நாய்க்கு மட்டுமே கண்ணீர் விடுவார்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

நாய்க்கு மட்டுமே கண்ணீர் விடுவார்கள்!

மாட்டுக்கும் நாய்க்கும் மட்டுமே கண்ணீர் விடுப வர்களே, மனிதர்களுக்கும் கொஞ்சம் கண்ணீரைச் சேமித்துவையுங்கள்

கருநாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வளர்ப்பு நாய் குறித்த திரைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டேன் என்று ஊடகத்தின் முன்பு கூறி அப்போதும் கண்ணீர் விட்டு அழுதார். 

படத்தின் விளம்பரக் காட்சியைப் பார்த்து விட்டு இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பியதாக கூறிய பசவராஜ் பொம்மை இந்தப் படத்தில் விலங்கு களுடன் பழகுவது குறித்த செய்தி இருக்கிறது என்று கூறிய அவர், கருநாடகாவில் தெருநாய்களை தத் தெடுத்து வளர்க்கும் சிறப்பு திட்டம் ஒன்றை அமல் படுத்தப்போவதாக அறிவித்தார். 

கருநாடக முதலமைச்சரும் சரி இதர பாஜக தலைவர்கள் மற்றும் பிரமுகர்களும் சரி மனிதர்களுக்காக கண்ணீர் விடுவதே இல்லை. 

இவரது மாநிலத்திலேயே ஜனவரி முதல் தற்போது வரை சுமார் 8000 மாணவிகள் இஸ்லாமிய ஆடை அணிந்து வந்ததால் தேர்வு எழுத மறுக்கப்பட்டதோடு நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மாணவிகளை பள்ளிகளில் இருந்து நீக்கவும் செய்துள்ளனர்.  

உலகமே என்ன விலைகொடுத்தேனும் பெண் களிடம் கல்வி சென்று சேரவேண்டும் என்று பல்வேறு திட்டங்களைத் தீட்டிக்கொண்டு இருக்கும் போது பசவ ராஜ் பொம்மையின் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு ஆடை ஒன்றை காரணம் காட்டி கல்வி பறிக்கப்படுகிறது, இதற்கு அவர் கண்ணீர் விடவில்லை. 

உடுப்பி மற்றும் உத்தர கருநாடகாவில் ஹிந்துத்துவ அமைப்பினரால் ஏழை இஸ்லாமிய வணிகர்களின் கடைகள் சூறையாடப்படுகின்றன, அவர்கள் சாலை களில் அமர்ந்து குடும்பத்தோடு கண்ணீர் விடுகின்றனர். 

அவர்களின் குழந்தைகள் சாலைகளில் சிதறிக் கிடக்கும் பழங்களைப் பொறுக்கும் காட்சிகள் நாளிதழ் களில் கூட வந்தன. இதற்கு எல்லாம் கண்ணீர் விட வில்லை.

 
தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டஇஸ்லாமிய மாணவிகள்

 மங்களூர் பகுதியில் இஸ்லாமியர்கள் குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் தடை செய்யப்பட்டு அவர்களின் பகுதிகளுக்குள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல மறுப்பது - இதனால் அலுவலகம் மற்றும் இதரப் பணிகளுக்குச் செல்ல முடியாமல் அவர் கள் தவிப்பது நாளிதழ்களிலும் சமூகவலைதளங்களிலும் வந்து கொண்டுள்ளன. இதற்கு எல்லாம் அவர் கண்ணீர் விடவில்லை

மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், டில்லி போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை புல்டோசர்கள் கொண்டு இடித்து வீடுகளை இழந்த குடும்பங்கள் சாலைகளில் பரிதவிக்கின்றனர். இது குறித்து எல்லாம் அவர் கண்ணீர் விடவில்லை. 

ஆனால் ஒரு நாய் குறித்த படம் பார்த்த உடன் கண்ணீர் விடுகிறார் கருநாடக முதல்வர். இவர்களுக்கு மாடும் நாயும் தான் முக்கியம் - மனிதர்கள் அல்ல. 

கேட்டால் இதுதான் இந்துத்துவா என்பார்கள். "நாய்களும் குஷ்ட ரோகிகளும், பறையர்களும் ‘பிராமண’ ஓட்டல்களில் உள்ளே நுழையக் கூடாது" என்று விளம்பரப் பலகைகளில் எழுதி வைத்த கூட்டம் அல்லவா?

இஸ்லாமியரது வீடுகள், கடைகள் இடிக்கப்படுகின்றன

பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பித்து, ஊருக்கு ஒதுக்குப் புறம் “சேரி” என்று பெயர் சூட்டி சேற்றிலும் சகதியிலும் குடிசைகளிலும் ஏதோ வாழ வைத்த கும்பல் அல்லவா?

அவர்களின் கண்கள் நாய்களுக்குத்தான் கண்ணீர் வடிக்கும் - மனிதர்களுக்கல்ல!

குடியரசுத் தலைவரேயானாலும் அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் என்றால் பூரி ஜெகந்நாதர் கோயிலிலும். ராஜஸ்தான் பிர்மா கோயிலிலும் உள்ளே விடாமல் தடுக்கப்படவில்லையா? அவமதிக்கப்பட வில்லையா? ஆம், மனுதர்மத்தின் முன் குடியரசுத் தலைவராவது - வெங்காயமாவது?

நாயாக பிறந்திருந்தால் 
உனக்காக கண்ணீர் சிந்தியிருப்பாரோ?



No comments:

Post a Comment