கேள்வி : பெண்களுக்குப் புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்?
விடை : கற்பு என்கிற வார்த்தையும், விபசார தோஷம் என்கிற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.
இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே சட்டப்படி முழு விடுதலை பெற்றிருக்கின்றார்கள். ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல், புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ; ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை, துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண் பாத்திரம், அதை யாராவது தொட்டால், கழுவினால் கூடத் தீட்டுப் போகாது, அதை உடைத்து குப்பைத் தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல், தாங்கள் தங்கப் பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
- தந்தை பெரியார்
No comments:
Post a Comment