சோனியாவுக்கு கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

சோனியாவுக்கு கரோனா தொற்று

புதுடில்லி, ஜூன் 3  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சூரஜ்வாலா அளித்த பேட்டியில், "சோனியா காந்தி கடந்த வாரம் முழுவதும் பல்வேறு தலைவர்கள், செயற்பாட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து கரோனா பரிசோதனை செய்தார். அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவ ஆலோசனையின்படி அவர் மருந்துகளை உட்கொண்டு வருகிறார். அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

தனியார் விண்கல தயாரிப்பு மய்யம் பெங்களூருவில் திறப்பு

பெங்களூரு, ஜூன் 3 அய்தராபாத்தை சேர்ந்த ஆனந்த் டெக்னாலஜிஸ் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் பெங்களூருவில் நாட்டிலே மிகப்பெரிய தனியார் விண்கல தயாரிப்பு மய்யத்தை பெங்களூருவில் புதன்கிழமை திறந்தது. கருநாடக தொழில் மேம்பாட்டு துறையின் விண்வெளி பூங்காவில் அமைந்துள்ள இந்த மையம் 15 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

இதில் ஒரே நேரத்தில் நான்கு பெரிய விண்கலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனையை நடத்த முடியும். இந்த மய்யத்தில் உள்ள 4 அலகுகளும் தனித்தனியாக இயங்குபவை. விண்கலங் களை சோதிக்கும்போது இந்த அல குகள் தனியாகவே இறுதிநிலை வரை ஒருங்கிணைப்பு சோதனைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என ஆனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்வெளி துறையின் தலைவர் எஸ்.சோமந்த் கூறுகையில், “கடந்த 60 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. தற்போது அதன் அடுத்தகட்டமாக தனியார் நிறுவனங்களும் சொந்தமாக செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணில் ஏவலாம் என்ற நிலையை எட்டியுள்ளது” என்றார். 

தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து 87 கட்சிகள் நீக்கம்

புதுடில்லி, ஜூன் 3  நாடு முழு வதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2,796 கட்சிகள் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி உள்ளன. இதில் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தன. எனவே அந்தந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் இந்த கட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது இதில் 87 கட்சிகள் செயல் பாட்டில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த 87 கட்சிகளையும் பதிவு செய்து அங்கீகாரம் பெறாத கட்சிகளின் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இந்தக் கட்சிகள் உடனடியாக மேற்படி விதிமீறல் உள்ளிட்டவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தலில் சின்னம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்படும் என தேர்தல் ஆணைய  வட்டாரங்கள் தெரிவித்தன.


No comments:

Post a Comment