1962இல் தந்தை பெரியார் அவர்களின் வேண்டுகோள்படி - ‘கட்டளைப்படி' ‘விடுதலை' ஆசிரியர் பொறுப்பேற்றார் மானமிகு கி.வீரமணி அவர்கள். 2022ஆம் ஆண்டில் 60 ஆண்டு ‘விடுதலை' ஆசிரியர் பணியை நிறைவு செய்கிறார்.
இதன்மூலம் ஓர் ஏட்டுக்கு 60 ஆண்டு காலம் ஆசிரியர் என்ற வரலாற்றுச் சாதனை முத்திரையைப் பொறித்தார். இது உலக வரலாற்றில் புதிய சாதனையும், உச்சமும் ஆகும்.
‘விடுதலை' மற்ற ஏடுகளைப் போன்றதல்ல - அது ஓர் இலட்சிய ஏடாகும் - சமூகப் புரட்சி ஏடாகும்! ஆண்டாண்டுக்காலமாக ஆரிய ஆதிக்க நுகத்தடியின் கீழ் பிறவி இழிவைச் சுமந்தவர்களாகவும், உயிருக்கும் மேலான கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும், அடிப்படை உரிமைகள் ஏதுமிலா ஏதிலிகளாகவும், ஏதோ வாழ்ந்து வந்த - இந்த மண்ணுக்குரிய மக்களிடத்திலே மானத்தையும், அறிவை யும் ஊட்டிய யுகப் புரட்சித் தலைவர் தந்தை பெரியாரின் அறிவியக்கப் பிரச்சாரப் போர்ப்பிரகடன ஏடுதான் ‘விடுதலை'.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு தனித் தன்மை வாய்ந்த சிறப்புக்குரியதாகவும், ஜாதி வெறி - மதவெறிக்குப் பெரும்பாலும் பலியாகாத பகுத்தறிவுச் சொரணையும், கூர்மையும் கொண்ட நாடாக மிளிர்வதற்கும் முக்கிய காரணியாக இருப்பதற்காக அரும் பணியாற்றியதில் அறிவுலக ஆசானின் ‘விடுதலை' ஏட்டுக்குப் பெரும் பங்கு உண்டு.
‘விடுதலை'யை அடிமட்ட மக்கள் கவனிக்கிறார்கள் - ஆட்சியா ளர்கள் கூர்ந்து பார்க்கிறார்கள் - அரசியல்வாதிகள் அலசுகிறார்கள் - ஊடக இயலாளர் கள் விவாதங்களுக்குரிய கருப்பொருளாக எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் - இந்தப் பெருமைக்கெல்லாம், சாதனை களுக்கெல்லாம் அடிப்படை அதன் ஆசிரியர்தான்.
60 ஆண்டு ‘விடுதலை' ஆசிரியரின் பணியைப் பாராட்டும் வகையிலும், ‘விடுதலை' ஏட்டை இன்னும் வெகு மக்கள் மத்தியில் வேகமாகக் கொண்டு செல்ல வாய்ப்பாகக் கருதியும் தான் ஆசிரியர் 60 ஆண்டு ‘விடுதலை'ப் பணியை மய்யப்படுத்தி, 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களைத் திரட்டுவது என்று மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான பணியில் கருஞ்சட்டைத் தோழர்கள் தேனீக்களாகப் பறந்து பறந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்கள். நாள்தோறும் வரும் தகவல்கள் நம் ஆசிரியருக்கும், தோழர்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளிக்கின்றன.
தந்தை பெரியாரின் போர் வாளாம் ‘விடுதலை'யின் தன்னிகரற்ற பணியால் நேரடியாகவே பயன் பெற்ற 60 ஆயிரம் தோழர்கள் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்களா?
இன்னும் சொல்லப் போனால் சங்கராச்சாரியார்கள் படிக்கிறார்கள் - நம் இன எதிரிகளும் இரகசியமாகப் படிக்கிறார்கள் ‘விடுதலை'யை!
ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘விடுதலை'யின் பணிக்குத் தேவையும், அவசியமும் இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நாம் போராடிப் போராடிப் பெற்ற சமூகநீதியின் கழுத்துக்கே சுருக்குக் கயிறு மாட்டும் ஆட்சியாளர்கள் அதிகாரப்பீடத்திலே இருக்கிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே ஆணி அடித்துக் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு மரண அடி கொடுக்கும் மதவெறியாளர்கள் ஆட்சி அதிகாரத்தில் நங்கூரம் பாய்ச்சி அட்டாணிக் கால் போட்டு ஆணவத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் சிந்தனையெல்லாம் பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாக எழுதி வைத் துள்ளார்களே, அந்தப் ‘பிராமண குல‘ மைந்தர்களின் ஆதிக்கத்தை மீண்டும் புதுப் பலத்துடன் புதுப்பித்துக் கொள்ளுவது தான் - அவர் களின் நோக்கம் - திட்டம்!
இந்த நிலையை வெகு மக்கள் உணரும்படிச் செய்வதிலும், அதற்கு எதிரான சமூகப் போராட்டத்தை நடத்துவதிலும் திராவிடர் கழகமும், அதன் போர் வாளும் பெரும் பங்காற்றி வருகின்றன.
இந்த நிலையில் - 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் கடந்த ஜூலை 11ஆம் நாள் ‘விடுதலை'யின் முதற்பக்கத் தலைப்பில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்க செய்தி அணிகலனாக ஒளி வீசியதைக் கண்டு கழகத் தோழர்கள் கரை புரண்ட மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறார்கள்.
ஆம், 60 ஆண்டு கால ‘விடுதலை' ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், தமிழ்நாடு முதல் அமைச்சர் - "திராவிட மாடல்" ஆட்சியின் தளகர்த்தர் - திராவிட இயக்க அரசியல் கட்சியை சமூக நீதியுடனும், திராவிட சித்தாந்தத்துடனும் வழிநடத்தி நல்லாட்சி புரியும் திமுக தலைவர் மானமிகு - மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் ‘விடுதலை' சந்தாவை சேகரித்தார் என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வைரக் கல்வெட்டாகும்.
10 ஆண்டுக்களுக்கான ‘விடுதலை' சந்தாவுக்குரிய தொகையான ரூபாய் 20 ஆயிரத்தை - மிகுந்த மகிழ்ச்சியோடு, அகம் முகம் மகிழ அளித்தாரே - திமுக தலைவர் முதலமைச்சர் அளித்தார் என்றவுடன் திமுக கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு துரை முருகன் சும்மா இருப்பாரா? திமுக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பாரா? அவர்களும் பத்தாண்டுக்குரிய ‘விடுதலை' சந்தாக்களை அகமகிழ்ந்து அளித்தனர்.
திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் பத்தாண்டுக்குரிய சந்தாவை அளித்தார்.
"நான் முதலில் படிக்கும் ஏடு ‘விடுதலை'" என்பார் நமது முத்தமிழ் அறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள். அண்ணாவும் விடுதலை ஆசிரியர்தானே! அவர் வழி வந்தவர்கள் ‘விடுதலை' சந்தா அளிப்பது ஆச்சரியம் இல்லைதான். ஆனாலும் ஒரு பெரும் செயலில் (60 ஆயிரம் சந்தாக்கள்) ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கருஞ்சட்டைத் தோழர்களுக்கு இது உற்சாக டானிக்கை அளிக்கத்தக்கது. திராவிட ஆர்வலர்கள் தம் மத்தியில் - நமது முதல் அமைச்சரே ‘விடுதலை'க்குச் சந்தா அளித்துவிட்டார் - நம் பங்கும் இருக்க வேண்டாமா? என்ற எழுச்சியுடன் கூடிய இன்பமான எண்ணத்தையும் பெறத்தானே செய்வார்கள்.
கழகத் தோழர்களே, இடையில் நாள்கள் அதிகம் இல்லை பம்பரமாகச் சுற்றுங்கள் - இலக்கை முடியுங்கள் - நமது ஆசிரியருக்கு விலைமதிக்க முடியாத இந்த மகுடத்தைச் சூட்டுங்கள் - சூட்டுவோம் - வாருங்கள்! வாருங்கள்!! வரலாறுகளில் வெற்றிக் கல்வெட்டுகளை நாட்டுவதில் நமக்கு நிகர் யார்? இப்பொழுது நாட்டும் கல்வெட்டு நாட்டுவது மக்கள் தங்கள் நலனுக்காகத் தாங்களே முன்வந்து பொறிக்கும் புத்தாக்கக் கல்வெட்டே!
No comments:
Post a Comment