பெரியார் - மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் 34 ஆம் ஆண்டு சாதனை கண்டு வியக்கிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

பெரியார் - மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் 34 ஆம் ஆண்டு சாதனை கண்டு வியக்கிறோம்!

  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சிறந்தோங்கிக் காணப்படுகிறது   
  • கழிவுப் பொருள்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது
  • தந்தை பெரியாரின் சிக்கன சிந்தனைதான் காரணம் என்றார் நமது வேந்தர் ஆசிரியர்
  • சட்ட நுணுக்கங்களை நமது ஆசிரியர் அறிந்தவர் போல வேறு யாருமில்லை 
  • தந்தை பெரியார் கருத்துகளை உலகெங்கும் கொண்டு செல்கிறார்!

நமது முதலமைச்சர் நடத்தும் ‘‘திராவிட மாடல்’’ அரசுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக, ஆலோசகராக இருப்பவர் நமது ஆசிரியர்

மூன்றாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாடு -
திராவிட மாடல் அரசில் விரைவில் முதலிடத்திற்கு வரும்!

அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உறுதி!

வல்லம், ஜூலை 2    34 ஆண்டுகளில் இந்த நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு வியக்கிறோம். தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை களுக்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ‘திராவிட மாடல்’ ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு நமது ஆசிரியர் உறுதுணையாக உள்ளார். இந்தியாவின் தொழிற்துறையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாடு விரைவில் முத லிடத்திற்கு வரும் - இவ்வாட்சிக்கு நமது ஆசிரியரின் துணை உண்டு என்றார் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கால நிலை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள்.

34 ஆம் ஆண்டு விழாவில்...

நேற்று (1.7.2022) தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் 34 ஆம் ஆண்டு விழாவில்  தமிழ்நாடு சுற்றுச் சூழல் காலநிலை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

தமிழ்நாட்டில் மிகச் சிறந்த பல்கலைக் கழகமாக இருக்கின்ற, தஞ்சை நகரில் அமைந்திருக்கின்ற பெரியார் - மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் 34 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கின்ற, பல்கலைக் கழக நிறுவனர், வேந்தர் மானமிகு அய்யா ஆசிரியர் அய்யா அவர்களே,

இந்த விழாவில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கின்ற பல்கலைக் கழக ஆட்சி மன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய மானமிகு அண்ணன் வீ.அன்புராஜ் அவர்களே, வரவேற்புரை ஆற்றியிருக் கின்ற துணைவேந்தர் டாக்டர் வேலுசாமி அவர்களே,

மற்றும் இந்த விழாவில் பங்கெடுத்து சிறப்புச் சேர்த்து இருக்கின்ற 1989 முதல் தொடர்ந்து பல்வேறு காலகட்டங் களில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, ஏழை, எளிய மக்களுடைய தோழனாக, அந்த மக்களுக்கான அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றித் தந்து, கடந்த அய்ந்தாண்டு காலம் நாங்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தபொழுது, என்னுடைய அருகில் இருப்பவர், மரியாதைக்குரிய அண்ணன் துரைசந்திரசேகரன் அவர்களும், அதற்கடுத்தபடியாக இருந்தவர் மேனாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் கே.பி.பி.சாமி  அவர்கள்,

இப்படி இவர்களுடைய அன்பு கிடைத்ததால், நட்பு கிடைத்ததால், பொது வாழ்க்கையில் இந்த அளவிற்கு உயர்வதற்காக - ஒரு சில நேரத்தில், நான் வேதனையோடு இருக்கும்பொழுது, ஆறுதல் சொல்லி, உனக்கு எதிர் காலம் இருக்கின்றது என்று சொல்வார்கள். அண்ணன் கே.பி.பி.சாமி அவர்கள் இன்றைக்கு இல்லை.

இவற்றையெல்லாம் தாண்டி, அன்றைக்கு எதிர்க் கட்சித் தலைவராக இருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் எங்களைப் பாதுகாத்துக் கொண்டு வந்தார்.

அப்படிப்பட்ட மாண்புமிகு அண்ணன் துரைசந்திர சேகரன் அவர்களே,

தஞ்சை மாநகராட்சி மேயர் அருமை நண்பர் வணக்கத்திற்குரிய சன்.இராமநாதன் அவர்களே,

இந்த விழாவில் கலந்துகொண்டு ஆண்டறிக்கை வாசித்திருக்கின்ற முதல்வர் டாக்டர் ஜார்ஜ் அவர்களே,

நன்றியுரை ஆற்றவிருக்கின்ற பதிவாளர் டாக்டர் சிறீவித்யா அவர்களே,

மற்றும் பேராசிரியப் பெருமக்களே, மாணவச் செல்வங்களே, அருமைப் பெரியவர்களே, நண்பர்களே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதருடைய வாழ்க்கையில், ஒவ்வொரு நொடியும் முக்கியம்!

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையில், ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்று நாங்கள்  அறிந்திருக்கின்றோம்.

இந்த நிகழ்வானது 3 மணிக்கு நடைபெறவேண்டிய நிகழ்வு, காலங்கடந்த 4 மணிக்குத் தொடங்கியிருக்கிறது. அதற்குக் காரணம் நான் என்பதை உங்களிடத்தில் தெரிவித்து, அதற்காக என்னுடைய வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.

காரணம், இன்றைக்குக் காலை 11 மணிக்கு நடை பெறுவதாக இருந்த இந்த விழா, நேற்று மாலை 5 மணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அலுவல கத்திலிருந்து காலை 10.15 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில், விரைவில் தொடங்கவிருக்கின்ற 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியினுடைய விளம்பர வாகனங்கள்,  பேருந்துகளை இயக்கி வைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகிறார்கள். அந்த விழாவில் பங்கேற்கவேண்டும் என்கிற நிலையில், துறையின் அமைச்சர் என்கின்ற நிலையில், நேரிடையாக அந்த விழாவில் பங்கேற்று விட்டு வருவதற்குக் காலதாமதமாகி விட்டது என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.


நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்

நான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருடைய அமைச்சரவையில் இடம்பெற்று ஓராண்டு கடந்த, இந்த சூழ்நிலையில், முதன்முறையாக ஒரு பல்கலைக் கழகத்தின் ஆண்டு விழாவில் கலந்துகொள்வது - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில்தான் என்பதை நான் நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்குக் காரணம், என்னை உருவாக்கியது தந்தை பெரியாருடைய பகுத்தறிவு கருத்துகள்.

இந்த விழா மேடையில், 33 ஆண்டுகள் இந்தப் பல்கலைக் கழகத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி, இந்த சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமப்புற மக் களுக்குக் கல்வியைக் கொடுத்து, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய சிந்தனைகளை, கருத்துகளை -  60 ஆண்டுகள் திராவிடர் கழகத் தலைவராக இருந்து, இவ்வளவு பணிகளுக்கும் இடையே ஒரு சாதாரண கிராமத்திலிருந்து வந்த என்னை, இந்த மேடையில், அவருக்கு அருகிலே அமர்த்தி, இந்த விழாவில் பங்கு கொள்ள செய்தது என்பதுதான் -  திராவிட மாடல் ஆட்சி என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிரே என்னுடைய தமிழாசிரியர் அமர்ந்திருக்கிறார். என்னை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவர்தான் எனது 6 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்புரை தமிழாசிரியர்.

அவர் முழுக்க முழுக்க பகுத்தறிவுச் சிந்தனையாளர்; தந்தை பெரியாரின் கருத்துகளை ஏற்று, இன்றளவும் நடக்கக் கூடியவர். அவருடைய மகன் பெயர் பிரபாகரன்; அவருடைய மகள் பெயர் கணினி.

பகுத்தறிவுக் கருத்துகளை உள்வாங்கி, உள்வாங்கி...

இப்படி தமிழ்ப் பெயர்களைச் சூட்டி, அய்யாவி னுடைய கருத்துகளை எங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொண்டே இருப்பார். பகுத்தறிவுக் கருத்துகளை உள்வாங்கி, உள்வாங்கி, நாங்களும் அய்யாவினுடைய வழியைப் பின்பற்றத் தொடங்கினோம்.

பகுத்தறிவுச் சிந்தனையை, அய்யாவினுடைய கருத்துகளைப் பின்பற்றியதினால்தான்...

அப்படித் தொடங்கிய பயணம்தான், பகுத் தறிவுச் சிந்தனையை, அய்யாவினுடைய கருத்து களைப் பின்பற்றியதினால்தான், இந்த உயரத்தில் என்னை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்பதை இளைஞர் சமுதாயமான உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ்.காரரின் மனவேதனை

ஒன்றிய அமைச்சரை சந்திப்பதற்காக அண்மையில் நான் டில்லிக்குச் சென்றிருந்தேன். அமைச்சரின் உதவியாளராக பா.ஜ.க.காரர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் என்னோடு உரையாடிக் கொண்டிருந்தார். கட்சிகளைக் கடந்து, தமிழன் என்ற உணர்வோடு அவர் என்னிடம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘நான், ஒருவேளை படித்திருந்தால், ஆட்சித் தலை வராக உயர் பொறுப்பில் இருந்திருப்பேன். ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்குச் சென்று, அதற்குள் மாட்டிக்கொண்டு, இன்றைக்கு என்னுடைய வாழ்க் கையை இழந்து நிற்கின்றேன்’’ என்று, ஒரு ஆர்.எஸ்.எஸ். மாணவன், அவனுடைய வேதனையைப் பகிர்ந்துகொண்ட நிலையை நான் பார்த்தேன்.

காட்சிக்கு எளியவர்; அய்யாவினுடைய கருத்துகளை உலகெங்கும் எடுத்துச் செல்பவர்

இங்கே இருக்கின்ற அய்யா ஆசிரியர் அவர் கள், பார்ப்பதற்குக் காட்சிக்கு எளியவர்; அய்யா வினுடைய கருத்துகளை உலகெங்கும் எடுத்துச் செல்பவர். இன்றைக்கும் சனாதன சக்திகள் இந்த மண்ணில் புகவிடாமல் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் படைத்த ஒரு மாபெரும் தலைவர்.  அவற் றையெல்லாம் கடந்து, அவர் இங்கே இருக்கின்றார். 

உங்களுக்கெல்லாம் தெரியும், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் உயர்நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த ஜனநாயகத்தினுடைய உச்சமாக இருக்கின்ற உச்சநீதிமன்றமும் உங் களுக்குத் தெரியும். உச்சநீதிமன்றத்தில் நொடிக்கு நொடி வருகின்ற அத்தனை தீர்ப்புகளையும், சட்டங்களையும் தெரிந்து வைத்திருப்பவர் நம்முடைய மரியாதைக்குரிய  மானமிகு ஆசிரியர் அய்யா என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு குரல் எழும் - அதுதான் ஆசிரியர் அய்யாவின் குரல்!

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களைப் பாதிக்கின்ற சனாதன சக்திகளால் சட்டங்கள் இயற்றப்படுகின்றனவோ, உடனடியாக தமிழ்நாட்டிலிருந்து ஒரு குரல் எழும் - அதுதான் ஆசிரியர் அய்யாவின் குரல், ‘விடுதலை’ நாளி தழின் மூலமாக வரும் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலிலேயே எச்சரிக்கை விடக்கூடியவர் நம்முடைய மரியாதைக்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா

எத்தனையோ சட்டங்களைப் போட்டு, அப்படியே விட்டுவிடுவார்கள். அந்த சட்டமானது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப் பட்டபொழுதுதான், அய்யோ பாதிக்கப்படுகின் றோமே என்று நாம் தடுமாறுவோம். அந்த பாதிப்பு வரும் என்று அந்த சட்டம் வரும்பொழுதே, எச்சரிக்கை விடக்கூடியவர் நம்முடைய மரியா தைக்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள்.

அறிவில் சிறந்த சான்றோர்களை நாம் மதித்துப் போற்றிடவேண்டும். அந்த வகையில், பாதுகாக் கப்படவேண்டிய தலைவர் நம் ஆசிரியர் அவர்கள்.

இப்படிப்பட்ட அய்யாவினுடைய அந்தக் கருத்து களைத்தான், இன்றைக்குத் தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கின்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்று நடக்கிறார் என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

அய்யா தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாளை, சமூகநீதி நாளாக அறிவித்து, சட்டமியற்றி, அந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடியவர் திராவிட மாடல் ஆட்சியினுடைய தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் என்பதை மறந்துவிடாதீர்.

ஜூன் 24 ஆம் தேதி  நடைபெற வேண்டிய நிகழ்ச்சி!

வட மாநிலங்களில், அண்மையில் 24, 25 ஆம் தேதி குஜராத்தில் நடைபெற்ற இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கக்கூடிய மாநாட்டில், நான் பங்கேற்றேன்.

இந்தப் பல்கலைக் கழக விழாகூட 24 ஆம் தேதிதான் நடக்கவேண்டி இருந்தது. நான் ஆசிரியர் அய்யாவிடம் சொன்னேன், இந்த விழாவிற்கு என்னால் வர முடிய வில்லை என்றபொழுது,

நீங்கள் எப்பொழுது வருகிறீர்களே,  அப்பொழுதுதான் இந்த விழா நடக்கும் என்று சொன்னபொழுது, என் வாழ்வில் பெற்ற பெரும் பேறாக நான் அதைக் கருதுகிறேன்.

குஜராத்தில் 24, 25 ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டபொழுது, அங்கே எங்கே பார்த்தாலும் பொட்டல் காடுகள்தான்; எங்கும், எந்த வளர்ச்சியும் கிடையாது. எல்லா இடங்களிலும் பான்பராக் வாசனை தான். யாருக்கும், முறையான ஆடை அணியத் தெரிய வில்லை. யார் வீட்டிலும் இரு சக்கர வாகனங்கள் இல்லை. அங்கே கட்டப்பட்ட வீடுகள் சுற்றுச்சுவர் பூச் சுகள்கூட இல்லை. வெறும் செங்கற்களாகத் தெரிகின்றன.

அங்கே தந்தை பெரியார் பிறக்கவில்லை....

இப்படி இருப்பதற்குக் காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால், அங்கே தந்தை பெரியார் பிறக்க வில்லை; அங்கே பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறக்கவில்லை; அங்கே முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அய்யா பிறக்கவில்லை.

பல மாநிலங்களில் உள்ள மக்கள் கல்வி வாய்ப்பை இழந்து, வேலை வாய்ப்பை இழந்து நிற்கின்ற நிலையைப் பார்க்கின்றபொழுது, வேதனையாக இருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டைப் பார்க்கும்பொழுது, இன்றைக்கு நாம் வளர்ச்சி பெற்றிருக்கின்றோம் என்றால், அதற்குக் காரணம், தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும், அதன் தொடர்ச்சியாகவே இன்றைக்கு முதலமைச்சர் தளபதி அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நினைத்து நான் பெருமையடைகிறேன்.

ஆக, இன்றைக்கு நடைபெறுகின்ற விழாவில் பங் கேற்கும்பொழுது, ஒரு புதிய உலகத்திற்கு வந்ததாக நினைக்கின்றேன்.

குறிப்பாக, மவுன மொழியில் அவர்கள் ஆற்றிய நிகழ்வை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். மரங்களை வெட்டுவதினால், இயற்கையை நாசப்படுத்துவதினால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மிகமிகத் தெளிவாக சொன்னார்.

அந்த அடிப்படையில், இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு யாருக்கும், எந்த அக்கறையும் இல்லை.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் என்று பெயர் மாற்றம் செய்தார்

ஆனால், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஓர் இயக்கத்தினுடைய தலைவராக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, சுற்றுச்சூழல் என்கிற ஓர் அணியை உருவாக்கினார். அதன் பின்பு, முதல மைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், சுற்றுச்சூழல் துறை என்றிருந்த பெயரை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் என்று பெயர் மாற்றம் செய்தார். அப்படி பெயர் மாற்றம் செய்துவிட்டு, அந்தத் துறைக்கு யாரை அமைச்சராக்கலாம் என்கின்றபொழுது, மாண்பு மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அமைச்சரவை பொறுப்பேற்றதற்கு ஒருவார காலத்திற்கு முன்பாக,  ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

அய்ட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 175 நாட்கள் களத்தில் நின்றேன்

என்னுடைய தொகுதியில், நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, ஒன்றிய அரசு, அய்ட்ரோ கார்பன் என்ற ஓர் அபாயகரமான திட்டத்தை நெடுவாசல் மண்ணில் கொண்டு வந்தது. அப்பொழுது நான் அந்தத் திட்டத்தை எதிர்த்து 175 நாட்கள் களத்தில் நின்றேன்.

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சக் கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று சட்டமன் றத்தில், அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தளபதி அவர்கள், தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி, அந்தத் திட்டத்தைத் தடுத்தார்.

மிகப்பெரிய எச்சரிக்கை நமக்கு வந்திருக்கிறது

அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்த என்னை - இவர்தான் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பார் என்று  மாண்பு மிகு தமிழ்நாடு முதலமைச்சர் இந்தத் துறையை என் னிடம் ஒப்படைத்திருக்கின்றார் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்பேற்று ஓராண்டு காலம் வேதனையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காரணம், சுற்றுச்சூழலைப் பற்றிய புத்தகங்களைப் படிக்கின்றபொழுது, இந்த உலகம் இன்னும் 40, 50 ஆண்டுகாலம்தான் இருக்கும் என்கின்ற மிகப்பெரிய எச்சரிக்கை நமக்கு வந்திருக்கிறது.

நாம் மட்டுமல்ல, நம்முடைய அடுத்த தலைமுறை எப்படி வாழப் போகிறது என்கின்ற எச்சரிக்கையையும் தருகின்றது. அதற்குப் பதிலாக, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் தந்திருக்கின்றார் நம்முடைய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் என்பதை நான் நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் சுவாசிப்பதற்கு 21 சதவிகிதம் ஆக்சிஜன் தேவை!

இந்த இடத்தில், சாதாரணமாக, சராசரியாக இந்த வனங்கள் நிறைந்த பகுதியை விட்டு வெளியில் நாம் சென்றால், வெப்பம் அதிகமாகத் தாக்கும்; அந்த இடத்தில் நம்முடைய ஆக்சிஜன் அளவு என்னவென்று பார்த்தால், 21 சதவிகிதம் இருக்கும். நாம் ஒவ்வொருவரும் சுவாசிப்பதற்கு 21 சதவிகிதம் ஆக்சிஜன் இருந்தால் மட்டும்தான் நாம் வாழ முடியும். அதைவிட ஆக்சிஜன் அளவு குறைந்தால், நாம் உயிர் வாழ முடியாது.

ஆனால், இந்த இடத்தில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு என்று பார்த்தால், கிட்டத்தட்ட 25 சதவிகிதம் ஆக்சிஜன் தரக்கூடிய மண்ணாக இதனை மாற்றியிருக்கிறார்.

18 ஆண்டுகளில், ஓர் அருமையான இடத்தை உருவாக்கியிருக்கிறார்

இதைவிட, அருகிலுள்ள மூங்கில் காடுகளைப் பார்த்தேன். அய்யா அவர்கள், 2006 ஆம் ஆண்டி லிருந்து 18 ஆண்டுகளில், ஓர் அருமையான இடத்தை உருவாக்கியிருக்கிறார். மூங்கிலின் சிறப்பு என்னவென்று தெரியுமா? மூங்கில் உலகில் இருக்கின்ற மரங்களில், அதிகமான ஆக்சிஜனை தரக்கூடிய வல்லமை படைத்ததாகும்.

28 சதவிகிதம் ஆக்சிஜன் தரக்கூடிய ஒரு மூங்கில் காடு

இப்படி இந்த இடத்தில் 21 சதவிகிதம் ஆக்சிஜன் அளவு என்றால், அரச மரம், ஆலமரங்கள் இருக்கின்ற இடத்தில், 25 சதவிகிதம் ஆக்சிஜன் தரக்கூடிய அளவில் இருக்கும். ஆனால், மூங்கில் காடுகள் நிறைந்த பகுதி களில் நாம் செல்கின்றபொழுது, 28 சதவிகிதம் ஆக்சிஜன் தரக்கூடிய ஒரு மூங்கில் காட்டை ஆசிரியர் அய்யா உருவாக்கித் தந்ததைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன்.

ஆசிரியர் அய்யாவினுடைய சிந்தனையைக் கண்டு வியந்து போனேன்.

இந்தியாவினுடைய பல பகுதிகளுக்கு, பகுத்தறிவுக் கருத்துகள் - சிந்தாந்தங்கள் எவ்வாறு இன்றைக்குத் தேவைப்படுகிறதோ - சமூகநீதியை மீட்டெடுப்பதற்கு - அதைப்போல. 

மரங்கள், ஆக்சிஜன் தருவது மட்டுமல்ல, நாம் வெளியிடக்கூடிய கார்பன்-டை-ஆக்சைடு - ஒரு நாளைக்கு ஒரு மரமானது 22 கிலோ கார்பன்-டை- ஆக்சைடை உட்கொண்டு, 20 கிலோ ஆக்சிஜனை தரக்கூடிய வல்லமை படைத்தன மரங்கள்.

வாழ்நாளில் 53 கோடி ரூபாய்க்கான ஆக்சிஜனை நாம் சுவாசிக்கின்றோம்!

ஒரு மனிதன் சுவாசிக்கின்ற ஆயுட்காலத்தில், 60 லிருந்து 65 ஆண்டுகாலம் வாழ்ந்தால், அவன் சுவாசிக்கின்ற ஆக்சிஜனின் அளவு என்ன தெரியுமா?

53 கோடி ரூபாய்க்கான ஆக்சிஜனை நாம் சுவாசிக் கின்றோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அதுமட்டுமல்ல, இயற்கை இன்றைக்குப் பல உயிர் களையும் வாழ வைக்கின்றன. மனிதனுடைய நவீன வளர்ச்சியினால்,  பல இடங்களில் பறவைகள், பல்வேறு உயிரினங்கள் வாழ முடியாத நிலைகள் ஏற்பட்டு இருக்கின்றன.

ஆனால், இந்தப் பல்கலைக் கழக வளாகம் முழுவதும், பல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பாம்புகள் முதல் பல்வேறு உயிரினங்கள், பறவைகள்கூட இந்த வனத்தில் இருக்கின்றன என்பதை நான் நன்றியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு ‘‘பசுமை முதன்மையாளர் விருது’’

அப்படிப்பட்ட மிகச் சிறப்பான கட்டமைப்பை உருவாக்கியிருக்கின்ற இந்தப் பல்கலைக் கழகத்தினுடைய சுற்றுச்சூழலைப் பாதுகாக்கின்ற சிறப்பைப் போற்றிப் பாதுகாப்பதற்காகத்தான், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 2021 ஆம் ஆண்டிற்கான, தஞ்சை மாவட்டத்தில் இருக்கின்ற பல்வேறு தனியார் நிறுவனங்களை விண்ணப்பிக்க வைத்து, அதில் தலைசிறந்த நிறுவனமாக நமது பெரியார் - மணியம்மை பல்கலைக் கழகம் விளங்குகிறது என்பதைத் தெரிந்து விருது அளித்தார்.

இதுபோன்ற இயற்கை ஆர்வலர்களை சிறப் பிக்கவேண்டும்; அவர்களைப் பாராட்டவேண்டும் என்பதற்காக ‘‘பசுமை முதன்மையாளர் விருது’’ (கிரீன் சாம்பியன்) வழங்கினார். அந்த விருது நமது மானமிகு ஆசிரியர் அவர்கள் வேந்தராக இருக்கின்ற பல்கலைக் கழகத்திற்கு இந்த ஆண்டு வழங்கி, நம்முடைய முதலமைச்சர் வழங்கி சிறப்பு சேர்த்திருக்கின்றார் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘பூமிக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’’ 

இயற்கையைப் பாதுகாத்தே ஆகவேண்டும்; இயற் கையை நாம் ஒட்டுமொத்தமாக, அந்த வாசகத்தைப் பார்த்தீர்களேயானால், மவுன மொழி முடித்துவிட்டு, அந்த மரங்களை வெட்டாமல், சுற்றுச்சூழலைப் பாது காப்போம் என்று சொல்லிவிட்டு, இறுதியாக ஒரு வாசகத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ‘‘பூமிக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’’ - பூமி ஒன்று மட்டும்தான் - ஒன்றேதான். பூமியினுடைய ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும், இன்னொரு பகுதியிலே அந்தப் பாதிப்பு இருக்கும்.

2004 இல் சுனாமி அந்தோமான் நிகோபார் தீவிலே ஏற்பட்டது - ஆனால், பாதிக்கப்பட்டது தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அதற்காகத்தான் இன்றைக்கு இந்த சுற்றுச்சூழ லினுடைய முக்கியத்துவத்தைக் கொண்டு செல்லுகின்ற நிலையில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெற்றியும் அடைந்திருக்கிறார்.

பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேற்றக் கூடிய கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது

ஆகவே, இன்னொரு சிறப்பான நிகழ்ச்சி இந்தப் பல்கலைக் கழக வளாகத்தில் இருக்கிறது. ‘‘வேஸ்ட் இஸ் வெல்த்’’ என்ற அடிப்படையில் பல்கலைக் கழகங்களி லிருந்து வெளியேற்றக் கூடிய கழிவுகளிலிருந்து மின் சாரம் தயாரிக்கப்படுகிறது; மண் புழுக்கள் தயாரிக்கப்படு கின்றன; இதுவும் 10 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாயில்.

அதிலிருந்து பெறக்கூடிய மின்னுற்பத்தியின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட 20 கோடி ரூபாயாகும்.

ஆசிரியர் அய்யாவிடம் கேட்டேன், இதெல்லாம் எப்படி உருவாக்கினீர்கள் என்று.

தந்தை பெரியாருடைய சிக்கனத்தைக் கடைப்பிடித்து செய்திருக்கின்றோம்  என்றார்.

ஓர் அரசாங்கம் செய்யவேண்டிய கடமையை, இந்தப் பல்கலைக் கழகம் முழுவதும் ஏற்படுத்தியிருக் கின்ற, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் 200 கோடி ரூபாய் செலவு செய்தாலும் உருவாக்க முடியாது.

தந்தை பெரியார் அய்யாவைப் பின்பற்றி செய்திருக்கின்ற மாபெரும் சாதனை!

ஆனால், ஆசிரியர் அய்யா அவர்கள், இங்குள்ள பேராசிரியர்களைக் கொண்டு, மாணவர்களைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார் என்றால், அதுதான் தந்தை பெரியார் அய்யாவைப் பின்பற்றி செய்திருக்கின்ற மாபெரும் சாதனையாக நான் பார்க்கிறேன்.

இயற்கை அழிவுகளால், காலநிலை மாற்றத்தால், உலக வெப்பத்தால் பாதிக்கப்படக் கூடியவர்கள் வசதி படைத்தவர்கள் அல்ல. விளிம்பு நிலையில் உள்ள, அடித்தட்டு மக்கள், வீடில்லாத மக்கள் பாதிப்புகளை சந்திக்கிவிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் மிகப்பெரிய பேரிடர்களையெல்லாம் நாம் சந்திக்கவிருக்கின்றோம்.

அதில், அதிகமான பேரிடர்களை 30, 40 ஆண்டு களாக சந்தித்த மாநிலங்களாக தமிழ்நாடு, ஆந்திராதான் இருக்கின்றன.

அது சுனாமியாக இருக்கட்டும்; புயலாக இருக்கட்டும் -அடிக்கடி தாக்கக்கூடிய பகுதியாக நம்முடைய மாநிலம் இருக்கிறது.

அதற்கு முன்னோட்டமாக இயற்கையைப் பாதுகாப்ப தற்கு ஆசிரியர் அய்யா அவர்கள், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார்.

நானும், ஆசிரியர் அய்யா அவர்கள் சொன்ன திட் டத்தில், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் என் னுடைய துறையின்கீழ் ஓர் அறிவிப்பு கொடுத்திருக் கின்றேன்.

காய்கறி கழிவுகளிலிருந்து மின்சாரமும், உரமும் தயாரிப்பதற்காக 25 கோடி ரூபாய்!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், பல பகுதி களிலிருந்து பல லட்சம் டன் காய்கறிகள் வந்து விற்பனை செய்யப்படுகின்றன. அதன் கழிவுகள் ஓரமாகக் கொட்டப்பட்டு, அதற்குத் தீர்வே இல்லாத நிலையில், அதனை ஆய்வு செய்து, அதற்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றோம். அந்தக் காய்கறி கழிவுகளி லிருந்து மின்சாரமும், உரமும் தயாரிப்பதற்காக என்பதை நான் இங்கே பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக, நிறைவாக ஒன்றை நான் சொல்லிக் கொள் கிறேன். நாம் கல்வியில் உயர்ந்திருக்கின்றோம். உயர்கல் வியில் 52 சதவிகிதத்தை எட்டியிருக்கின்றோம். இன்னும் அதிகமாக உயரவேண்டும் என்பது மாண்புமிகு முதல மைச்சருடைய தொலைநோக்குத் திட்டம். அவர் ‘‘நான் முதல்வன்’’ என்கிற ஓர் அற்புதமான திட்டத்தைத் தந்திருக்கின்றார். அந்தத் திட்டத்தை நீங்களும் பின்பற்றி, எந்த இடத்தில், எந்த மேடையில் இருந்தாலும், நீங்கள்தான் முதல்வனாக இருக்கவேண்டும் என்கின்ற எண்ணத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக அந்தத் திட்டத்தைத் தந்திருக்கின்றார்.

31 கலை அறிவியல் கல்லூரிகளை ஓராண்டில் உருவாக்கியிருக்கிறார் நம் முதலமைச்சர்!

அதுமட்டுமல்ல, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திலிருந்து  20 கலை அறிவியல் கல்லூரிகள் உயர்கல்வித் துறை மூலமாக, 10 கலை அறிவியல் கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை மூலமாக, ஒரு கலை அறிவியல் கல்லூரி, கூட்டுறவுத் துறையின் மூலமாக ஆக மொத்தம் 31 கலை அறிவியல் கல்லூரிகளை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுடைய உயர் கல்விக்கு வழிவகுத்தவர் நம்முடைய முதலமைச்சர் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3 ஆயிரம் கோடி ரூபாயில் சிலை - மக்கள் வரிப் பணம் வீண்

நான் முன்பு சொன்னபடி, குஜராத் சென்றபொழுது, அகமதாபாத் அருகிலுள்ள தெவாடியா என்ற ஊரில்தான் அந்த மாநாடு நடைபெற்றது. அங்கேதான் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயில் சிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மக்கள் வரிப் பணத்தை விரயம் செய்திருக்கிறார்கள். ஒரு சிலை அமைப்பதற்கு, 3 ஆயிரம் கோடி ரூபாயை ஓர் அர சாங்கம் செலவழித்திருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள், அந்த 3 ஆயிரம் கோடி ரூபாயை, அந்த மாநிலத்தினுடைய கல்விக்காக, கலை அறிவியல் கல் லூரிகளை, பொறியியல் கல்லூரிகளை, மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கிக் கொடுத்திருந்தால், எந்த அளவிற்கு அந்த சமுதாயம் உயரும் என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.

சனாதன சக்திகள், சர்வாதிகார சக்திகள், யார் ஜாதி, மதத்தைப் பயன்படுத்தி, தாங்கள் பதவியில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்களோ, அவர்களை நிராகரிப்பதில் நாம் முதலாவதாக இருக்கவேண்டும்.

இன்றைக்கு உலகில் 77 நாடுகளில் தமிழன்  வளர்ந்திருக்கின்றான்

அய்யா தந்தை பெரியார் அவர்கள் எந்தப் பதவியில் இருந்தார்?  ஆனால், இந்த மக்கள் கல்வி அறிவு பெறவேண்டும்; சம உரிமை பெறவேண்டும்; பெண்கள் கல்வி பெறவேண்டும்; பெண் விடுதலைக்காக அய்யா போராடினார். அதனால்தான், தமிழ்நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் உயர்ந்தது; இன்றைக்கு உலகில் 77 நாடுகளில் தமிழன்  வளர்ந்திருக்கின்றான் என்றால், அதற்கு அடித்தளமிட்டவர்கள் அன்று தந்தை பெரியார் அவர்களும்,  பேரறிஞர் அண்ணா அவர்களும், தலை வர் கலைஞர் அவர்களும், அவர்களுடைய வழியில் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களும்தான். இவற்றை உள்ளடக்கி, நம்முடைய முதலமைச்சர் அவர்களும்தான்.

24 மணிநேரத்தில், 20 மணிநேரம் பணியாற்றி, ஒரு மிகச் சிறப்பான ஆட்சியைத் தந்திருக்கின்றார்.

14 ஆவது இடத்திலிருந்து மூன்றாமிடம் - விரைவில் முதலிடம் - முதலமைச்சர் உறுதி!

இன்றைக்கு வந்த செய்தி, கடந்த காலங்களில் இந்தியாவில் தமிழ்நாடு 14 ஆம் இடத்தில் இருந்தது. இந்த ஓராண்டு காலத்தில், முதலமைச்சரும், மாண்புமிகு தொழிற்துறை அமைச்சரும் எடுத்த நடவடிக்கையால், மூன்றாம் இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. நம்முடைய முதலமைச்சர் விரைவில் முதலிடத்தில் தமிழ்நாட்டைக் கொண்டு வருவோம் என்று அவர் பாடுபடுகின்றார், உழைக்கின்றார்.

களத்தில், யார் உண்மை; போலி என்பதை அறிந்து நீங்கள் பணியாற்றுங்கள்.

தமிழருக்கென்றே இருக்கின்ற இன உணர்வை -

தமிழருக்கென்று ஒரு குணமுண்டு

அவனுக்குத் தனியே ஒரு உணர்வு என்ற சித்தாந் தத்தின் அடிப்படையில் நாம் முன்னேறவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆக, சங்க காலத்தில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழன் வகுத்துத் தந்த பாதை - ‘‘யாதும் ஊரே,  யாவரும் கேளிர்’’ என்று சொன்ன கவிஞர் பூங்குன்றனார் கருத்துகளைப் பாருங்கள்.

உலகில் இருக்கின்ற நாம் அத்துணைப் பேரும் சகோதர, சகோதரிகள்; உலகில் உள்ள அத்துணை நாடுகளும் நம் நாடு என்று சொன்ன தலைவர்கள், அந்த சங்க கால தமிழனுடைய சிறப்புகள் எங்கே?

இன்றைக்கு எங்கே கொண்டுபோய்ச் சேர்த் திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்

அதற்காகத்தான் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை நடைபெறவிருக்கின்ற 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 ஆம் ஆண்டிற்கான போட்டியை நடத்துவதற்கான அனுமதியை முதலமைச்சர் பெற்று தந்து, 187 நாடுகள் பங்கேற்கும் அந்தப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கின்றார்.

இந்திய வரலாற்றில், இத்தனை நாடுகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்றதாக வரலாறு இல்லை. அந்தப் புதிய வரலாற்றை உருவாக்கித் தந்திருக்கின்றார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். நீங்கள் அனைவரும் அந்த விழாவில் பங்கேற்கவேண்டும்.

அதற்காக ஒரு சின்னத்தை முதலமைச்சர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கின்றார். அதிலும் முதலமைச்சரின் சிந்தனையைப் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் சகோதரத்துவத்தை உணர்த்துகின்ற வகையில், ‘தம்பி’ என்று பெயர்

செஸ் காயின்களில் ஒரு குதிரை இருக்கும் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தக் குதிரைக்கு வேட்டி, சட்டைக் கட்டி, அதற்குப் பெயர் வைக்கும் பொழுது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது - ஒவ்வொருவரும், ஒவ்வொரு கருத்துகளைச் சொன் னார்கள். தலைவர் சொன்னார், மூன்று எழுத்துகளில் வரவேண்டும் என்று சொல்லிவிட்டு, அதற்கான வார்த்தைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொன்னபொழுது, தலைவர் சொன்னார், ‘தம்பி’ என்று பெயர் வைத்தார்.

எதற்காக இந்தப் பெயர் என்று கேட்டபொழுது, இன்றைக்கு உலகில் சகோதரத்துவம், மனிதத்துவம் அழிந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், இந்தத் தமிழ் மண்ணிலிருந்து புறப்படுகின்ற இந்த சின்னம், உலகம் முழுவதும் சகோதரத்துவத்தை உணர்த்துகின்ற வகையில், ‘தம்பி’ என்று பெயர் சூட்டியிருக்கின்றேன் என்று சொன்னார் நம் தலைவர்.

கொள்கையின் ஆட்சி யாருக்காக என்றால், உங்களுக்காக - விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்காக...

இது ஒரு கொள்கையின் ஆட்சி. கொள்கையின் ஆட்சி யாருக்காக என்றால், உங்களுக்காக - விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காக என்று சொல்லி,

இந்த நல்வாய்ப்பினைத் தந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லி விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் உரை யாற்றினார்.


No comments:

Post a Comment