கத்தோலிக்கர்களே! உங்கள் பிரான்சிலும் பொதுவுடைமைக் கிளர்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

கத்தோலிக்கர்களே! உங்கள் பிரான்சிலும் பொதுவுடைமைக் கிளர்ச்சி

06.08.1933 - குடிஅரசிலிருந்து.. பிரான்சில் நடந்த ஓர் சங்கக் கூட்டத்திற்குப் பல உயர்தர உத்தியோகஸ்தர்கள், பிரபுக்கள் முதலிய எல்லோரும் விஜயம் செய்திருந்தனர் அப்பொழுது ஒரு பிரஞ்சு வாலிபன் மூன்று ஆண்டுகட்குள் பிரான்சில் பொதுவுடைமைப் புரட்சி ஏற்படும் என மொழிந்தான். சில வருடங்கட்கு முன் இப்படித் தாராளமாக ஒருவன் பிரான்சில் புரட்சி சம்மந்தமாய் பேசியிருக்கமுடியாது.

பிரான்சில் ஏழைகளின் கொதிப்பு வரவர பொங்கிக்கொண்டு வருகிறது. பிரபுக்கள் அதைக்கண்டு பயந்து ஏழைகள் போலப் பலவிதத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். வாலிபத் தொழிலாளிகளிடம் பிரஞ்சுப் பிரபுக்களுக்குப் பயமதிகம். மூன்று ஆண்டுகளுக்குள் இல்லாவிடினும் பத்து ஆண்டுகளுக்குள்ளாவது பொதுவுடைமைப் புரட்சி ஏற்படுவது நிச்சயமென்று பணக்காரர்கள்  நம்புகின்றார்கள். 

பிரஞ்சு ஜனங்கட்குத் தங்கள் தேச ஆட்சியின் நிருவாகஸ்தர்கள் மீதும் சுயநல சங்கங்கள் மீதும், இத்தாலி ஜெர்மன் நாட்டின்மீதும் மிகுந்த அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

ராணுவ நிலைமை

தேசத்தின் உயிர்நாடியாயிருக்கும் ராணுவத்தினருக்கும் ஆட்சி முறையில் வெறுப்பேற்பட்டு விட்டது. ராணுவச் சிப்பாய்களெல்லாம் கடும் வெய்யிலில் நடந்து, காயமுற்று மடிய எங்களை ஏன் மொரோகோவிற்கு அனுப்ப வேண்டும். அதனால் நமது நாட்டிற்கு நலனேதும் உண்டா? இல்லை. வெடிகுண்டு செய்வோருக்கும், வியாபாரிகளுக்கும் நாங்கள் இரையாகப் போகின்றோம் என மொழிகின்றார்கள். சிற்சில சமயங்களில் தங்கள் ராணுவ அடையாளங்களைக் கூட அலட்சியமாய் எடுத்து எறிந்துவிடுகின்றார்கள்.

பொதுவுடைமைக் கொள்கை

சிப்பாய்கள் ரகசியமாய் பொதுவுடைமைத் தத்துவங்களையும், அது சம்மந்தமான பாடல்களையும், பிரசுரங்களையும் மிகப் பிரியமாய் வாசித்து வருகின்றனர். அந்தரங்கமாய்ப் பொதுவுடைமைச் சின்னங்களை வைத்திருக்கின்றார்கள். பிரஞ்சு ராணுவத்தில் மிகு தீவிரமாய் பொது வுடைமைக் கொள்கை பரவி வருகிறது. கப்பற்படையிலும்  செம்படவர்களிடையும்கூட பொதுவுடைமை இயக்கம் பரவி விட்டது.


No comments:

Post a Comment