ஜூன் 3 - நம் இயக்க வரலாற்றிலும், இன வரலாற்றிலும் மிக முக்கியமான நாள்.
ஆம் - முத்தமிழ் அறிஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த நாள்.
பாரம்பரியம், பணச் செருக்கு, பெரும் படிப்பு என்று சொல்லிக் கொள்ளும் நிலை இல்லை.
சட்டப் பேரவையில் ஒரு தடவை சொன்னார், "மிக மிக என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அந்த மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான்" என்றார்.
அத்தகைய ஒருவர் எல்லா வகையிலும் உச்சத்தைத் தொட்டார் என்றால் அதற்குக் காரணம் என்ன? அவரின் அயரா உழைப்பும், தம்மை தகுதியாக்கிக் கொள்ளும் முனைப்பும், தந்தைபெரியார் தம் திராவிடக் கொள்கை மீது வைத்த அளப்பரிய பற்றும் - பாடும்தானே!
அவர் வழியில் முத்துவேல் கருணாநிதி மு.க. ஸ்டாலின், தம் தந்தையிடமிருந்து உழைப்பையும், சித்தாந்தத்தையும் வரித்துக் கொண்டு பம்பரமாகச் சுற்றுகிறார்.
ஆம், கலைஞர் இளைஞர் உலகிற்கு உன்னத கலங்கரை விளக்கம் - உற்சாகப் பெருக்கம் - இளைஞர்கள் படிக்க வேண்டிய பொதுத் தொண்டின் புத்தகம்.
அடுத்தாண்டு அவர்தம் நூற்றாண்டுப் பெரு விழா - இவ்வாண்டு அதற்கான முன்னோட்டம்.
திராவிட இயக்கத்திற்கு ஏற்படும் சவால்களைச் சந்திப்போம். மதச் சார்பின் மைக்கும், சமூகநீதிக்கும் எதிராக ஏற்பட்டுள்ள அறைகூவலின் ஆணி வேரை வீழ்த்துவோம் என்ற சூளுரையை இந்நாளில் ஏற்போம்.
வாழ்க கலைஞர்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
2-6-2022
No comments:
Post a Comment