கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’
நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பாட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்த னையோ லட்சம் ரூபாய்கள், பொருள் இழப்பானாலும் கூட, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அறிவிலும், மனத் திலும் லாபம் என்பதால், 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு நடைபெற்றுவரும் ஓர் அதிசய நாளேடு!
ஒரு இலட்சிய, கொள்கை நாளேடு - சமூகப் புரட்சிக்கான கருத்தியல் போருக்கான பயணத்தில், இது காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம் என்று உணர்த்தும் வகையில் அது சந்தித்துள்ள எதிர்ப்புகளை, அரசின் அடக்குமுறை காரணமாக விழுப்புண்களையும் ஏற்று வீறுநடை போட்டு வந்துள்ள வரலாற்றுச் சுவடுகளைப் படித்துப் பாருங்கள். அதன் அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி எப்படிப்பட்ட ‘‘விலை’’ கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது என்பது புரியும்.
விளையாட்டுக்காக அல்ல இந்த வீர நாளேடு -
வினையாற்றி சமூகத்தை மாற்றுவதற்காகவே!
அனைவரும் சமம், சமத்துவ, சம வாய்ப்பே அதன் இலக்கு; சமூகநீதி - அதனை அடைய வழி மானமும், அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள்.
சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு, மீள் பார்வை, மீட்டெடுக்கவே அதன் பயனுறு பயணம் என்பதைத் தொடங்குகையில் எவ்வளவு சங்கடங்களை, அடக்குமுறை அம்புகளை அதுவும் அந்நாளைய பிரிட்டிஷ் அரசிடமிருந்தும், அது எப்படி சந்தித்து மீண்டுள்ளது என்பதைப் புரிய பழைய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அளிக்கும் தொடர் இது!
படித்து அறிக, அறிந்து ஆதரவு தருக!
1935 ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?
அதன் தொடக்கத்திலேயே எப்படிப்பட்ட எதிர்நீச்சல், சோதனை, வழக்கு, தண்டனை, சிறைவாசம் அதன் ஆசிரியர், வெளியிடுவோருக்கு!
இதயத்தைத் தாக்கும் செய்திகள் - தகவல்கள் அல்லவா இவை?‘விடுதலை' நாளிதழின் தனித்தன்மை
சுதந்திரமான ஏட்டின் இலக்கணம் பற்றி தந்தை பெரியார்
1. சரியானாலும், தப்பானாலும் தனக்குச் சரியென்று தோன்றியதை தயவு, தாட்சயண்ணியம், பயம், பாரபட்சம் இல்லாமல் தைரியமாகச் சொல்லுவோம்.
2. மற்றொரு காரியம் என்னவென்றால், பத்திரிகை வாசிப்பவர்களைப் பின்பற்றாமல், பத்திரிக்கையில் உள்ளதைப் பின்பற்றும் படி வாசகர்களை செய்து வந்திருப்பது, (அதாவது எதிர் நீச்சல் அடித்து உண்மையை மக்களுக்கு எடுத்து விளக்குவது).
3. உலகில் பத்திரிகைகள் இரண்டு விதம் - அவை தமது வாழ்க்கைக்கு ஒரு வழி வேண்டுமென்று சுயநலம் கருதுபவர்களால், மக்களைப் பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை ஒன்று.
மக்கள் சமூகத்தில் சில கொள்கைகளைப் பரப்ப வேண்டுமே என்று பொது நலம் கருதுபவர்களால் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தையே பின்பற்றி நடத்தப்படும் பத்திரிக்கை மற்றொன்று!
முதலாவது தர பத்திரிகைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கொள்கை இருக்க முடியாது என்பதோடு சமயத்துக்குத் தகுந்தபடி சரிப்படுத்திக் கொள்வதன் மூலம் அவைகளுக்கு எவ்வித கஷ்டமும், தொல்லையும், நஷ்டமும் இருக்க முடியாது.
- 1935இல் தந்தை பெரியார்
No comments:
Post a Comment