தமிழ்நாட்டின் ஜனநாயகப்பூர்வமான வேண்டுகோள்களுக்கு ஒன்றிய அரசு மதிப்பளிக்கவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

தமிழ்நாட்டின் ஜனநாயகப்பூர்வமான வேண்டுகோள்களுக்கு ஒன்றிய அரசு மதிப்பளிக்கவேண்டும்

அப்படி மதிப்பளிக்காவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு மோடி அரசே பொறுப்பு!

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் எச்சரிக்கை!

சென்னை, ஜூன் 16   தமிழ்நாட்டின் ஜனநாயகப்பூர்வமான வேண்டுகோள்களுக்கு ஒன்றிய அரசு மதிப்பளிக்க வேண்டும்; அப்படி மதிப்பளிக்காவிட்டால், நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை நாங்கள் செய்வோம். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு மோடியே பொறுப்பு - மோடி அரசே பொறுப்பு என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள். 

இந்தி எதிர்ப்பு மாநாடு

கடந்த 4.6.2022  அன்று மாலை    சென்னை சைதாப் பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில்  இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன்  அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

திராவிடர் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பான முறை யில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தி எதிர்ப்பு திறந்தவெளி மாநாட்டிற்குத் தலைமையேற்று சிறப் பித்துக் கொண்டிருக்கின்ற நம் அனைவருடைய நன் மதிப்பிற்கும், போற்றுதலுக்கும் உரிய திராவிடர் கழகத் தலைவர் மரியாதைக்குரிய அய்யா ஆசிரியர் அவர்களே,

மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்காக வருகை தந்திருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்  பேரன்புமிக்க அண்ணன் வைகோ அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர் பாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செய லாளர்  பேரன்புக்குரிய பேராசிரியர் சுப.வீ. அவர்களே,

வருகை தரவிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமா அவர்களே,

இங்கே வரவேற்புரையாற்றிய மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்களே,

எழுச்சியுரை வழங்க வருகை தரவிருக்கின்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா.சு. அவர்களே,

இங்கே உரையாற்றிய நம் பெருமதிப்பிற்குரிய திரா விடர் கழகப் பிரச்சார செயலாளர் பேரன்புமிக்க வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,

மாநாட்டில் 12 தீர்மானங்கள்

12 தீர்மானங்களையும் மிகச் சிறப்பான முறையில் முன்மொழிந்து உரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

பெருந்திரளாகப் பங்கெடுத்து இருக்கின்ற திராவிடர் கழகத் தோழர்களே, கூட்டணிக் கட்சித் தோழர்களே, பொதுமக்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முதலில் அன்பான ஒரு வேண்டுகோள், மேடைக்கு இடதுபுறமாக நிற்பவர்கள், நாற்காலியில் அமர்ந்தால் நல்லது. ஏனென்றால், நாற்காலிகள் காலியாக இருப்ப தைப் படமெடுத்து, இந்தி எதிர்ப்பு மாநாடு தோல்வி; நாற்காலிகள் காலியாக இருக்கின்றன என்று படம் போடுகின்ற பத்திரிகைகள் இருக்கின்றன தமிழ்நாட்டில்.

ஆகவே, ஓர் அன்பான வேண்டுகோள், எல்லோரும் நாற்காலியில் அமருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இங்கே நம்முடைய கவிஞர் அவர்கள் 12 தீர்மானங் களை முன்மொழிந்தார்கள். அந்த 12 தீர்மானங்களையும் இங்கே இருக்கின்ற நாம் அனைவரும் ஒருமனதாகக் கரவொலி எழுப்பி ஆதரித்து, ஏற்றுக்கொண்டிருக் கின்றோம்.

12 தீர்மானங்களில், 11 ஆவது தீர்மானத்தை நம்மு டைய கவிஞர் படித்தார் அல்லவா, அதற்காக அவருக்கு நம்முடைய தனிப் பாராட்டு.

அந்தத் தீர்மானம் புரியவில்லை. அவர் நன்றாகத்தான் படித்தார்; அச்சடித்தும் என்னுடைய கைகளில் கொடுத் திருக்கிறார்கள்.

ஆனால், புரியவில்லை. புரியாத பாஷையில், புரியாத மொழியில், புரியாத வார்த்தைகளில் நம்முடைய ஒன்றிய அரசாங்கத்தினுடைய திட்டங்கள் இருக்கின்றன.

இந்த மேடையில் இருப்பவர்கள் எல்லோருக்குமே - வெளியில் உள்ள பேர் - தேச விரோதிகள். 

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பா.ஜ.க.வினர் சொல்வது தேச விரோதிகள் என்று.

அட, முட்டாள்களா, இங்கே நிறைவேற்றப்பட்ட 2 ஆவது தீர்மானத்தைப் படித்துப் பாருங்கள். இந்தத் தீர்மானம் எதை வலியுறுத்துகிறது என்று சொன்னால்,

நாடு ஒன்றாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தும் 2 ஆவது தீர்மானம்!

இந்த நாட்டினுடைய ஒற்றுமை, ஒருமைப்பாடு சீர்குலைந்துவிடக் கூடாது - நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று 2 ஆவது தீர்மானம் வலியுறுத்துகிறது.

இன்று இருக்கின்ற மோடி அரசாங்கம், ஒரு மிருக பலத்தோடு இருக்கிறது என்பது உண்மைதான்.

மிருக பலத்தோடு நாடாளுமன்றத்தில் இருக்கிற ஒரே காரணத்திற்காக, ‘‘நாங்கள் நினைத்ததையெல்லாம் செய் வோம் - அதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்‘‘ என்று நிர்ப்பந்திப்பது நாட்டிற்கு விரோதமானது. நாட் டின் ஒற்றுமைக்கு எதிரானது; நாட்டின் ஒருமைப்பாட் டிற்கு எதிரானது.

இத்தகைய காரியங்களைத்தான் மொழித் திணிப்பில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் செய்துகொண்டிருக் கிறார்கள்.

நாம் என்ன உடை உடுத்தவேண்டும் என்பதை மோடி தீர்மானிக்கிறார்.

நாம் என்ன சாப்பிடவேண்டும் என்பதை மோடி தீர்மானிக்கிறார்.

நாம் என்ன மொழி பேசவேண்டும் என்பதை மோடி தீர்மானிக்கிறார்.

நீ தீர்மானித்தால், நான் அதை ஏற்றுக்கொண்டால், நான் என்ன மனிதனா?

நீங்கள் தீர்மானிப்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமா?

அவர் சொல்கிறார், அரசமைப்புச் சட்டம்தான் நாட்டை வழிநடத்துகிறது என்று.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற ஒன்றிய அரசு

அரசமைப்புச் சட்டம்தான் வழிநடத்துகிறது என் பதை மோடி அவர்கள் ஏற்றுக்கொண்டால், ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டால், அந்த அரசமைப்புச் சட்டத் திற்கு உட்பட்டு ஆட்சி நடத்தவேண்டும்.

ஆனால், அரசமைப்புச் சட்டம்தான் நாட்டை வழி நடத்துகிறது என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு, மறு பக்கம் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான முறை யில், எதிரான முறையில் செயல்படுகிற அரசாங்கமாகத் தான் இன்றைக்கு ஒன்றிய அரசாங்கம் இருக்கிறது.

ஆசிரியரின் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம்!

நம்முடைய ஆசிரியருக்கு வயதாகிவிட்டது என் றால், அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ‘‘நான் என்ஜின்; நீ என்ஜினை நிறுத்தப் பார்க்கிறாயா? அது உன்னால் முடியாது’’ என்று என்னிடம் சவால் விடுகிறார்.

நான் சவால் விடவில்லை - இந்தித் திணிப்பு என்ற வந்தவுடனேயே, அமித்ஷாவினுடைய அறிக்கை வந்தவுடனேயே, இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் - ‘‘நான் தார்ச் சட்டியை எடுத்துக்கொண்டு போகிறேன், நீ தார்ச் சட்டியை எடுத்துக்கொடு’’ என்று சொல்லி,

ஒரு போராட்டம் - பெரிய அளவிற்கு, மிகுந்த எழுச்சியோடு. உண்மையிலேயே திராவிடர் கழகத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மிகுந்த எழுச்சியோடு பங்கு பெற்றார்கள். அந்தப் போராட்டமும் வெற்றிகரமாக நடைபெற்றது.

கொள்கை ரீதியான போராட்டம்

இப்போது இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு என்பது, ஏதோ இந்தியை தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. எந்த மொழியையும் நாங்கள் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. எந்தத் தனிப்பட்ட நபர்களையும் நாங்கள் எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியான போராட்டம். எம் மொழியின்மீது உன் மொழியைத் திணிக்காதே.

எம்முடைய தாய்மொழிமீது, இன்னொரு மொழி யைக் கொண்டு வந்து திணிக்காதே!

கலைஞர் அவர்களுடைய சிலை திறப்பு விழாவில், நாட்டினுடைய குடியரசு துணைத் தலைவர் பங்கேற்றார். நாங்கள் எல்லோரும் அதில் கலந்துகொண்டோம்.

ஒரு மொழி திணிக்கப்படக் கூடாது என்கிறார் குடியரசுத் துணைத் தலைவர்

அந்த நிகழ்வில் அவர் என்ன பேசுகிறார், ஒரு மொழி திணிக்கப்படக் கூடாது என்கிறார்.

அந்தச் செய்தி எல்லா பத்திரிகைகளிலும், தொலைக் காட்சிகளிலும் வெளிவந்தது.

அவர் நாட்டின் குடியரசு துணைத் தலைவராக இருந்தாலும், அவருடைய கட்சி எது என்பது எல் லோருக்கும் தெரியும். பா.ஜ.க.வினுடைய அகில இந்திய தலைவராக இருந்தவர்; ஆர்.எஸ்.எஸ்சால் ஊட்டி வளர்க்கப்பட்டவர்தான் அவரும்.

மோடி எப்படி ஊட்டி வளர்க்கப்பட்டு இருக்கிறாரோ, அப்படித்தான் அவரும். அவர் சொல்கிறார், ஒரு மொழியைத் திணிக்கக்கூடாது என்று.

ஆனால், அவரின்கீழ் இருக்கக்கூடிய ஒன்றிய அர சாங்கம், வலுக்கட்டாயமாகத் திணிப்பதற்கான முயற்சி களைத் தொடர்ந்து மேற்கொள்கிறது.

அமித்ஷா கனவு காணுகிறார் - 

ஆர்.எஸ்.எஸ். கனவு காணுகிறது

அதுவும் அமித்ஷாவினுடைய அறிக்கை மிகமிக அபாயகரமான அறிக்கையாகும்.

ஒரே  நாடு, ஒரே மொழி கனவை மக்கள் நனவாக்க வேண்டுமாம்.

யார் அப்படி கனவு கண்டார்கள்?

ஒரே நாடு என்பதுதான் இருக்கிறதே, திரும்பத் திரும்ப நீ ஏன் அதைப் பிளவுபடுத்துகிறாய்?

ஒரே நாடுதான் இந்தியா.

ஒரே மொழியாம் - அப்படி எந்த மக்கள் கனவு கண்டார்கள்? எந்த மக்களும் கனவு காணவில்லை. 

அமித்ஷா கனவு காணுகிறார்; அவருடைய வகை யறாக்கள் கனவு காணுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். கனவு காணுகிறது.

அந்தக் கனவை, நீங்கள் கண்ட கனவை, எங்கள்மீது திணிக்கப் பார்க்கிறீர்கள். எங்கள் மூலமாக நிறைவேற்ற முயற்சிக்கிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது.

இது நடக்காது என்பது வெறும் பேச்சளவில் இல்லை. ஏற்கெனவே தமிழ்நாட்டில் இந்தியை எதிர்த்து 1930 ஆம் ஆண்டுமுதல் தொடங்கிய போராட்டங்களை யெல்லாம் இங்கே நம்முடைய சகோதரி அவர்கள் இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்.

வரலாற்றில் அழிக்க முடியாத போராட்டம்!

1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் என்ன நடை பெற்றது? இந்தியாவே இந்தப் பக்கம் திரும்பி நின்றது.

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் - ஒரு சாதாரண போராட்டமல்ல - வர லாற்றில் அழிக்க முடியாத போராட்டம்.

தன்னுடைய தாய்மொழிக்காக, தன்னையே அழித் துக்கொண்ட மாணவர்கள். வேறு எந்த மொழிக்கும் இப்படி நடந்ததாகத் தெரியவில்லை.

தாய்மொழிக்காக, தமிழுக்காக தன்னைத்தானே தனது உடலில்  பெட்ரோலை ஊற்றி எரித்துக்கொண்ட மாணவர்கள். தன்னெழுச்சியாக நடைபெற்ற தமிழ்நாடு தழுவிய போராட்டம். யாரும் தூண்டிவிடாமல் தன்னெ ழுச்சியாக நடைபெற்ற போராட்டம்.

அனைத்துப் பள்ளிகளும், அனைத்துக் கல்லூரி களும், அனைத்துப் பல்கலைக் கழகங்களும் மாதக் கணக்கில் மூடப்பட்டன.

நேருவின் வாக்குறுதி!

அப்பொழுதுதான் நேரு வாக்குறுதி கொடுத்தார், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை நாங்கள் திணிக்க மாட்டோம் என்று.

அவர் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. அந்தப் போராட் டத்திற்கு  மதிப்பளித்தார். மக்களின் எழுச்சிக்கு மதிப் பளித்து, அந்த வாக்குறுதியைக் கொடுத்தார்.

ஆனால், இன்றைக்கு இருக்கிற மோடி அரசுப்பற்றிக் குறிப்பிடும்பொழுது இங்கே நம்முடைய சகோதரி அருள்மொழி அவர்கள் பேசுகிறபொழுது, ஹிட்லர் பாணியைப் பின்பற்றுகிறார்கள் என்று இங்கே குறிப்பிட்டார். மிகமிக சரியான ஒப்பீடு.

ஹிட்லரைப் பின்பற்றுகிற கூட்டம். ஹிட்லரைப் பின்பற்றினால், முடிவு எப்படி இருக்கும் என்பது வேறு விஷயம். நான் எல்லா மேடைகளிலும் சொல்லியிருக்கிறேன்; இங்கேயும் சொல்லுகிறேன். ஏறத்தாழ 130 கோடி மக்களுக்குப் பிரதமராக  மோடி இருக்கிறார்.

அப்படியொரு நிலைமை 

மோடிக்கு ஏற்படக்கூடாது

ஹிட்லருக்கு ஏற்பட்ட நிலைமை அவருக்கு ஏற்பட் டால், அது இந்தியாவிற்கு அவமானம் - நமக்கு அவமானம்!

130 கோடி மக்களுக்குத் தலைவராக இருந்த ஒருவர் - நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்று சொன்னால், அது நாட்டிற்கு அவமானம்; அப்படியொரு நிலைமை மோடிக்கு ஏற்படக்கூடாது என்பது என்னு டைய தாழ்மையான வேண்டுகோள்.

ஏனென்றால், நீங்கள் நாட்டினுடைய பிரதமர்; நீங்கள் தனி மனிதரல்ல. ஹிட்லரின் கொள்கையைப் பின்பற்றி னால், பாசிசத்தைப் பின்பற்றினால், என்னாகும்? பாசிசம் ஒருபோதும் வெற்றி பெறாது. மனித உயிர்களை ஆயிரக் கணக்கில், லட்சக்கணக்கில் பலிவாங்கும். ஆனால், வெற்றி பெறமுடியாது. ஆனால், அந்தப் பாசிசக் கொள்கையைத்தான் இன்றைக்கு இருக்கிற மோடி அரசாங்கம் பின்பற்றுகிறது. அது மொழியானாலும், மற்றவையானாலும் அதைத்தான் பின்பற்றுகிறது.

பிரதமர், குஜராத்தில் பேசுகிறார்; எட்டாண்டுகால ஆட்சியில், இந்திய மக்கள் யாரும் தலைகுனியும்படியாக என்னுடைய ஆட்சி நடைபெறவில்லை என்று கம்பீரமாகப் பேசுகிறார்.

எத்தனை முறை நாட்டு மக்கள் தலைகுனிந்திருக் கிறார்கள்;  நாடே தலைகுனிந்து இருக்கிறது என்று பட்டியல் போட முடியும்.

உங்கள் எட்டாண்டு கால ஆட்சியில், நாடு பல வகையில் நாட்டு மக்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள்; நிமிர்ந்து நிற்க முடியவில்லை. அந்த அளவிற்கு ஒரு மோசமான ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. மிகமிக மோசமான ஆட்சி.

மக்களை மொழி ரீதியாக, மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிளவுபடுத்தி, தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எல்லாவிதமான காரியங் களையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க.வின் ஆட்சியைக் கவிழ்ப்பது அவர்களின் நோக்கமல்லவாம்!

இங்கே அண்ணாமலை என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஏற்கெனவே காவல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர்; அவரை தமிழ்நாடு பா.ஜ.க.விற்குத் தலைவராகப் போட்டிருக்கிறார்கள்.

அவர் சொல்கிறார், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல என்று.

எப்படி அவருடைய உள்ளத்தில் இருப்பது வெளியில் வந்துவிட்டது பாருங்கள்.

 தமிழ்நாட்டில் இருக்கின்ற பத்திரிகைகள், ஊடகங்கள் என்ன காரணமோ தெரியவில்லை; அச்சுறுத்தலா? மிரட்டலா? அல்லது பணமா? என்று தெரியவில்லை.

தி.மு.க. ஆட்சி - முதுகெலும்பு உள்ள ஆட்சி - யாருக்கும் வளையாத ஆட்சி!

அண்ணாமலைக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம் வேறு யாருக்கும் கொடுப்பதில்லை. முதலமைச்சர் செய்திகள்கூட பின்னாலே போய்விடுகிறது. அண்ணா மலைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய செய்திகள் போடப்படுகின்றன. அவர் மிரட்டுகிறாரா? அல்லது இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துகொண்டிருக்கிறாரா? என்று தெரியவில்லை.

இப்பொழுது தமிழ்நாட்டில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, நம்முடைய அன்பிற்குரிய சகோதரர் ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் உள்ள ஆட்சி முதுகெலும்பு உள்ள ஆட்சி - யாருக்கும் வளையாத ஆட்சி. இதுதான் பிரச்சினை அவாளுக்கு.

ஆளுநர் ஒற்றர்போல் 

வேலை செய்துகொண்டிருக்கிறார்

ஆளுநரைப் போய் மீண்டும் மீண்டும் பார்க்கிறார். தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 21 மசோதாக்களுக்கு நீங்கள் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று.

அப்படியென்றால், சட்டமன்றம் பெரியதா? ஆளுநர் பெரியவரா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டமன்றம். ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட்டவர். ஆளுநரை நியமிப்பது ஒன்றிய அரசு. சம்பளம் கொடுப்பது மாநில அரசு.

நியமனம் செய்வதோடு ஒன்றிய அரசினுடைய வேலை முடிந்துபோய்விட்டது. ஆளுநர் அவர்கள் ஒற்றர் போல் வேலை செய்துகொண்டிருக்கிறார்.

சட்டமன்றத் தீர்மானங்களை மதிப்பதில்லை. அலட் சியப்படுத்துகிறார். இன்னும் சொல்லப்போனால், தமிழ் நாட்டு மக்களைத் தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களின்மீது உண்மையில் அண்ணா மலைக்கு அக்கறை இருக்குமேயானால், ஆளுநரை சந்தித்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக் களை ஏன் கிடப்பில் போட்டிருக்கிறீர்கள்? உடனே அந்த மசோதாக்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள் என்று சொல்லவேண்டும்.

ஏனென்றால், அந்த மசோதாக்கள் மக்களுக்காக நிறைவேற்றப்பட்டு இருப்பவை. 

அதை செய்யாமல், அண்ணாமலை அவர்கள் வேறு மாதிரியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வைப் பிரதிபலிக்கின்ற மாநாடாகும்

ஆகவே, இன்றைக்கு சைதாப்பேட்டையில் நடை பெறுகிற இந்தி எதிர்ப்பு மாநாடு, ஏதோ சைதாப் பேட்டைக்கு உரிய மாநாடல்ல; சென்னைக்கு உரிய மாநாடல்ல; தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வைப் பிரதிபலிக்கின்ற மாநாடாகும்.

வந்திருப்பவர்களுடைய எண்ணிக்கை எத்தனை ஆயிரம்; எத்தனை லட்சம், எத்தனை கோடி என்பதல்ல பிரச்சினை. தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலித்து, ஒன்றிய அரசு என்னென்ன தவறுகளை செய்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக 11 தீர்மானங் களில் விளக்கப்பட்டு இருக்கின்றன.

அனைத்து மாநிலங்களையும் 

சமமாகப் பாவிக்கவேண்டும்

ஒரு ஒன்றிய அரசு, அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பாவிக்கவேண்டும்; அனைத்து மொழிகளையும் சமமாகப் பாவிக்கவேண்டும்.

இங்கே கவிஞர் அவர்கள், யாருக்கும் தெரியாத, யாருக்கும் புரியாத, யாரும் ஏற்காத சமஸ்கிருத மொழிக்கு 643 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அதேநேரத்தில், தென் மாநில மொழிகள் அது கன்னடமாக இருக்கலாம், தெலுங்காக இருக்கலாம், மலையாளமாக இருக்கலாம், தமிழாக இருக்கலாம் - இந்த மொழிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதைக் காட்டிலும் 29 சதவிகிதம் அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி  ஒதுக்கப்படுகிறது என்று சொன்னால், எவ்வளவு பெரிய வேறுபாடு; எவ்வளவு பெரிய பாகுபாடு - இதை எப்படி அனுமதிப்பது?

நாட்டைப் பிளவுபடுத்துபவர்கள் யார்?

எல்லா மாநிலங்களுக்குமான ஒன்றிய அரசா? அல்லது சில குறிப்பிட்ட மாநில அரசுகளுக்கு மட்டும் உரிய ஒன்றிய அரசா?

அப்படியென்றால் யார் பிளவுபடுத்துவது?

யார் பிரிவினைவாதி?

யார் தேசத் துரோகிகள்?

மோடி வகையறாக்கள்தான் நாட்டின் தேச விரோதிகள் -

மோடி வகையறாக்கள்தான் நாட்டைப் பிளவுபடுத்து கிறார்கள்.

உண்மையிலேயே யோக்கியமானவராக இருந்தால், நாட்டினுடைய பிரதமர் என்கிற முறையில் இருந்தால், ஒன்றிய அரசு, அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பாவிக்கவேண்டும்; அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பளிக்கவேண்டும்.

சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்கவேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை.

 எத்தனை பேர் பேசுகிறார்கள் அந்த மொழியை?

விகிதாச்சார அடிப்படையில் நிதி ஒதுக்கு.

எண்ணிக்கை அடிப்படையில் நிதி ஒதுக்கு

அல்லது சமமாகவாவது நிதி ஒதுக்கு.

சமஸ்கிருதம் யாருக்கும் தெரியாத மொழி. அதை கடவுள் மொழி என்கிறார்கள். கடவுள் எங்கே இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.

அய்யர் போய் கருவறைக்குள்போய் சிலையிடம் சொல்கிறார்; அங்கே இருக்கின்ற சிலை தலையை ஆட்டவும் இல்லை, மடக்கவும் இல்லை; ஆமாம் என்றும் சொல்லவில்லை; இல்லை என்றும் சொல்ல வில்லை. ஏனென்றால், அது கருங்கல் சிலை.

அதுகிட்ட சொல்கிற மொழிக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கவேண்டும்?

பேசுகின்ற மொழிக்கு, மக்கள் பயன்படுத்துகின்ற மொழிக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடா?

மணியார்டர் படிவத்திலிருந்து 

தமிழ்மொழி நீக்கம்

ஏற்கெனவே மணியார்டர் படிவத்தில், மூன்று மொழிகள் இருக்கும் - இந்தி, ஆங்கிலம், தமிழ் மொழி இருக்கும்.

இப்பொழுது தமிழ் மொழியை அந்தப் படிவத்திலிருந்து எடுத்துவிட்டார்கள்.

இந்திப் போராட்டத்திற்கு முன்பு எல்லா ரயில்  நிலை யங்களிலும் மேலே இந்தி எழுத்து இருக்கும்; போராட் டத்தின்மூலமாக அது பின்னுக்குப் போய்விட்டது. இப்பொழுது அது மீண்டும் முன்னுக்கு வர முந்திரிக் கொட்டை மாதிரி முந்தி வருவதற்கான ஏற்பாட்டை அமித்ஷா செய்துகொண்டிருக்கிறார்.

அவருக்கின்ற அதிகாரத்தை அவர் பயன்படுத்து கிறார். அவருக்கு இருக்கிற அதிகாரம் 2024 ஆம் ஆண்டுவரை இருக்கலாம்; அல்லது அதற்கு முன்பே கூட குறையலாம்.

சுப்ரமணியசாமி சொல்கிறார், காஷ்மீரில் உன்னால் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை. ஆகவே, உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகு என்று அந்தக் கட்சியை சார்ந்தவரே சொல்கிறார்.

உங்கள் அதிகாரத்தைக் காட்டிலும் 

மிகவும் சக்தி வாய்ந்தது மக்கள் சக்தி

அமித்ஷா அதிகாரத்தில் இருக்கிறார் என்கிற காரணத்திற்காக, மோடி அதிகாரத்தில் இருக்கிறார் என்கிற காரணத்திற்காக, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால், உங்கள் அதிகாரத்தைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்தது மக்கள் சக்தி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

மக்கள சக்திக்கு நிகராக வேறு எதுவும் கிடையாது. மக்கள் இதை ஏற்கமாட்டார்கள் - உங்களுடைய நட வடிக்கையை, உங்களுடைய அணுகுமுறையை, உங் களுடைய அறிக்கைகளை ஒருபோதும் ஏற்கமாட் டார்கள்.

ஒன்றிய அரசு இதே கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுமேயானால், தமிழ்நாடு கிளர்ந்தெழுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒன்றிய அரசு ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவேண் டும். இங்கே மாநாடு நடைபெறுகிறது என்று சொன்னால், இந்த மாநாட்டிலே நாம் நிறைவேற்றுகிற தீர்மானங்களில் 11 தீர்மானங்கள் ஒன்றிய அரசு சம்பந்தப்பட்டவை. 12 ஆவது தீர்மானம், தமிழ்நாட்டில், குழந்தைகளுக்குத் தமிழில் வைக்கவேண்டும்; அதற்குரிய ஏற்பாட்டினை தமிழ்நாடு அரசு செய்யவேண்டும் என்ற தீர்மானம்.

மற்ற 11 தீர்மானங்களும் உங்களுக்குரிய சம்பந்தப் பட்ட தீர்மானங்கள். நீங்கள் ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை உள்ளவர்களானால், இந்த 11 தீர்மானங்களும், நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே, உங்கள் காதுகளுக்கு எட்டிவிடும்; அதற்குள்ள வசதி உங்களிடத்தில் இருக்கிறது.

அந்தத் தீர்மானங்களை நீங்கள் மதிக்கவேண்டும்; திராவிடர் கழக மாநாட்டில் இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அந்தத் தீர்மானங்களை நாங்கள் பரிசீலிக்கிறோம்; ஏற்றுக்கொள்கிறோம் என்று நீங்கள் பதில் சொல்லவேண்டும் - ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இருந்தால்.

பாசிஸ்டுகளாகத்தான் செயல்படுவோம் என்று சொன்னால்...

ஜனநாயகத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை - நாங்கள் சர்வாதிகாரமாக செயல்படுவோம் - நாங்கள் பாசிஸ்டுகளாக செயல்படுவோம் என்று சொன்னால்,

அந்தப் பாசிசத்தை நாங்கள் சந்திக்கத் தயார் என்று சொல்லுகின்ற நிலைமை வரும்.

அதற்காக என்ன விலைகளைக் கொடுக்கவேண்டி வந்தாலும், என்ன விளைவுகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்த வயதில், தார்ச் சட்டியை ஆசிரியர் அய்யாவால் தூக்க முடியும் என்றால், இன்றைக்கு இருக்கின்ற இளைஞர்கள், தார்  பேரலையே தூக்கிக் கொண்டு வருவார்கள்.

ஒரு இந்தி எழுத்துக்கூட தமிழ்நாட்டில் இருக்க முடியாது. எந்த இடத்திலும் இருக்க முடியாது.

ஒன்றிய அரசு தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும்

ஆகவே, ஒன்றிய அரசு தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்; தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு தீர்மானம் முடிகிறபொழுதும், மிகுந்த பொறுப்பான முறையில்தான் வார்த்தைகள் போடப்பட்டு இருக்கின்றன.

மாற்றிக் கொள்ளவேண்டும்; மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு மோடியே பொறுப்பு - மோடி அரசே பொறுப்பு

இந்த ஜனநாயகப்பூர்வமான வேண்டுகோள்களுக்கு ஒன்றிய அரசு மதிப்பளிக்கவேண்டும்; அப்படி மதிப் பளிக்காவிட்டால், நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை நாங்கள் செய்வோம். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு மோடியே பொறுப்பு - மோடி அரசே பொறுப்பு.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.


No comments:

Post a Comment