சென்னை, ஜூன் 9 வீட்டு மனை, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள் முழு தவணைத் தொகை செலுத்தியிருந்தால் கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீடற்ற ஏழை மக்களுக்காக பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதில் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் கீழ் வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகை மற்றும் இதர கட்டணங்களை செலுத்தி வாரிய விதிமுறைகளின்படி கிரையப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த வழிமுறையை எளிமையாக்க, முழு தவணை தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு வாரியம் மூலம் அவர்களது வீட்டு முகவரியிலேயே வரைவு கிரையப் பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கிரையப் பத்திரம் வழங்க மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாம் மூலம் ஒதுக்கீடுதாரர்கள் அல்லது வாரிசுதாரர்கள் கிரையப் பத்திரம் பெற விண்ணப்பிக்கலாம். வரைவு கிரையப் பத்திரத்துடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கோட்ட அலுவலகங்களில் உள்ள எஸ்டேட் அலுவலரை அணுகியும் மனு அளிக்கலாம். அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடைய வர்களுக்கு உடனடியாக கிரையப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment