புதுடில்லி, ஜூலை 1- நாடு முழுவதும் 130 நாள்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று பாதிப்பு 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுபோல சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 1 லட்சம் தாண்டி உள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் நேற்று (30.6.2022) காலை நிலவரப்படியான புள்ளிவிவரம் வருமாறு:
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 18,819 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் 130 நாட்களுக்குப் பிறகு 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 39 பேர் உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,25,116 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,953 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 122 நாட்களுக்குப் பிறகு ஒரு லட்சத்தைத் தாண்டி 1,04,555 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 98.55% பேர் குணமடைந்துள்ளனர். 1.21% பேர் உயிரிழந்துள்ளனர். 0.24% பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 197.61 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத் தப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படு வோரில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் தினசரி விகிதம் 4.16% ஆகவும் வாராந்திர விகிதம் 3.72% ஆகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கான
‘ரோட்டராக்ட் கிளப்’ தொடக்கம்
கோவை, ஜூலை 1- திருநங்கைகளின் வாழ்க்கையை மேம் படுத்த, ‘ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் டவுன்டவுன்’ கிளப்பின் ஒத்துழைப்புடன், தென்னிந்தியாவிலே முதல் முறையாக திருநங்கைகளுக்கான ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ கிளப் கோவையில் நேற்று (30.6.2022) தொடங்கப்பட்டது.
இதன் தொடக்க விழாவுக்கு ரோட்டரி ஆளுநர் ராஜ சேகரன் சீனிவாசன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டம் இளைஞர் சேவைப் பிரிவு தலைவர் காட்வின் மரியா விசுவாசம், ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ் மாம்’ கிளப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை தன்ஷிகாவுக்கு, ரோட்டரிக்கான பிரத்யேக பதக்கத்தை அணிவித்து, சுத்தியலுடன் கூடிய மணியை வழங்கினார். ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ தலைவர் திருநங்கை தன்ஷிகா கூறியதாவது:
நாட்டில் முதல் கிளப் ஒடிசாவில் தொடங்கப்பட்டது. தேசிய அளவில் இரண்டாவதாகவும், தென்னிந்திய அளவில் முதலாவதாகவும் ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளாக மாற்றத்தை உணர்பவர்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து விடுகின்றனர்.
அவர்களுக்கு படிக்க வழிவகை ஏற்படுத்தித் தர வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்திய திருநங்கைகளுக்கு மீண்டும் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல், படிக்காத திருநங்கைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் ஏற்பாடு செய்து சமுதாயத்தில் அவர்களை மேலே கொண்டு வருதல் ஆகியவை இக்கிளப்பின் முக்கிய இலக்காகும் என்றார்.
பழனிசாமியை முதல்வராக்கியது யார்? நயினார் நாகேந்திரன் சொல்கிறார்
தூத்துக்குடி, ஜூலை 1- ‘‘பழனிசாமியை பாஜகதான் முதல் வராக்கியது’’ என்று, தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கூறினார். திருச்செந்தூரில் அவர் கூறியதாவது: 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தலை சந்திக்கும். தலைவர்களின் மறைவுக்கு பின் ஏற்படும் இடைவெளியில் அதிமுகவில் சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்தான்.
பின்னர் அது சரியாகிவிடும். அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை. பழனிசாமியை முதலமைச்சர் ஆக் கியதே பாஜகதான். தொடர்ந்து எல்லா வகையிலும் அவருக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளோம். எனவே, அதிமுகவுடன் கூட்டணி தொடரும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வீட்டில் ஒருவருக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் அதுபோல் இல்லாத நிலையில் அக்னிப்பாதை திட்டம் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாகும். தமிழகத்தில் ஒரு காலத்தில் பாஜக போராட்டம் நடத்தினால் வெளியே தெரியாது. ஆனால் இப்போது பாஜக போராட்டத்தில் பொதுமக்கள் அதிகம் பங்கேற்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment