சோதனைகளை சாதனைகளாக்குவோம்!
'திராவிட மாடல்' ஆட்சிக்குத் துணையாக இருப்போம்!!
சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
சென்னை, ஜூன் 3 முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் என்பது சடங்கல்ல - சரித்திர நிகழ்வு; சோதனைகளை சாதனைகளாக்கு வோம்; ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு என்றும் துணையாக இருப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களின் 99 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2022) சென்னை அண்ணா சாலை-ஓமந்தூரார் வளாகத்தில் அமைந் துள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரி யாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஈரோட்டுக் குருகுலத்தில் விளைந்த ஒப்பற்ற விளைச்சல்
‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்'' என்று ஒரு வரியில் தன்னை சுய விமர்சனம் செய்துகொண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஈரோட் டுக் குருகுலத்திலே விளைந்த ஒப்பற்ற விளைச்சல்!
தந்தை பெரியார் அவர்களுடைய சந்திப்பு, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை என்று கலைஞர் அவர் களே குறிப்பிட்டுள்ளார்.
அவர் பெற்றிருந்த அண்ணாவின் கனிவும், பெரியாரின் துணிவும், செய லாக்கமும், உழைப்பும் என்றும் அவரை வரலாற்றில் வாழ வைத்துக்கொண் டிருக்கின்றது.
நம்மைப் பொறுத்தவரையிலே, கலைஞர் ஒருபோதும் மறையவில்லை. நாம் ஒவ்வொரு எதிரிகளுடைய எதிர்ப்பை சந்திக்கின்ற நேரத்தில், எதிர்நீச்சல் அடிக்கின்றபொழுதெல்லாம், அந்த எதிர்நீச்சல் அளவிலே கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எதிரிகள் நம்மைப் பார்த்து ஏளனமும், ஏகடியமும் செய்கின்ற நேரத்தில், ‘திராவிட மாடல்' அதை எப்பொழுதும் சந்திக்கும் என்று இன்றைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்கள் சொல்லுகின்ற பதில் மூலமாக கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
கலைஞர் பிறந்த நாள் விழா என்பது
சடங்கல்ல - சரித்திர நிகழ்வு
‘‘திராவிட மாடலை'' திக்கெட்டும் இன்றைக்குப் புரிந்துகொண்டு, வியப்போடும், தெரிந்துகொள்ளவேண்டும், பின்பற்றவேண்டும் என்கிற ஆவலோடும் இன்றைக்கு வருகிறார்கள் என்றால், அந்த ஆணிவேரிலேயே மிக முக்கியமானவர் அண்ணாவைத் தொடர்ந்து வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
அவருடைய பிறந்த நாள் விழா என்பது நமக்கு சடங்கல்ல - சரித்திர நிகழ்ச்சி.
இன்றைக்கும் மதவாதப் பாம்பு தலைதூக்கி ஆடுகிறது.
அதேபோல ஜனநாயகத்தைக் கேள்விக்குறி ஆக்குகிறவர்கள் இருக்கிறார்கள்; முற்போக்குச் சிந்தனைகளுக்கு விரோதமாக சனாதனத்தை தமது துணையாகக் கொண்டு இந்த ஆட்சிக்குச் சவால் விடலாம் என்று கனவு காணுகிறார்கள்.
நாம் இவற்றையெல்லாம் சந்திப்பது, கலைஞர் என்கிற ஆயுதத்தை நம் கையில் வைத்துக் கொண்டிருப்பதால்தான் - தந்தை பெரியாரைத் துணைக்கோடலால்தான்!
கலைஞர் சொன்னார், ‘‘ஆட்சியைக்கூட என்னிடத்தில் இருந்து நீங்கள் பறித்துவிடலாம் செங்கோலை - எனது எழுதுகோலை ஒருபோதும் பறிக்க முடியாது'' என்று சொன்னார்கள்.
அப்படிப்பட்ட அந்த ஆயுதங்கள் இன்றைக்கும் நம்மிடம் இருக்கின்றன. இளைய தலைமுறையினருக்கும், இனிவரக்கூடிய தலைமுறையினருக்கும் அவை என்றென்றும் பயன்படும்.
சோதனைகளையும், சாதனைகளாக ஆக்கக்கூடிய ஓர் ஆட்சிக்குத் துணையாக இருப்போம்!
எனவே, கலைஞர் அவர்களுடைய சிலைக்கு நாம் அணிவிக்கும் மாலை என்பது, அவருடைய சீலத்திற்கும், கொள்கைக்குமானது; தொடர்ந்து நம்முடைய பயணம் உறுதி செய்யப்படுகிறது.
லட்சியப் பயணம் அந்தச் சுவடுகளிலே நடக்கிறது.
அவர் பெரியாரின் தோள்களில் இருக்கிறார்.
நம்மைப் போன்றவர்கள் வரிசையாக அந்தத் தோள்களின்மீது அமர்ந்துகொண்டு எவ்வளவு பெரிய கடுமையான சோதனைகளையும், சாதனைகளாக்கும்வோம் - ‘திராவிட மாடல்' ஆட்சிக்குத் துணையாக இருப்போம் என்பது இன்றைய உறுதிமொழி!
வாழ்க கலைஞர்!
வெல்க திராவிடம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
No comments:
Post a Comment