் - எவ்வளவு முன்னோக்கி இருக்கிறது.

இதில் இன்னொன்று முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால்,

‘திராவிடன்’ இதழையும், ‘குடிஅரசு’ இதழையும் தொய்வில்லாமல் கவனித்து வந்தார் பெரியார். ‘குடிஅரசு’ விற்பனை வாரந்தோறும் 16 ஆயிரமாக உயர்ந்தது. அதனையும், அத்துடன் சேர்த்து, ‘திராவிடன்’ நாளித ழையும் அச்சிட வேண்டி இருந்ததால், ‘குடிஅரசு’ இதழி னுடைய பக்கங்கள் 16 ஆகக் குறைக்கப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால், கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடுவது பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, விளம்பரங்களையும் பாதி அளவாகக் குறைத்துக் கொண்டு, விளம்பரங்கள் தந்தவர்களிடம் பெரியார் வருத்தம் தெரிவித்தார். பெரியாரின் தொழில் நேர்மைக்கு இது ஒரு சான்று என்று இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள், இன்றைக்கு விளம்பரத்திற்காகவே பத்திரிகை நடத்துகிறார்கள். விளம்பரத்தின்மூலம் வரும் வருமானத்தின் அடிப் படையில்தான் பத்திரிகை நடத்த முடியும் என்ற நிலையில், அதுவும் இயக்க ஏடுகள் என்பவை நட்டத்தில் ஓடக்கூடிய ஒரு சூழல்தான்.

வருமானமா? தன்மானமா?

அந்த நிலையில்கூட, இரண்டு ஏடுகளைத் தந்தை பெரியார் அவர்கள் நடத்தவேண்டிய அவசியம் வந்த பொழுது, ‘குடிஅரசி’னுடைய பக்கங்களைக் குறைக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டபொழுதுகூட, தந்தை பெரியார் என்ன சொல்கிறார்?

கட்டுரைகளும், கருத்துகளும் அதிகம் இடம் பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், ‘திராவிடன்’ இதழ் வந்ததின் காரணமாக, ‘குடிஅரசி’னுடைய பக்கங்களைக் குறைக்கவேண்டிய சூழ்நிலையில், விளம்பரங்கள் அதிகமாக பக்கங்களை ஆக்கிரமித்தால், கருத்துகள் போய்ச் சேருவதில் ஓர் இடர்ப்பாடு ஏற்படும் என்று கருதிய தந்தை பெரியார் அவர்கள், விளம்பரத்தைக் குறைத்துக்கொண்டு, கருத்துகளைப் பரப்புவதற்கு அவர் முன்னுரிமை கொடுத்தார் என்றால், தந்தை பெரியா ருடைய அறிவு நாணயம், கருத்துகளை பரப்பவேண்டும் என்பதில் உள்ள அந்தத் துடிப்பு எத்தகையது என்பது நன்றாக விளங்கும்.

ஆக, வருமானமா? தன்மானமா? என்று வரும் பொழுது, தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரையில், தன்மானம்தான் முக்கியம் - கொள்கைதான் முக்கியம் என்ற எடுத்துக்காட்டுக்கு உள்ளாகிறார்.

இதுபோன்ற செய்தியை எங்குமே கேள்விப்பட்டு இருக்க முடியாது. எந்தப் பத்திரிகையும் இப்படி நடத்தியதாக நாம் கேள்விப்பட்டு இருக்க முடியாது.

அரசியல் கட்சிகளும் - ‘விடுதலை’யும்!

ஒவ்வொரு காலகட்டத்திலும், நம்முடைய ‘விடுதலை’ ஏட்டைப் பொறுத்தவரையில், ஆளுங்கட்சிக்கு நாம் ஆதரவாக இருந்தால், அந்தப் பத்திரிகை நூலகங் களுக்குப் போகும்.

ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருந்தால், உடனே முதலில் கை வைப்பது ‘விடுதலை’யில்தான்.

ஒருமுறை, சட்டமன்றத்தில் 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தார் - அவரைக் கடுமை யாக எதிர்த்தோம். சில பேர் சொல்வார்கள், ஆளுங் கட்சியை ஆதரிக்கிறவர் பெரியார் என்று. அவையெல் லாம் பொய்யான தகவல்.

13 ஆண்டுகள் எம்.ஜி.ஆரை எதிர்த்துத்தான் இயக் கத்தை நடத்தினோம் - பத்திரிகையை நடத்தினோம்.

அப்பொழுது துரைமுருகன் சட்டமன்றத்தில் கேட்கிறார், எதிர்க்கட்சி ஏடுகளையெல்லாம் நூலகங் களில் தடை செய்துவிட்டீர்கள்; ‘விடுதலை’ நாளேட் டையுமா தடை செய்யவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

சிறைச்சாலையில் போடப்பட்ட விடுதலை நிறுத்தப் பட்டது. அப்பொழுது நம்முடைய ஆசிரியர் அவர்கள் ஒரு வழக்குத் தொடுக்கிறார், உயர்நீதிமன்றத்தில்.

சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதிகளுக்குப் போடப்பட்ட ‘விடுதலை’ நிறுத்தப்பட்டது என்பதற்கான வழக்கு அது.

உடனே, அரசு ஆணையை மாற்றி, விடுதலையை சிறைச்சாலையில் போடலாம் என்ற அனுமதி வந்ததின் காரணமாக, அந்த வழக்கை நீங்கள் திரும்பப் பெறலாம் என்று சொன்னது நீதிமன்றம்.

இப்படி பல்வேறு காலகட்டங்களில் ‘விடுதலை’ என்பது, பல்வேறு தடைகளையும், இடர்ப்பாடுகளையும் கடந்து வந்திருக்கிறது.

அரசியல்வாதிகளுடைய எதிர்ப்பையும் அது சந்தித்து வந்திருக்கின்றது.

மதவாதிகளுடைய எதிர்ப்பைப்பற்றி நாம் கேட்க வேண்டிய அவசியமில்லை.

பார்ப்பனர்களைப்பற்றி நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை.

‘விடுதலை’யால் 

பயன் பெற்றவர்களின் நிலை என்ன?

ஆனால், ‘விடுதலை’யால் பலன்பெற்ற தமிழர்கள் - பார்ப்பனரல்லாதார் - இந்த விடுதலையை எந்த அளவிற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் - ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள் என்பது கேள்விக்குறி!

இன்றைக்குக்கூட  நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள், 60 ஆண்டுகாலம் ஆசிரியராக இருக்கின்றார் என்பதற்காக, இதை மய்யப்படுத்தி, 60 ஆயிரம் சந்தாக் களைத் திரட்டிக் கொடுப்பது என்று முடிவெடுத்தோம்.

அவர் 50 ஆண்டுகாலம் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், 50 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களைக் கொடுப்பது என்ற முடிவெடுத்து, 50 ஆயிரம் சந்தாக் களைத் திரட்டிக் கொடுத்தோம்.

நம்மால் முடியும்!

‘‘நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது;

வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!’’ என்று ஆசிரியர் சொல்வார்.

60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களை 

நம்மால் கொடுக்க முடியும்!

50 ஆயிரம் சந்தாக்களை சேர்த்த நாம் - இப்பொழுது 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. கணக்கீட்டளவில், விகிதாச்சார அளவில் பார்க்கப் போனால், 50 ஆயிரம் என்பது இரண்டு பங்காக ஆகவேண்டும். ஆனால், இன்றைக்கு 60 ஆயிரம் சந்தாக்களைக் கொடுப்பதற்காக நம்முடைய தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் தேனீக்களாகப் பறந்து பறந்து சென்று, ‘விடுதலை’ சந்தாக்கள் சேர்க்கும் இயக்கத்திலே ஈடுபட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.

நம்முடைய தோழர்களிடம் தொலைப்பேசி மூலம் பேசும்பொழுது சொல்கிறார்கள், ‘‘சந்தாக்கள் கேட்டு சென்ற இடங்களில் எல்லாம், யாரும் முகம் சுளிக்காமல், நாம் 10 சந்தாக்கள் கேட்டால், 2 சந் தாக்களையாவது கொடுக்கிறார்கள்; யாரும் இல்லை என்று மறுப்பதில்லை’’ என்று சொன் னார்கள்.

ஆகவே, நாம் கேட்பதற்குதான் சில இடங்களில் தயக்கம் இருக்குமே தவிர, கொடுக்கின்றவர்கள் கண்டிப்பாக, தாராள மனப்பான்மையுடன் கொடுக் கிறார்கள். பட்டை போட்டவர்களும் இருக்கிறார் கள்; நாமம் போட்டவர்களும் இருக்கிறார்கள்.

ஆனாலும் அவர்கள் சொல்கிறார்கள், ‘விடுதலை’ இல்லாவிட்டால், எங்கள் கதி என்ன? எங்கள் வீட்டுப் பிள்ளைகள் இப்படி படித்திருக்க முடியுமா? என்கிறார்கள்.

இந்த நன்றி உணர்வு தாரளமாக நம்முடைய தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

சமூகநீதிக்காக ‘விடுதலை’ பட்டபாடு, கொடுத்த குரல், சந்தித்த போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

‘விடுதலை’யால் பெற்ற பலன்கள்

இன்றைக்கு இந்தியாவிலேயே 69 சதவிகித இட ஒதுக்கீட்டை சட்ட ரீதியாக - அரசாணை அல்ல - சட்ட ரீதியாக தமிழ்நாட்டு மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், அருந்ததியினர், சிறுபான்மையின சமுதாயத் தினர் அனைவரும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை சட்ட ரீதியாக அனுபவிக்கின்றார்கள் என்றால், நம்முடைய கழகம், கழகத்தின் தலைமை, இவற்றிற்குப் போர் வாளாக இருக்கின்ற ‘விடுதலை’ கொடுத்த குரல் மிகமிக மிக முக்கியமான பங்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

நாம் நினைத்துப் பார்க்கவேண்டும் - இந்தியா சுதந் திரமடைந்து 75 ஆண்டை கொண்டாடப் போகின்றோம். நாம் போராடி, மாநில அளவிலே இட ஒதுக்கீட்டைப் பெற்றோம். ஆனால், ஒன்றிய அரசைப் பொறுத்தவரையிலே, இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்டா? என்றால், நிச்சயமாக இல்லை.

1940 இல் நீதிக்கட்சியின் தீர்மானம்!

1940 இல், திருவாரூரில் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க செயற்குழுக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அந்தத் தீர்மானத்தில், மத்திய அரசாங்க உத்தியோகத் திலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்பதாகும்.

ஆனாலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு என்று சொன்னாலும்கூட, அந்த 22.5 சதவிகித அளவிற்குக் கொடுக்கப்பட்டதா? என்றால், அதுவும் ஒரு கேள்விக்குறிதான்.

இந்த நிலையில்தான், முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் - காகாகலேல்கார் தலைமையில் உருவாக் கப்பட்ட ஆணையம், பரிந்துரைகளைக் கொடுத்தும், அந்தப் பரிந்துரைகள் சென்ற இடம் தெரியவில்லை.

மண்டல் குழு பரிந்துரையும் - 

நமது பங்களிப்பும் - போராட்டங்களும்!

இரண்டாவதாக, பி.பி.மண்டல் அவர்களின் தலைமையில், பிற்படுத்தப்பட்டோருக்கான நல வாரியம் உருவாக்கப்பட்ட நேரத்திலே, அதற்காக ‘விடுதலை’யும், இந்த இயக்கமும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

42 மாநாடுகளை நடத்தியிருக்கின்றோம் - 16 போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம்.

பி.பி.மண்டல் அவர்கள், பெரியார் திடலுக்கு வந்த நேரத்தில், மிகப்பெரிய அளவிற்கு வரவேற்பு கொடுக் கப்பட்டது.

அந்த நேரத்தில், பி.பி.மண்டல் அவர்கள் மனந்திறந்து பேசினார்.

‘‘நாங்கள் அறிக்கைகள் கொடுக்கலாம்; பரிந்துரை களைக் கொடுக்கலாம்; முதல் பிற்படுத்தப்பட்டோர் காகாகலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழு கொடுத்த பரிந்துரைக்கு என்ன கதி ஏற்பட்டதோ, அதே நிலை எங்களுடைய பரிந்துரைக்கும் ஏற்படக் கூடும். ஆனால், அது செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்றால், அது பெரியார் பிறந்த தமிழ்நாடுதான் அதற்குக் காரணமாக இருக்க முடியும். அதற்கு அதனுடைய தலைவராக இருக்கக்கூடிய வீரமணி அவர்களுடைய கையிலேதான் அது இருக்கிறது’’ என்று, மனந்திறந்து பி.பி.மண்டல் அவர்க«ள் பேசியதை இந்த நேரத்தில் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

இன்றைக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு நமக்குக் கிடைத்திருக்கிறது - வி.பி.சிங் ஆட்சியிலே முதன் முதலாக வேலை வாய்ப்பிலே 27 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்தது என்றால், அதற்காக நாம் மிகப்பெரிய விலையைக் கொடுத்திருக்கின்றோம்.

நம்முடைய தோழர்கள், டில்லியில் பிரதமர் இந்திரா காந்தி வீட்டிற்கு முன்பாக மறியல் செய்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்திற்கு முன்பாக மறியலை நம்முடைய கருஞ்சட்டைத் தோழர்கள் மறியல் செய்து, டில்லி சிறையை சந்தித்திருக்கிறார்கள்.

பிரதமர் வி.பி.சிங்கின் அறிவிப்பு!

27 சதவிகித இட ஒதுக்கீட்டை, வேலை வாய்ப்பில் முதன்முதலாக வி.பி.சிங் அறிவித்த நேரத்தில், அவர் சொன்னார்,

தந்தை பெரியாரின் கனவு நனவாயிற்று என்று சொன்னார்-

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய கனவு நனவாயிற்று  என்று சொன்னார் -

லோகியா அவர்களுடைய கனவு நனவாயிற்று என்று சொன்னார் -

27 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய அரசினுடைய வேலை வாய்ப்பில் கொடுத்த காரணத்தினால், வி.பி.சிங் அவர்கள் ஆட்சியை இழக்க நேர்ந்தது என்பதை இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கவேண்டும்.

அடுத்து, 2006 ஆம் ஆண்டிற்குப் பின்புதான், கல்வியில் 27 சதவிகித இட ஒதுக்கீடு நமக்குக் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தியாகும்.

நமது உழைப்பால் 

இந்தியா முழுமைக்கும் பலன்!

இன்றைக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமையும் இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட மக்கள், 27 சதவிகித இட ஒதுக்கீட்டை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அனுபவிக்கிறார்கள் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம், நம்முடைய கழகமும், அதன் ஒப்பற்ற தலைவரான ஆசிரியரும், அதற்குப் போர் வாளாக இருந்து சுழன்ற நம்முடைய ‘விடுதலை’ ஏடும்தான் என்பதை இந்த நேரத்திலே நன்றியோடு நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

இந்தச் சூழ்நிலையில்தான், 60 ஆயிரம் சந்தாக்களை, 60 ஆண்டுகள் ஆசிரியராக இருக்கின்ற நம்முடைய ஆசிரியர் கைகளில் ஒப்படைப்பது என்கிற ஒரு முடிவை எடுத்திருக்கின்றோம். நமது முதலமைச்சரே சந்தா அளித்து உற்சாகப்படுத்தி உள்ளார்.

நூற்றாண்டு ஆசிரியரைச் சந்திப்போம்!

நாம் எடுத்த முடிவில், ஒரு சந்தாக்கள்கூட குறையக்கூடாது. கண்டிப்பாக 60 ஆயிரம் சந்தாக் களை நம்முடைய தலைவருடைய கரத்தில் ஒப்ப டைத்தால், ‘விடுதலை’க்கு நூறாண்டு ஆசிரியர் என்ற நிலையை எட்டுவார் - அப்பொழுது ஒரு லட்சம் சந்தாக்களை நாம் கொடுக்கக்கூடிய நிலையில் இருப்போம் என்பதையும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி,

நம்முடைய தோழர்கள் மத்தியிலே, இன்றைக்கு இருக்கக்கூடிய முக்கியமான முதல் கடமை -

‘விடுதலை!’ ‘விடுதலை!!’ ‘விடுதலை!!’

60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களை நம்மு டைய தலைவரிடத்திலே ஒப்படைப்பது நம்மு டைய முதற்கடமை! முதற்கடமை!!  என்பதில் முழு மூச்சாகக் கொண்டு, பம்பரமாக, தேனீக்களாக பாடுபடவேண்டும் என்ற ஓர் அன்பான வேண்டு கோளையும் விடுக்கிறேன்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில், தொடக்கவுரையாற்றக் கூடிய ஓர் அரிய வாய்ப்பைக் கொடுத்த நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுக்கும், இயக்கத்தினருக்கும் நன்றி கூறி, விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரை யாற்றினார்.

No comments:

Post a Comment