ஜெனீவா, ஜூன் 2 குரங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகம் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் பரவி இருக்கிறது.
இந்த நோய் குறித்து உலக சுகாதார அமைப்பின் அய்ரோப்பாவுக்கான பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் குளுஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- குரங்கு காய்ச்சல், கரோனா பரவிய அதே பாணியில் பரவவில்லை. எனவே, கரோனா ஒழிப்புக்கு பயன்படுத்திய அதே நடவடிக்கைகளை இதற்கும் பயன்படுத்த வேண்டியதில்லை. இருப்பினும், குரங்கு காய்ச்சல் பரவக்கூடிய திறன் அதிகமாக உள்ளது. இந்த காய்ச்சலை நாம் முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என்று இன்னும் தெரியவில்லை. அது சந்தேகமாகவே உள்ளது. அதற்கு தொற்று பாதித்தவர்களை விரைவாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது அவசியம். இனிவரும் மாதங்களில் பண்டிகைகள் வருவதால், குரங்கு காய்ச்சல் அதிகரிக்கக்கூடும். அதே சமயத்தில், உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிக்க அது ஒரு வாய்ப்பாக அமையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment