கைவிடப்படுகிறதா சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

கைவிடப்படுகிறதா சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்?

காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டு, வழக்குகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேதுசமுத்திர திட்டத்தைக் கைவிட மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கேபினட் கூட்டத்தில் முடிவு எடுக்கவுள்ள தாகவும் கூறப்படுகிறது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது சேதுசமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவை பாக் ஜலசந்தி மற்றும் பால்க் விரிகுடா வழியாக இணைக்கும் புதிய கப்பல் பாதையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட சேதுசமுத்திர கால்வாய்த் திட்டம் இந்தியாவின் மிக உயர் லட்சிய கடல்சார் திட்டங்களில் ஒன்றாகும்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும். இதனால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல் மைல்கள் வரை குறைவதுடன் கப்பல்களின் 30 மணி பயண நேரம், எரிபொருள் சேமிப்பு ஏற்படும். மேலும் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகம் மேம்படுவதுடன், தூத்துக்குடி துறைமுகமும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களும் வளர்ச்சி பெறும்.

இதற்கிடையில், சுப்பிரமணியசாமி மற்றும் சில இந்து அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள் காரணமாக, சேதுசமுத்திரத் திட்டப்பணிகளில் தடை ஏற்பட்டது.  இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால்,  மன்னார், பாக் ஜலசந்தி கடற்பகுதியில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிர் களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும், கடலரிப்பு ஏற்படும். மீன் இனங்கள் இடம் பெயரும் அபாயம் உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு ரீதியிலும் சேதுசமுத்திர திட்டத் திற்கு எதிரான தவறான கருத்துகள் வைக்கப்படுகின்றன. மேலும் இராமர் கட்டிய பாலம் என கதை அளக்கப் படுகிறது. சேதுசமுத்திர திட்டத்தினால் இந்த மணல் திட்டுகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தைக்கூறி சில இந்து அமைப்புக்கள் திட்டத்தை எதிர்த்து வருகின்றன.

இந்த சலசலப்புகளுக்கு மத்தியில்தான், சேதுசமுத்திரத் திட்டத்தை மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுத்த முனைந்தது. கடந்த 2005 - ஜூலை 2ஆம் தேதி ரூ. 2,427 கோடி மதிப்பில்  சேது சமுத்திர திட்டப்பணிகள் மன்மோகன் சிங்கால்  மதுரையில் துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அதற்கான பணிகளுக்கு ரூ.831.80 கோடி 2007ஆம் ஆண்டு வரை செலவிடப்பட்டுள்ளது.

ஆனால், தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தாக்கல் செய்த மனுக்களை அடுத்து 2007ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய சேதுசமுத்திரத் திட்ட கார்ப்பரேஷனை முடித்து வைப்பது குறித்து அமைச் சரவை பரிசீலிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்போது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் முழுப் பங்குகளையும் விற்க அரசாங்கம் தயாராகி விட்டதால், அதனால் சேதுசமுத்திரத் திட்டத்தையும் கைவிட மோடி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்துத்துவாவாதிகள் கூறும் இராமன் என்ற கதாபாத் திரமே கற்பனையானது. இவர்கள் கூறும் இராமன் பாலம் என்பது மணல் திட்டாகும். உலகின் பல கடல் பகுதிகளிலும் காணப்படுவது தான்.

அறிவியல் வளர்ந்த இந்தக் கால கட்டத்தில் புராணப் புளுகு மூட்டையைக் கட்டி அழும் ஓர் ஆட்சி இந்தி யாவில் அமைந்திருப்பது வாய்ப்புக் கேடும் - வெட்கக் கேடுமேயாகும்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆட்சி யாளரோ அஞ்ஞான மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு திரிகின்றனர். இதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment