சென்னை, ஜூலை 2 சென்னையில் வரும் ஜூலை 4 ஆம் தேதி உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (1.7.2022) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
"தமிழ்நாட்டிற்கு புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய வகையில், ஜூலை 4 ஆம் தேதி சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஓராண்டு காலத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ஏறத்தாழ 94 ஆயிரத்து 975 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, இந்த முதலீடுகளின் வாயிலாக ஏறத்தாழ 2 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது.
இன்று நாங்கள் கையெப்பமிட்டிருக்கக் கூடிய ஒப்பந்தம், அய்ஜிஎஸ்எஸ் - செமி கண்டக்டர் துறையில் செய்யப்பட்டுள்ள அந்த ஒப்பந்தம் உட்பட ஏறத்தாழ 132 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை செய்திருக்கிறோம்.
இந்த 132இல் 78 தொழில் திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் இருக்கின்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ள திட்டங்களின் நிலைகளைப் பார்க்கும்போது, 29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 25 திட்டங்கள் திட்டமிடல் நிலையில் உள்ளன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள், உலகளாவிய திறன் மய்யங்கள், ஆராய்ச்சித் திட்டங்களுக்கான ஆதரவு சேவைகள் இந்த அளவிலும் தமிழ்நாடு அரசு மிகப்பெரிய உந்து சக்தியாக திகழ்கிறது" என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment