பகுத்தறிவும் - சுயமரியாதையும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

பகுத்தறிவும் - சுயமரியாதையும்!

01.05.1948- குடிஅரசிலிருந்து...

திராவிடர் கழகம் மற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எவ்விதத்திலும் விரோதமானதல்ல. அவைகளை விட தீவிரமான கருத்துக்களையும், திட்டங்களையும் கொண்டதுதான் எங்கள் கழகம் என்று எங்கு வேண்டுமானாலும் சொல்வோம். சொல்லுவது மட்டுமல்ல, மெய்ப்பித்தும் காட்டுவோம். காங்கிரஸ்காரனோ, கம்யூனிஸ்டோ நெருங்கக்கூட பயப்படும் ஆத்மார்த்தத் துறையில் நாங்கள் அஞ்சாது குதிக்கிறோம். ஆத்மார்த்தக்காரர்கள் நம்மைக் கண்டு அஞ்சும் அளவுக்கு மக்களுக்குப் பகுத்தறிவு ஊட்டி வருகிறோம். புராணக்காரனுக்கு மேலாக தத்துவார்த்தம் பேசுகிறோம். அவன் தத்துவார்த்தம் பேசினால் அவனுக்கும் மேலாக வேதாந்தம் பேசுவோம். அவன் வேதாந்தத்தை விட்டு ராமகிருஷ்ணரின் சிஷ்யன் என்றால், நாங்கள் அவருக்கும் மேலான இராமலிங்கரின் சிஷ்யர்கள் என்போம். அவன் மோட்சத்தைப்பற்றிப் பேசினால், அதற்கும் நாங்கள் குறுக்கு வழிகாட்டியனுப்புவோம். சமுதாயத்தில் உண்மையான சமத்துவம் நிலவ வேண்டுமேன்பதுதான் எங்கள் ஆசை. சமத்துவம் என்றால் சமுதாய இயல், பொருளாதார இயல், அரசியல், மொழியியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் சமத்துவ சுதந்திரம் வேண்டுமேன்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆகவே, எங்களைச் சற்று தீவிரவாதிகள் என்று யாராவது கூறலாமே தவிர, எங்களைப் பிற்போக்கானவர்கள் என்றோ அல்லது எங்கள் கொள்கைகளைப் பற்றி இவ்வளவு பெருமையாகக் கூறிக் கொள்ள அருகதையற்றவர்கள் என்றோ யாரும் கூற முடியாது. நீங்கள் நான் ஏதோ அளப்பதாகவோ அல்லது உங்களை ஏமாற்றப் போகிறேன் என்றோ நினைத்து விடக்கூடாது. சிந்தித்துப் பார்க்க வேண்டும், நாங்கள் கூறுவதில் எவ்வளவு உண்மை இருக்கிறதென்று. மனப்பூர்வமாகச் சொல்லுகிறேன், எங்களுக்கு மந்திரிப்பதவி பெறவோ அல்லது ஒரு பிர்லாவாக ஆகவேண்டுமென்றோ விருப்பம் இல்லையென்று எங்களைக் குறை கூறுபவர் எவர்?

எங்களைக் குறை கூறியே தம் வாழ்க்கைவசதியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஏதோ ஒரு சுயநலக் கும்பல்தான் எங்கள் மீது குறை கூறி வருகிறதே ஒழிய, எங்களைப் போன்ற ஒழுங்கான திட்டமுடைய ஒரு இயக்கம் இல்லையென்றே திடமாகக் கூறுவேன். எங்களுக்கு வேறு கழகங்களைப்பற்றி குறை கூற வேண்டிய அவசியமும் இல்லை. அப்படிக் குறை கூறுவதற்கோ அல்லது நம் மீது சுமத்தப்படும் அபாண்டப் பழிகளுக்கு அதே முறையில் பதில் கூறவோ எங்களுக்குப் பத்திரிகை வசதியோ, பண வசதியோ, அதிகார வசதியோ, ஆள் வசதியோ இல்லை.

ஒரே விளக்கு ஊருக்கெல்லாம் வெளிச்சம்

அதனால்தான் நான் ஒருவனே ஊர் ஊராகச் சென்று சங்கூதி வரவேண்டியிருக்கிறது. ஒரே விளக்குதான் எல்லா ஊருக்கும் வெளிச்சம் தரவேண்டியிருக்கிறது. ஒரே பத்திரிகைதான் எங்கும் பிரசாரம் செய்ய வேண்டியிருக்கிறது. நம்மீது குறைகூறும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு ஆள் கூட்ட வசதி அதிகம். அவர்களிடம் அதிகாரமுண்டு ஆட்களைப் பயமுறுத்த, அஞ்சாதவரை அடக்கி வாய் பூட்டுப் பூட்டவும், கள்ள மார்க்கெட் செய்ய உரிமையளிக்கவும் வசதியுண்டு அவர்களிடம். இதுவன்னியில் கோடிக்கணக்கான பணமும், ஆயிரக்கணக்கான பத்திரிகைகளும் அவர்களுக்குண்டு. இவையெல்லாம் நமக்கில்லாத காரணத்தால்தான் அவர்களின் புளுகுகளுக்கு அவர்கள் முறையிலேயே சமாதானம் தெரிவிக்க வாய்ப்பற்றவர்களாக நாம் இருந்து வருகிறோம்.

குறையிருந்தால் கூறுங்கள்

அதனால்தான் உங்களைப் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்படி வேண்டுதல் செய்கிறோம். நாங்கள் கூறுவதெல்லாம் உண்மையென்றோ, சத்தியமென்றோ அல்லது நாங்கள் கூறுவதை கடுதாசியில் எழுதி நெருப்பிலிட்டால் கூட அழியாத அளவுக்குச் சுத்தமானதென்றோ கூறுவதில்லை. நாங்கள் ஏதாவது தவறு சொல்லியிருந்தால், தவறு செய்திருந்தால் அருள் கூர்ந்து தயை செய்து எடுத்துக் கூறுங்கள். நாங்கள் நன்றியறிதலோடு திருத்திக் கொள்கிறோம். அல்லது சமாதானம் தெரிவிக்கிறோம். நாங்கள் கூறுவதை அப்படியே நம்பி விடவேண்டாம் என்றுதான் நாங்கள் உங்கள் பகுத்தறிவுக்கு விண்ணப்பம் செய்து வருகிறோம்.

சிந்திப்பது மனித தர்மம், அதுவே சுயமரியாதை

நாங்கள் கூறுவனவற்றிற்கு எங்கு மறுப்பு கிடைக்குமென்று நீங்கள் தேட வேண்டும். யாராவது ஆட்சேபனை தெரிவிப்பார்களானால், கண்கொத்திப் பாம்பு போல் இருந்து கருத்துடன் கவனிக்க வேண்டும். பிறகு பொறுமையோடு ஒன்றையொன்று ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். உங்கள் அறிவையே உண்மையான நுட்பமான தராசாகக் கொண்டு தராதரங்களை நிறுத்துப் பார்க்க வேண்டும். மாசிருக்கும், பாசி இருக்கும், களிம்பிருக்கலாம். அறிவு கொண்டு உரைத்துப் பாருங்கள். உங்கள் அனுபவத்தால் அலசிப் பாருங்கள், சிந்தித்துப் பாருங்கள், சிந்திக்க வேண்டியதுதான் மனித தர்மம். யார் எது சொன்னாலும் உங்கள் சொந்த புத்தி கொண்டு சிந்தித்துப் பாருங்கள். சுதந்திரத்தோடு உங்கள் அறிவைச் சட்டத்திற்கோ, சாதிரத்திற்கோ, சமய சந்தர்ப்பத்திற்கோ, சமுதாய சம்பிரதாயத்திற்கோ, பழக்க வழக்கங்களுக்கோ அடிமைப்படுத்தாமல் சிந்தித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

நாம் இதைத்தான் சுயமரியாதை என்கிறோம். சுய அறிவு கொண்டு சிந்தித்துப் பார்ப்பதற்குத்தான் சுயமரியாதை என்று பெயர். ஒவ்வொருவரும் தம் சுய அறிவு கொண்டு சிந்திக்க உரிமை பெற்றிருப்பதற்குத்தான் பூர்ணசுயேச்சை என்று பெயர் எதையும் பூர்ண மரியாதை கொடுத்துக் கேட்டு பூர்ண சுயேச்சையோடு ஆராய்ந்து முடிவுக்கு வாருங்கள்.

மனிதனை மனிதனாக்குவது சிந்தனை

இச்சிந்தனா சக்திதான் மனிதனை மிருகங்களிடமிருந்தும், பட்சிகளிடமிருந்தும் பிரித்துக் காட்டுவதாகும். மிருகங்கள் மனிதனை விட எவ்வளவோ பலம் பெற்றிருந்தும் அவை அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். கழுகு ஒன்றரை மைல் உயரப் பறந்து கொண்டிருக்கும் போதே தரையிலுள்ள ஒரு சிறு பாம்பைக்கூட கண்டு பிடித்துவிடும். பார்வையில் அது நம்மைவிட அதிகச் சக்தி பெற்றிருக்கிறது என்பதற்காக நாம் அதை மேம்பட்டதாக ஒப்புக் கொள்ளுகிறோமா? ஆகவே மனிதனிடமுள்ள வேறு எந்தச் சக்தியைக் காட்டிலும், பகுத்தறியும் சக்திதான் அவனை மற்ற எல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் மேம்பட்டவனாக்கி வைக்கிறது. ஆகவே, அதை உபயோகிக்கும் அளவுக்குத்தான், அவன் மனிதத் தன்மை பெற்றியங்குவதாக நாம் கூற முடியும். பகுத்தறிவை உபயோகியாதவன் மிருகமாகவே கருதப்படுவான்.

(இவ்வுரை பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு. சொற்பொழிவு ஆற்றிய நாள்களும், இடங்களும் குடிஅரசில் குறிப்பிடப்படவில்லை. (பதிப்பாசிரியர்)


No comments:

Post a Comment