சிதம்பரம் தீட்சிதர்கள் திமிர் ஆட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

சிதம்பரம் தீட்சிதர்கள் திமிர் ஆட்டம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் செயல் அதிகாரியை அரசு நியமித்தது சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் (02.02.2009) உத்தர விட்டதைத் தொடர்ந்து இரவோடு இரவாக கோயில் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு ஏற்றது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு ஊழல், முறைகேடு, சட்டவிரோத செயல்கள் நடந்ததையொட்டி, கடந்த 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அக்கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர செயல் அதிகாரி ஒருவரை நியமித்தது. இதை எதிர்த்து, கோயில் நிர்வாக செயலாளர் பொன். தீட்சிதர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதிகாரி நியமனத்திற்குத் தடை உத்தரவு பெற்றார்.

இந்த தடையை நீக்கக் கோரி அரசு தரப்பிலும், நெடும் போராட்டத்தை நடத்தி நடராஜர் கோயிலில் தேவாரம் பாடி வந்த சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி முன் கடந்த 22.01.2009 அன்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் குமார், அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி, அரசு சிறப்பு வழக்குரைஞர் சந்திரசேகரன், சிவனடியார் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, வழக்குரைஞர் சிவப்பிரகாசம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில் நீதிபதி கூறி இருந்ததாவது:

'சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் சரியாக பராமரித்து வரவில்லை என்பதும், கோயில் நகைகள் நிறைய காணாமல் போய் உள்ளது எனவும் தெரிகிறது.

இந்து அறநிலையத் துறை சட்டப்படி ஒரு கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக அரசுக்குத் தகவல் வந்தால், செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதன்படி, செயல் அதிகாரியை அரசு நியமித்துள்ளது.

தீட்சிதர்கள் கணக்கு வழக்குகளை முறையாக கவனிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளின்படி, கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடந்தால் செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, செயல் அதிகாரியை நியமித்த அரசு உத்தரவு சரிதான். மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த மனுவை இந்து அறநிலையத்துறை ஆணையர் விசாரித்து தள்ளுபடி செய்தது சரியானதுதான். கோயிலுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. 

சிதம்பரம் கோவிலின் ஆண்டு வருமானம் வெறும் ரூ. 30,000 மட்டுமே. கையிருப்பு வெறும் ரூ. 199 மட்டுமே என நா கூசாமல் தீட்சிதர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணையில் புளுகினார்கள். இதே கோவிலில் அரசு  உண்டியல்கள் வைத்ததில் வசூலான தொகை சுமார் இரண்டு கோடி ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை தீட்சிதர்களிடமே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்தனர். நடராசர் கோவிலில் பிரசாத கடை மட்டும் ஆண்டுக்கு ரூ.35 இலட்சத்திற்கு  ஏலம் போனது.  இன்று உண்டியல்கள் இல்லை, பிரசாதக் கடை ஏலம் இல்லை. வருகின்ற வருமானம் எவ்வளவு? என்பதை தமிழ்நாடு அரசு மக்களுக்கு சொல்ல வேண்டும். இனியும் தீட்சிதர்கள் வசம் கோவில் நிர்வாகம் இருக்கக் கூடாது. சிதம்பரம் கோவிலை நிர்வகிக்கும் அருகதையை தீட்சிதர்கள் இழந்து பல காலம் ஆகிவிட்டது.

இதை முறையாக நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அரசு கருதுவது சரியானது. எனவே, கோயிலை நிர்வகிக்க இந்து அறநிலையத் துறை ஆணையர் ஒரு வாரத்தில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் கோயிலை நிர்வாகம் செய்ய தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.'

இவ்வாறு நீதிபதி பானுமதி உத்தரவில் கூறியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை இந்து அறநிலையத் துறை ஆணையர் பிச்சாண்டி, விழுப்புரம் இணை ஆணையர் திருமகளுக்கு பேக்ஸ் மூலம் அன்று இரவே நடராஜர் கோயிலை அரசு ஏற்பது குறித்து கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட இணை ஆணையர் திருமகள், கடலூர் உதவி ஆணையர் ஜெகன்நாதன், செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், சிதம்பரம் ஏ.எஸ்.பி. நரேந்திர நாயர் ஆகியோருடன் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயிலில் ஆலோசனை நடத்தினார். அப்போது சிதம்பரம் கோட்டாட்சியர் ராமலிங்கம், வட்டாட்சியர் தனவந்த கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சுமார் 15 நிமிடம் நடந்த ஆலோனைக்குப் பிறகு அனைவரும் நடராஜர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்த தீட்சிதர்களிடம் கடித நகலை கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்களின் வழக்குரைஞர் சிவக்குமார், “நீதிமன்ற உத்தரவு வேண்டும். இணை ஆணையரின் கடிதத்தை ஏற்க முடியாது” என்று கூறினார். தீட்சீதர்களும் வாக்குவாதம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து “நாங்கள் தீர்ப்பு நகலை வழங்கவில்லை. கடிதத்தின் நகலைத்தான் கொடுக்கிறோம்” என்று அதிகாரிகள் கையெழுத் திட்டு கடிதத்தை கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமகள் கூறுகையில், “நடராஜர் கோயில் செயல் அலுவலராக தில்லை காளியம்மன் கோயில் பொறுப்பை வகிக்கும் கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கம் போல் பூஜை நடைபெறும். தேவாரம், திருவாசகம் தொடர்ந்து பாடப்படும். அரசு என்ன உத்தரவிட்டுள்ளதோ அதன்படி எல்லாம் நடைபெறும்” என்றார்.

செயல் அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டது குறித்த அறிவிப்பு தாக்கீதை பொது தீட்சிதர்களின் செயலக அலுவலக தாக்கீது பலகையில் அதிகாரிகள் அன்று இரவே ஒட்டினர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததன் மூலம், பல ஆண்டுக் கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டதானது தமிழ் ஆர்வலர்களுக்கும், பொது மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது.

தீட்சிதர்கள் விட்டு விடுவார்களா? மேல் முறையீடு செய்தனர். கலைஞர் ஆட்சியில் அறநிலையத் துறை கையகப்படுத்தியதால் வழக்கமான அரசியலை இதிலும் காட்டினார் ஜெயலலிதா. 

ஓய்வு பெறுவதற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத் திலேயே மேல்தட்டு நீதிபதி பச்சையாக சொன்னார்.

"ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு நல்ல காரியத்தை செய்து விட்டுப் போகிறேன்" என்று கூறினார். அந்த நல்ல காரியம் வேறு ஒன்றும் இல்லை. சிதம்பரம் நடராசர் கோயில் மீண்டும் தீட்சதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தான்.

இப்பொழுது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றால் தீட்சதர்கள் அனுமதி மறுத்தனர். அதிகாரிகள் திரும்பினர் என்பது தான் செய்தி.

அரசு என்ன செய்யப் போகிறது? தனி சட்டம் இயற்றி இந்து அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் சிதம்பரம் கோயிலைக் கொண்டு வருவதுதான் ஒரே வழி!


 

No comments:

Post a Comment