சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

சென்னை, ஜூன் 1  தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. 

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: 

தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயற்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப்போட்டிக்கு 2021ஆம் ஆண்டில் (1.1.2021 முதல் 31.12.2021 வரை) தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை),  சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம், பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்,

நுண் கலைகள், அகராதி, கலைக் களஞ்சியம், கலைச்  சொல்லாக்கம், ஆட்சித் தமிழ், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு,  கணிதவியல், வானியல், இயற்பியல் உள்ளிட்ட 33 வகைப்பாடுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு நூலாசிரியருக்கு ரூ.30,000 அந்நூலை பதிப்பித்த பதிப்பகத் தாருக்கு ரூ.10,000 என பரிசுகள் வழங்கப்பெறும்.

பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் நேரிலோ,  அஞ்சல் வாயிலாகவோ  அல்லது இத்துறையின் வலைதளத்திலோ இலவசமாகப்  (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் வாயிலாகப் பெற 23x10 செ.மீ அளவிலான சுய முகவரியிட்ட உறையில் 10 ரூபாய் அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100 ‘தமிழ் வளர்ச்சி இயக்குனர், சென்னை’ என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலையாக அளிக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 5.8.2022. அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம்  முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008, தொலைபேசி: 044 - 28190412, 28190413. 

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment