'விடுதலை' சந்தா சேர்ப்பில் சென்னை மண்டல திராவிடர் கழகத்தை முதலிடத்தில் நிறுத்துவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

'விடுதலை' சந்தா சேர்ப்பில் சென்னை மண்டல திராவிடர் கழகத்தை முதலிடத்தில் நிறுத்துவோம்!

சென்னை மண்டல திராவிடர் கழகக் கூட்டத்தில் தோழர்களின் உற்சாக முடிவு

சென்னை, ஜூன் 30  'விடுதலை' ஆசிரியராக 60 ஆண்டு காலம் பணியாற்றி, அதிசய சாதனை புரிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் சாதனைக்கு நன்றி தெரி விக்கும் வகையிலும், பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் 60 ஆயிரம் 'விடுதலை' சந்தாக்களை அளிப்பது என்று மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

அதனையொட்டி சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்  நேற்று (29.6.2022) மாலை 5.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி கடவுள் மறுப்புக் கூறி, சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 12 ஆயிரம் ரூபாயை 'விடுதலை' சந்தா தொகையைக் கழகத் தலைவரிடம் அளித்தார்.

கழகத் தோழர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு சந்தாக் களை வழங்கினர்.

தோழர் முத்தையன் முன்னுதாரணம்

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் முத்தையன் முன்னுதாரணமாக தம் குடும்பத்தின் சார்பில் 10 அரையாண்டு சந்தாக்களை அளித்ததுடன், தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் 10 சந்தாக்களை சேகரித்துக் கொடுப்பார்கள் என்றார். மொத்தம் தம் குடும்பத்தின் சார்பில் 100 'விடுதலை' சந்தாக்களை வழங்குவோம் என்று அவர் சொன்னபொழுது அரங்கமே குலுங்கும் அளவுக்குக் கர வொலி எழுந்தது.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலேயே கூட 60 ஆயிரம் சந்தாக்களை சேகரிக்க முடியும். இங்குதான் மக்கள் தொகை அதிகம் என்பதோடு, அரசுத் துறையில், தனியார்த் துறைகளில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையும் அதிகம்.

தந்தை பெரியாரின் தொண்டால் 'விடுதலை'யின் தொண் டால் பலன் பெறாத, பயன் பெறாத ஒரே ஒரு தமிழரைக் காட்ட முடியுமா?

வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டிக் கேட்போம். அலுவலகம் வாரியாகச் சென்று உரிமையுடன் கேட்போம்.

செல்லுவதற்கும், கேட்பதற்கும் சற்றும் தயங்கக்கூடாது. முதலில் நமக்கு வேண்டியது தன்னம்பிக்கையாகும்.

தங்களுக்கு அறிமுகமானவர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் அனைவரையும் சந்தித்து விண்ணப்பிப்போம்.

இட ஒதுக்கீடு என்ற ஒன்று கொண்டுவரப்படவில்லை யானால், நமக்குக் கல்வி வாய்ப்புக் கிடைத்திருக்குமா? 

அரசு அலுவலகங்களில்தான் பணியாற்றும் நிலை உயர்ந்திருக்குமா? 

இதற்காகக் குரல் கொடுத்தவர், 

பிரச்சாரம் செய்தவர்,

போராட்டம் நடத்தியவர்,

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அல்லவா!

இதற்கெல்லாம் போர் வாளாக இருந்தது களமாடிய ஏடு 'விடுதலை' அல்லவா! நன்றியுள்ள மக்கள் தமிழ்நாட்டில் 60 ஆயிரம் பேர்கூடவா இல்லாமல் போய்விட்டார்கள்.

கடந்த 10 ஆண்டு ஆட்சியில் அரசு விளம்பரம் உண்டா? விளம்பரமே இல்லாமல் ஏடு நடத்துவது எளிதான ஒன்றா? என்றாலும், இலட்சியத்திற்காக ஏறுநடை போடும் ஏடாயிற்றே 'விடுதலை'. இழப்புகளால் இடிந்து விழாமல், வீறுகொண்டு அதன் பணியை நாள்தோறும் நாள்தோறும் சளைக்காமல், சலிப்பு இல்லாமல் மேற்கொண்டுதானே வந்திருக்கிறது.

'விடுதலை'யில் வெளிவரும் அறிக்கை என்ன?

தலையங்கம் என்ன கூறுகிறது? என்று அரசுகள் கூர்மையாகக் கவனிக்கத் தவறுவ தில்லையே!

'விடுதலை' என்பது ஒரு கெசட்டு! 'விடுதலை'யில் வெளிவந்த ஒரு சிறு பெட்டிச் செய்திகூட அரசின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்திடவில்லையா?

கழகத் தலைவரின் முக்கிய அறிவுறுத்தல்

கழகத் தலைவர் ஒன்றைக் குறிப்பிட்டார், ஒவ்வொரு நாளும் முக்கிய நாள்கள் 'கவுண்ட் டவுன்' என்பதுபோல, இடையில் இன்னும் இத்தனை நாட்களே என்று கணக்கிட்டு, நாள்தோறும் நாள்தோறும் சந்தா சேர்ப்பு நடைபெறவேண்டும்.

ஒரு நாள் இடைவெளியில், இந்த அரங்கமே நிறைந்தி ருப்பது கண்டு என் மனம் நிறைந்துவிட்டது (பலத்த கரவொலி).

கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை, மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட் டக் கழகத் தலைவர் எண்ணூர் மோகன், தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன், ஆவடி மாவட்டக் கழகத் தலைவர் தென்னரசு, கும்முடிப்பூண்டி மாவட்டக் கழகத் தலைவர் புழல் ஆனந்தன், சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், பேரா.நாத்திகன் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர்கள் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், வேண்மாள் நன்னன், பேராசிரியர் சுலோச்சனா, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முதலியோர் மிகுந்த ஆர்வமாகவும், உற்சாகத்தோடும் 'விடுதலை' சந்தாக் களை ஆசிரியர் மனம் நிறைவு அடையும் வகையில் சேர்த்துக் காட்டுவோம், சென்னை மண்டலத்தை முதலிடத் தில் நிறுத்துவோம் என்று உரையாற்றினர்.

மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ் நன்றி கூறிட, கூட்டம் நிறைவுற்றது. 

No comments:

Post a Comment