தமிழ் திரைப்பட நடிகர்களுள் ஒருவர் மாதவன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்'. இப்படத்தில் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹிந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கைதாகி விடுவிக்கப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பேசிய மாதவன், "அமெரிக்கா, ரஷ்யா, சீனா, அய்ரோப்பிய நாடுகள் பல கோடிக் கணக்கில் செலவழித்து 32, 33 முறை செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றன.
இந்தியா கடந்த 2014ஆம் ஆண்டு சிறீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்து செலஸ்டியல் என்ற பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரகங்களை எல்லாம் தட்டிவிட்டுட்டு நேரடியாக அனுப்பினார்கள்" என்றார்.
"‘மார்ஸ் மிஷன்’ என்பது பூமியிலிருந்து, செவ்வாய்க் கிரகம் வரை அந்த செயற்கைக்கோள் சென்று சேருவதுதான். அமெரிக்கா, நாசா, ரஷ்யா, சீனா, அய்ரோப்பா உள்ளிட்ட நாடுகள் பல முறை 800 மில்லியன், 900 மில்லியன் என கோடிக்கணக்கில் செலவழித்து 30ஆவது தடவை, 32ஆவது தடவை தான் செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றார்கள். அதிநவீன இயந்திர தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றனர். ஆனால் இந்தியாவிடம் இருக்கும் இயந்திரம் மிகவும் சிறியது. அவர்களது விண்கலம் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும். இருந்தாலும் இந்தியா கடந்த 2014ஆம் ஆண்டு செவ்வாய்க்குச் செயற்கைக்கோளை அனுப்பியது. சிறீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்து, பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரகங்களை எல்லாம் தட்டிவிட்டுட்டு நேரடியாக அனுப்பப்பட்டது.
நம்பி நாராயணின் மருமகன் அருணன், அவர் தான் மங்கள்யான் (செவ்வாய்) திட்டத்தின் இயக்குநர். "அவர் இந்தக் கதையை சொல்லச் சொல்ல அப்படியே புல்லரிச்சு போயிருச்சு. பஞ்சாங்கம், வானியல், வழிமுறை வரைபடத்தைப் பார்த்து, ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மைக்ரோ செகண்ட்டில் செவ்வாய்க்கு இஸ்ரோ செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. அது வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது.
மின்சாரம் இல்லாமல், சின்ன பட்ஜெட்டில் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டதற்குக் காரணம் இந்த பஞ்சாங்கம் தான். இந்த மாதிரி நம்ம நாட்டிலேயே பல விஷயங்கள் இருக்கு. ஹாலிவுட்ல ‘கிராவிட்டி’, ‘இண்டர்செல்லர்’, ‘இன்செப்ஷன்’, ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ போன்று படம் பண்ணும்போது, அவங்கதான் மேதைங்கனு உலகமே நம்பிடுது. ஆனா அவங்கள விட பல விஞ்ஞானிகள் நம் நாட்டில் இருக்காங்க. இங்க சாதிக்க முடியலனு அங்க போய் சாதிக்கிறாங்க. உலக நாடுகளில் டாப் கம்பெனிகளில் 13 தலைமை செயல் அதிகாரிகள் நம் இந்தியர்கள்" இவ்வாறு அவர் மேலும் பேசியிருந்தார்.
அதாவது இது உண்மை இல்லை என்று அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் நம் மக்கள் ஒன்றைக் கூறினால் அது உண்மையாக இருக்கும் என்று நம்பிவிடுவார்கள் என்ற நினைப்பில் அவர் கூறியுள்ளார். பஞ்சாங்கத்தில் சூரியன் கூட ஒரு கோள் தான், பூமியைச் சுற்றித்தான் சூரியன் வலம் வருகிறது, நிலவையும் சூரியனைச் சுற்றும் கிரகமாகப் பார்க்கிறது பஞ்சாங்கம். அதிலும் ஒரு படிமேலே போய் பஞ்சாங்கத்தில் நிலவையும் சூரியனுக்கு இணையான சக்தி என்று எழுதிவைத்துள்ளனர்.
அதைவிட பாம்பு தலை - ராகு என்னும் கிரகமாகவும், அந்தப் பாம்பின் உடம்பு கேது என்ற கிரகமாகவும், சனியைச் சுற்றி வருவதாகவும், அதுவும் அந்தப் பாம்புகள் பூமியை சூரியனை நிலவை அவ்வப்போது விழுங்கும் என்று எல்லாம் எழுதி வைத்துள்ளனர். இந்தப் பஞ்சாங்கத்தை வைத்து காகித ராக்கெட் கூட விடமுடியாது என்பது மாதவனுக்கும் தெரியும். இருப்பினும் அவர் வாயால் சொல்கிறார் என்றால் மக்களை மீண்டும் பஞ்சாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து அதை வைத்துப் பிழைக்கும் கூட்டத்திற்கு வருவாய் சேர்க்கப் பார்க்கிறார்.
மாதவனின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்துப் பேசிய இஸ்ரோ மேனாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, "விண்வெளி பயணங்களுக்குப் பஞ்சாங்கத்தை உலகளவில் பயன்படுத்தினார்கள். ஒரு காலத்தில் இங்கிருந்து பார்ப்பதற்காக ஆர்யபட்டாவிலிருந்து அந்த ஏற்பாட்டைச் செய்தார்கள். ஆனால், பஞ்சாங்கம் என்பது ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய ஒன்று கிடையாது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய்க் கிரகம் செல்வது என்பது முடியாத காரியம். அது முதலில் சரியாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்தந்த நேரத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் இடங்களை கணித்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ப உலகளவில் எங்களுக்கு என்று இருக்கக்கூடிய பஞ்சாங்கம் மாறுதல் அடைகிறது. அந்த மாறுதலுக்கு ஏற்பதான் புதிதாக உருவாக்கப்பட்ட 'அர்பனாக்' என்ற பஞ்சாங்கத்தை வைத்துதான் சிறீஹரிகோட்டாவிலிருந்து பயணத்தைத் தொடங்க வேண்டும். எந்த நேரத்திலிருந்து ஆனால், எவ்வளவு வேகத்தில் எப்படி சென்றால் இலக்கை அடைவோம் என்பதை தற்போது அறிவியல்பூர்வமாக கோள்கள் இருக்கக்கூடிய இடங்கள், கோள்களின் பயணங்கள், நாம் பூமியில் இருக்கக்கூடிய இடம், நாம் அனுப்பக்கூடிய பி.எஸ்.எல்.வி. எப்படி போகும்? சந்திரயான் எப்படி போகும்? என அனைத்தையும் கணித்து பல ஆய்வுக்கு பிறகுதான் நேரம் கணிக்கப்படுகிறது. பஞ்சாங்கத்தைப் பார்த்து நேரம் குறிக்கப்படுவது கிடையாது. கோள்களின் நகர்வுகளை பார்த்தே நேரம் குறிக்கப்படுகிறது." என்றார்.
ஆனால் நடிகர் மாதவனின் பஞ்சாங்கத்தை பார்த்து ராக்கெட் அனுப்பினார்கள் என்ற செய்தியை மிகவும் விரைவாக அனைத்து நாளிதழ்களும் வெளியிட்டவேகத்திற்கு மயில் சாமியின் லிஞ்ஞான விளக்கத்திற்கு வேகம் காட்டவில்லை என்பது வேதனையான ஒன்று.
பார்ப்பனியம் அங்கு இங்கு எனாதபடி எங்கும் தன் அற்பப் புத்தியைக் காட்டிக் கொண்டு தான் இருக்கும் என்பதற்கு இதுவும் ஒன்றே!
No comments:
Post a Comment