தகவல் தொடர்பு சேவைக்காக புதிய செயற்கைக்கோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

தகவல் தொடர்பு சேவைக்காக புதிய செயற்கைக்கோள்

 சென்னை, ஜூன் 2  இஸ்ரோவின் தகவல் தொடர்பு சேவைக்கான அதிநவீன ஜிசாட்-24 செயற்கைக்கோள் ஏரியன் 5 ராக்கெட் மூலம் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஜூன் 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

நம் நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-24 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ளது. 4,180 கிலோ எடை கொண்ட ஜிசாட்-24, இஸ்ரோவின் 42-ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும்.

அதிக எடை உடைய செயற்கைக்கோள் என்பதால் அய்ரோப்பிய நாடான பிரான்சின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து கனரக ராக்கெட்டான ஏரியன்-5 மூலம் ஜூன் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதற்காக, விமானப் போக்குவரத்து மூலம் செயற்கைக்கோள் கடந்த மே 17-ஆம் தேதி கொரு ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த ஜிசாட்-24 செயற்கைக்கோளில் க்யூ பேன்ட் டிரான்ஸ்பாண்டர் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது டிடிஎச் டெலிவிஷன் மற்றும் அலைபேசி சேவைக்குப் பயன்படும்.

மத்திய விண்வெளி ஆய்வுத் துறையின்கீழ் இயங்கும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்அய்எல்) நிறுவனம் மூலம் இந்த ராக்கெட் ஏவுதல் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ஜிசாட்-24 செயற்கைக்கோள் பயன்பாட்டு சேவைகள் அனைத்தும் ‘டாடா பிளே’ நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஏரியன் 5 ராக்கெட்டில் மலேசியாவுக்குச் சொந்தமான மீசாட் - 3டி செயற்கைக்கோளும் ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment