புதுடில்லி, ஜூலை 3 இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 16,103 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு நேற்று (2.7.2022) 17,092 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு புதிதாக கரோனா கண்டறியப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,09,568-லிருந்து 1,11,711 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,199 பேர் ஆக உள்ளது. அதைப்போல கடந்த ஒரே நாளில் 13,929 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,28,65,519 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,97,95,72,963 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10,10,652 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த
4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜூலை 3 தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக 3ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 4ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். 5, 6ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கூட்டுறவு அங்காடிகளில் தரமான பொருட்களை குறைந்த விலையில் விற்க அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 3 கூட்டுறவு அங்காடிகளில், தரமான பொருட்களை, குறைந்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கூட்டுறவு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி வளாகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று (2.7.2022) ஆய்வு செய்தார். அங்கு வைக்கப்பட்டுள்ள பருப்பு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வகைகள் போன்றவை தரமாக இருக்கிறதா என பார்வையிட்டார்.
திருமயம் கூட்டுறவு விற்பனைச் சங்கத்துடன் இணைந்து கூட்டுக் கொள்முதல் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்ட சத்தான கருப்புக்கவுனி அரிசி, திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தயாரிப்பான அர்த்தநாரீஸ்வரா என்ற அரிசி வகைகள், இதர நிறுவனங்களின் தயாரிப்புகளையும் பார்வையிட்டார். ‘‘அங்காடிகளில் விற்கப்படும் கூட்டுறவு சங்கங்களின் தரமான தயாரிப்புகளை வெளிச் சந்தைகளைவிட, குறைந்த விலையில் விற்க வேண்டும். இந்த தயாரிப்புகளை மக்களிடம் உரிய வகையில்கொண்டு சேர்க்க வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு விற்பனையை அதிகரிக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.
கீழமை நீதிமன்ற உத்தரவுகளை வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூலை 3 கீழமை நீதிமன்றங்களின் உத்தரவுகளை நீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை 300 கிலோ கஞ்சா கடத்தலுக்கு உதவி செய்ததாகப் போதை தடுப்புப் பிரிவு சிறப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக் கோரி பிரபாகரன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி ஆனது. இதையடுத்து உயர் நீதிமன்றக் கிளையில் பிணை மனுத் தாக்கல் செய்தார்.
அதில் பழைய விவரங்களை மறைத்து புதிதாக மனுத் தாக்கல் செய்வதுபோல் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரம் அரசு வழக்குரைஞர் மூலம் நீதிபதி புகழேந்திக்கு தெரியவந்தது. பிரபாகரன் வழக்கு மீண்டும் பட்டியல் இடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி புகழேந்தி, நீதிமன்ற உத்தரவை மறைத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் இது குறித்து நீதிபதி புகழேந்தி விரிவான உத்தரவு பிறப்பித்தார். அதில், கீழமை நீதிமன்றங்கள் விசாரணை செய்யும் வழக்குகளின் உத்தரவுகளை முறையாக நீதிமன்ற வலைதளங்களில் பதிவிடுவதில்லை. அனைத்து கீழமை நீதிமன்றங்கள் தினமும் நடைபெறக்கூடிய அனைத்து வழக்குகளின் நிலைமைகளை நீதிமன்ற வலைதளமான ecourts.gov.in-ல் பதிவேற்றம்செய்ய வேண்டும்.
குறிப்பாக பிணை மனுக்கள், முன்ஜாமீன் மனுக்கள், தீர்ப்புகள் ஆகியவற்றை உடனே பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை உயர் நீதிமன்றப் பதிவாளர் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் அனுப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment