இனி மறக்க முடியாது!
மனித மூளை நினைவுகளை சேமிக்கையில், ஒரே மாதிரியான அனுபவங்களை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி, பாதுகாக்கிறது. இது எப்படி என்பதை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அதுமட்டுமல்ல, நடுத்தர வயதை எட்டியதும், நினைவாற்றல் குறைவதைத் தடுக்க, ஒரு மருந்தையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த மருந்துக்கான வேதிப்பொருள், எச்.அய்.வி., நோயாளிகளுக்குத் தரும் மருந்தில் இருந்து கண்டறியப்பட்டது.
விலங்கு மரபணு பெட்டகம்!
பிரிட்டனில் விலங்கு ஆராய்ச்சியாளர் களும், விலங்குக் காட்சி சாலை நிர்வாகிகளும் ஒரு கூட்டு முயற்சியை தொடங்கியுள்ளனர்.
அதன்படி, 'நேச்சர் சேப்' (Nature SAFE) என்ற திசுக்கள் வங்கி, விலங்குக் காட்சிசாலைகளில் உள்ள அரிய வகை பிராணிகளின் திசுக்களை எடுத்து, கிரையோஜெனிக் தொழில்நுட்ப முறையில் உறைய வைக்கின்றனர்.
அந்த விலங்குகள் வழக்கொழியும் நிலை ஏற்பட்டால், நேச்சர் சேப்பில் உள்ள திசுக்களிலிருந்து மரபணுக்களை எடுத்து அந்த விலங்கை உயிர்ப்பிக்கலாம்.
நோயறிதலில் புதுமை!
நுரையீரலில் ரத்தம் உறையும் நோய் இருப்பதை அறிய மருத்துவர்கள் சி.டி.ஸ்கேன் எடுப்பர். இந்த ஸ்கேனை துல்லியமாக ஆராய உதவுகிறது ரேப்பிட் பி.ஈ., என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள். நோயாளிக்கு இந்த நிலை இருப்பதை அறிந்தவுடன், ரேப்பிட் பி.ஈ., மென்பொருள் உடனே மருத்துவருக்கு செய்தி அனுப்பி, சிகிச்சையை தொடங்க அறிவுறுத்துகிறது. அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து மேலாண்மைக் கழகம், அண்மையில் இந்த மென் பொருளுக்கு அனுமதி வழங்கியது.
பயன்படும் மாசு!
சுவிட்சர்லாந்தை சேர்ந்த குவாப்டிஸ் (Quaptis) நிறுவனம், காற்று மாசினை நீக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இத்தொழில்நுட்பம் வாகனப் புகையிலிருந்து 90 சதவீத கார்பன் டையாக்சைடை பிரித்து திரவமாக மாற்றிவிடுகிறது. வாகன இயந்திரத்தின் வெப்பத்தைப் பயன்படுத்தி, வேதி வினையை உண்டாக்குவதன் மூலம், இது சாத்தியமாகிறது. திரவமான கார்பன் டையாக்சைடை, வாகனத்திலிருந்து எடுத்து, புதிய எரிபொருள் தயாரிப்பு, உரம் தயாரிப்பு போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியும். இந்த புதிய கருவியை வாகனங்களில் எளிதாக பொருத்த முடியும்.
No comments:
Post a Comment